PUBLISHED ON : நவ 11, 2019

லட்டுவிற்கும் நமக்குமான பந்தம் பல நூறாண்டுகள் பழமையானது. இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு உணவுப் பொருட்களைக் கொண்டு விதவிதமான லட்டு தயாரிக்கப்படுகிறது.
ஆனால், உருண்டையாக, இனிப்புச் சுவையுடன் இருக்கும் ஒரு வகை என்கிற அடையாளத்தை மட்டும் லட்டு இன்றளவும் இழக்கவில்லை.
மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ள இந்தியர்களின் தேர்வு, லட்டு. திருமணம், குழந்தை பிறப்பு, புதிதாக வாகனங்கள் வாங்குவது, அலுவலகத்தில் பதவி உயர்வு என்று எல்லா நல்ல நிகழ்ச்சிகளிலும் லட்டுவுக்கு மிக முக்கிய இடமுண்டு. மோதிச்சூர் லட்டு, ரவா லட்டு, கடலை மாவு லட்டு, எள்ளு லட்டு, உலர்பழ லட்டு என்று லட்டில் எண்ணற்ற வகைகள் உள்ளன.
அந்தக் காலத்தில் லட்டு ஒரு மருந்துப் பொருளாம். அட!
பதின்பருவப் பெண்களின் ஹார்மோன் செயற்பாடுகள் சீராக இருக்க, குறிப்பிட்ட மருந்துப் பொருட்களால் செய்யப்பட்ட லட்டு கொடுக்கப்பட்டது.
வெந்தயம், தாமரை விதைகள், சுக்கு போன்ற மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தி, அப்போதெல்லாம் லட்டு தயாரிக்கப்பட்டது.
ஆயுர்வேத மருத்துவச் செய்முறைகள் பற்றிய குறிப்புகளே லட்டின் செய்முறை விளக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணரான சுஸ்ருதா, லட்டைச் சிறந்த ஆன்டிசெப்டிக் மருந்தாகப் பயன்படுத்தினார் என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட தன் நோயாளிகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க, எள், வெல்லம், வேர்க்கடலை ஆகியவற்றைக் கொண்டு லட்டு தயாரித்து சுஸ்ருதா வழங்கியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
லட்டுக்குப் பெயர்பெற்ற ஆன்மிக நகரம் திருப்பதி. இங்குள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் சன்னதியில் முன்னூறு ஆண்டுகளாக லட்டு, பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்தானம் லட்டு, கல்யானோத்சவம் லட்டு, பரோக்தம் லட்டு ஆகிய மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. திருப்பதி லட்டின் தொன்மை, தனித்துவம் காரணமாக இதற்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது.
- கொக்கோ
