PUBLISHED ON : பிப் 06, 2017

போரில் இறந்த வீரர்களைப் போற்றும் வகையில், நடுகல் நடப்படும் பழக்கம் தமிழ் மரபில் இருந்துள்ளது. நடுகல் என்றால் எதிரிலோ, பக்கத்திலோ உள்ள கல்லை எடுத்து வந்து நடுவது அல்ல. அதற்கு ஐந்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அந்த ஐந்தையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், வாழ்த்து என்ற ஐந்துதான் அவை.
'காட்சி': மலைக்குச் சென்று தகுந்த கல்லை தேர்ந்தெடுப்பது.
'கல்கோள்' : தேர்ந்தெடுத்த கல்லைக் கொண்டு வருவது.
'நீர்ப்படை' : கொண்டு வந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும் அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது.
'நடுதல்' : கல்லை உரிய இடத்தில் நட்டு அதற்கு மயிற்பீலிகளையும், மாலைகளையும் சூட்டிச் சிறப்புச் செய்வது.
'வாழ்த்து': யாருக்காக கல் நடப்பட்டதோ, அந்த வீரனுடைய திறனையும், புகழையும் வாழ்த்திப் பாடுவது.
கல் நடும் விழாவிற்கு வீரர்கள் மட்டும் அல்லாமல், பொதுமக்களும் வந்து மரியாதை செலுத்துவார்கள்.
நடுகல் நடும் பழக்கம் நம் நாட்டில் மட்டும் அல்ல, வேறுசில நாடுகளிலும் இருந்துள்ளது. தமிழகத்தில் வீரர்களுக்கு நடுகல் நடும் பழக்கத்தைச் சங்கப் பாடல்கள் வழியாக அறியமுடிகிறது.
போரில் இறந்த ஒரு வீரனுக்கு நடுகல் நட்டதை ஆவூர் மூலங்கிழார் (புறநானூறு 261ம் பாடல்) குறிப்பிட்டிருக்கிறார்.
'வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்'
இறந்த வீரனின் வீட்டு முற்றம், நீரற்ற ஆற்றிலே கிடக்கும் ஓடம் போல், பொலிவிழந்து கிடப்பதாகக் குறிப்பிடுகிறார்.
'அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
இனி நட்டனரே கல்லும்' (புறம் 264)
என்ற வரிகளில், நடுகல்லிற்கு மயில்தோகையும், பூமாலையும் அணிவித்து அழகுபடுத்தியதை அறிய முடிகிறது.
தகடூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் அதியமான் அஞ்சி. சேர அரசன் பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் மீது போர் எடுத்து வந்தான். போரில் அதியமான் அஞ்சிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயத்திற்கு மருந்திடாது, தோற்றதற்காக வருந்திய அதியமான், சில நாட்களில் இறந்து போனான். அஞ்சியின் நண்பர் ஔவையார், மனம் வருந்தி அதியமானுக்கு கையறுநிலையில் பாடல் எழுதினார்.
இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ
நாட்டையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாதவன் அஞ்சி. அவனுக்காக நடுகல்லை நட்டு, அதற்கு மயிற்பீலி சூட்டி அழகு படுத்தி, மதுவும் படைக்கின்றனர். அதை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான்? அவனில்லாமல் காலை, மாலையில்லை. அஞ்சியற்ற என் வாழ்நாளும், இனி மறையட்டும் என்று அழுது அரற்றுகிறார்.
வேங்கை மரத்து பூக்களையும் பனங்குருத்தையும் மாலையாகக் கட்டி, நடுகல்லுக்குச் சாத்தும் வழக்கமும் இருந்திருக்கிறது.
'ஓங்குநிலை வேங்கை ஒளிணர் நறுவீப்
போந்தை அம்தோட்டின் புனைந்தனர் தொடுத்து
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்ஆயினையே கடுமான் தோன்றல்'(புறம் 265)
வேங்கைப் பூவை பனையோலையால் (போந்தை) அழகாகத் தொடுத்து, சாற்றும்படியாக நீ கல்லாகி விட்டாயே என்று ஒரு வீரைனைப் பற்றி, குறிப்பிடுகிறது இந்தப் பாடல்.
ஆநிரைகளை கவர்ந்து செல்லும் பகைவரிடமிருந்து போரிட்டு மீட்ட வீரன், பகைவரின் அம்பு தைத்து இறந்துவிடுகிறான். அவனுக்கு நடுகல் நடுகிறார்கள் ஊர் மக்கள். அலங்கரிப்பதோடு, அந்தக் கல்லுக்கு சித்திரம் வரைந்த துணியால் பந்தல் அமைத்து சிறப்புச் செய்திருக்கிறார்கள் (புறம்:260 'படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே').
நடுகல்லிற்கு ஆண்டுதோறும் உறவினர்கள் எண்ணெய் பூசி, மலர் மாலை அணிவித்து பூசை செய்தார்கள் (புறம்:329). நறுமணப்புகை மூட்டினார்கள்.
'புடைநடுகல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்ந்நறைகொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்'
நடுகல்லை கழுவி நெய் விளக்கேற்றி, நறுமணப்புகை போடுவார்கள். அந்தப் புகை மூட்டம், மேகம் போல் எழுந்து தெருவெல்லாம் மணத்தது என்கிறது, இந்தப் பாடல்.
நடுகற்கள் கருங்கற்களால் ஆனது. பழமையான நடுகற்கள் மீது, செடிகொடிகளும் படர்ந்து வளர்ந்திருக்கின்றன.
உப்பு விற்கும் உமணர்களின் வண்டிச் சக்கரங்கள் நடுகற்களில் உராய்ந்த காரணத்தால், கற்களில் உள்ள சில எழுத்துகள் மறைந்து, கற்கள் முழுமையான பொருள் தரமுடியாமல் போயின என்பதையும் பல பாடல்கள் உணர்த்துகின்றன.
தமிழ் பாடமல்ல, அது வரலாறு என்பதை, இந்த சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன அல்லவா!

