PUBLISHED ON : பிப் 06, 2017

இராஜாஜி
காலம் :1878 - 1972
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் புகழ்பெற்றவர் இராஜாஜி. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்பது அவரது முழுப்பெயர். அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்த ஓசூருக்கு அருகே தொரப்பள்ளி என்ற சிற்றூரில் பிறந்தார். பெங்களூருவிலும் சென்னை மாகாணக் (பிரசிடென்சி) கல்லூரியிலும் அவருடைய கல்வி அமைந்தது. புகழ்பெற்ற வழக்கறிஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். 1917ல் சேலம் நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு நகரத் தந்தையாகவும் (மேயர்) ஆனார். சேலத்திலிருந்து தொடங்கிய இராஜாஜியின் அரசியலும் நிர்வாகத்திறமும், அகில இந்திய அளவில் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தது.
தமிழகத்தின் முன்னோடி சுதந்திரப் போராட்ட வீரர்களில் இராஜாஜி முக்கியமானவர். காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டு தண்டி யாத்திரை சென்றார். அந்நேரத்தில் தமிழ்நாட்டில் இராஜாஜி வேதாரண்யத்தில் உப்புக் காய்ச்சினார். சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இராஜாஜி சிறையிலும் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கம், ரௌலட் சட்டத்திற்கு எதிரான இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் இராஜாஜி முனைந்து ஈடுபட்டார்.
அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937 முதல் 1939 வரை பதவி வகித்தார். காங்கிரசுக்கும் முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்குக்கும் இடையில் ஒற்றுமை தோன்றாத காலகட்டங்களில் இராஜாஜியின் அரசியல் நுண்ணறிவு இருதரப்புக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தது.
பிற்காலத்தில் நேருவோடு பிணக்கு ஏற்பட்டதால் சுதந்திரா கட்சி என்று தனி அரசியல் கட்சியை இராஜாஜி தொடங்கினார். சுதந்திரா கட்சி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து 1967- சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அக்கூட்டணிதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத அரசு தோன்றக் காரணமாயிற்று. பெரியார் ஈ.வெ.ரா.வுடன் இராஜாஜிக்குத் தொடக்கம் முதலே நல்ல நட்பு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னமைந்த தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராகவும் இராஜாஜி பணியாற்றினார்.
இராஜாஜியின் மகள் இலட்சுமியை காந்தியடிகளின் மகன்களில் ஒருவரான தேவதாஸ் காந்தி திருமணம் செய்துகொண்டார். காந்தியடிகளின் வாரிசு என்று யார் அறிவிக்கப்படலாம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் வினா எழுந்தது. இராஜாஜியையோ, நேருவையோ காந்தியடிகள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காந்தியடிகள் நேருவைத் தன் அரசியல் வாரிசாகவும், இராஜாஜியைத் 'தன் மனசாட்சியின் காவலர்' என்றும் அறிவித்தார்.
'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற பாடலை எழுதியவர் இராஜாஜிதான். இராமாயணத்தைச் 'சக்கரவர்த்தித் திருமகன்' என்ற பெயரிலும் மகாபாரதத்தை 'வியாசர் விருந்து' என்ற பெயரிலும், தமிழில் எழுதினார்.
எழுதிய நூல்கள் :
* சக்கரவர்த்தித் திருமகன்
* வியாசர் விருந்து
* பஜகோவிந்தம்
* கைவிளக்கு
* திருமூலர் தவமொழி
* ஆற்றின் மோகம்
* வள்ளுவர் வாசகம்
- தமிழ்மலை

