PUBLISHED ON : பிப் 18, 2019

சாந்தி ஸ்வரூப் பட்நாகர்
21.2.1894 - 1.1.1955
பேரா, பஞ்சாப் (இன்றைய பாகிஸ்தான்)
அறிவியல் துறைகளில் (வேதியியல், உயிரியல் உள்ளிட்டவை) சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்குச் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுப் பணிகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கௌன்சில் மேற்கொள்கிறது.
சாந்தி ஸ்வரூப் பட்நாகர், பள்ளிக் கல்வியை செகந்தராபாத்தில் முடித்தார். லாகூர் கல்லூரியில் இளங்கலை (இயற்பியல்) மற்றும் முதுகலை (வேதியியல்) பட்டமும் பெற்றார். பிறகு லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் பட்டம் பெற்று, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியர் ஆனார். வேதியியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, காந்தப் பண்புகளை அளவிடும் கருவியைச் சக விஞ்ஞானி கே.என்.மாத்தூருடன் இணைந்து கண்டறிந்தார். மேலும், இருவரும் இணைந்து எழுதிய பிசிகல் பிரின்சிபல்ஸ் & அப்ளிகேஷன்ஸ் ஆஃப் மேக்னட்டோ கெமிஸ்ட்ரி (Physical Principles and Applications of Magneto chemistry) நூல், முக்கிய நூல்களில் ஒன்று.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி வாரியம், பட்நாகரின் முயற்சியால்தான் தில்லியில் தொடங்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்றதும் சி.எஸ்.ஐ.ஆர். (CSIR) அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரைக் கௌரவிக்க, 1955இல் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்துறையை இணைத்து, இந்திய அறிவியல் தொழிலக ஆய்வகங்களை உருவாக்கிய தந்தையாக இருக்கிறார் சாந்தி ஸ்வரூப் பட்நாகர்!
