PUBLISHED ON : நவ 11, 2019

நேரடியாகவோ அல்லது சமைத்தோ உண்ணப்படும் ஓர் உணவுப்பொருள் வேர்க்கடலை. 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, பெரு நாட்டுக் கல்லறையில் வேர்க்கடலை இருந்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், வணிக ரீதியில் விர்ஜீனியா, வேலன்சியா, பெருவியன் ரன்னர், ஸ்பானிஷ் ஆகிய நான்கு வித வேர்க்கடலை வகைகள் புழக்கத்தில் உள்ளன.
அதிலும், தென்னிந்தியாவில் தான் முதன்முதலில் வேர்க்கடலை பயிரிடப்பட்டது. அதன் பிறகு குஜராத்திற்கு அறிமுகமான இது, மெல்லமெல்ல மற்ற மாநிலங்களுக்கும் பரவியது.
அளவில் பெரியதாக இருக்கும் பிரேசிலியன் வேர்க்கடலை ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. அளவில் சிறியதாக இருக்கும் பெரு நாட்டைச் சேர்ந்த வேர்க்கடலை, மணிலா மற்றும் சீனா வழியாக இந்தியாவுக்கு அறிமுகமானது.
1850-ஆம் ஆண்டு இந்தியாவில் ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு மட்டுமே வேர்க்கடலை பயிரிடப்பட்டிருந்தது. ஆனால், 1895-ஆம் ஆண்டு, வேர்க்கடலை பயிரிடப்படும் அளவு 70 மடங்கு அதிகரித்தது. 1910ஆ-ம் ஆண்டு 2.5 லட்சம் டன் வேர்க்கடலை பயிரிடப்பட்டது. அதற்கு அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பயிரிடப்படும் வேர்க்கடலையின் அளவு ஆறு மடங்காக அதிகரித்தது.
கடலை எண்ணெய் தயாரிப்பதற்காகவே பெரும்பாலும் வேர்க்கடலை பயிரிடப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் எண்ணெய் வகைகளில் கடலை எண்ணெய்தான், பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.
இது தவிர, பயிரிடப்படும் வேர்க்கடலையின் அளவில் 10-இல் ஒரு பங்கு கடலையாகவே பயன்படுகிறது.
- காரா
