
ஜாகிர் உசேன்
காலம்: 8.2.1897 - 3.5.1969
பிறந்த இடம்: ஹைதராபாத், ஆந்திரம்
சிறப்பு: இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர்
மாணவர்கள் தூய்மையாக இருக்க வேண்டுமென அடிக்கடி வலியுறுத்தி வந்தார் டில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். அதன்பிறகும் மாணவர்கள் அழுக்கு காலணியுடன் வகுப்புக்கு வருவது தொடர்ந்தது. அதைப் பார்த்த அவர், மாணவர்களிடம், 'காலைக் காட்டுங்கள். உங்கள் காலணிகளை நான் சுத்தம் செய்கிறேன்' என்றார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள், 'இனி அழுக்கு காலணியுடன் வர மாட்டோம்' என அவரிடம் உறுதியேற்றனர். இப்படிச் செய்தவர் இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவராகவும் சிறந்த கல்வியாளருமாகத் திகழ்ந்த ஜாகிர் உசேன்!
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, 'ஆதாரக் கல்விமுறை' மிகவும் பிடித்ததால் காந்தியடிகளின் ஆதரவாளராக மாறினார்.
ஜெர்மனி, பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்று 1927ல் இந்தியா திரும்பினார். அப்போது, மூடப்படும் நிலையில் இருந்த தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்குத் தலைமை ஏற்று 20 ஆண்டுகள் பணியாற்றினார். காந்தியடிகள் வலியுறுத்திய கல்வித் திட்டத்தை சோதனை முறையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார். காந்தியடிகளின் மூலமாக இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்று, கல்வி சீர்திருத்தத்துக்காகவும் பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.
இந்தி, உருது, ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். கல்வி வளர்ச்சி குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவின் 'ரிபப்ளிக்' நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
விருதுகளும் சிறப்புகளும்:
1954 - பத்ம விபூஷண் விருது
1962 - குடியரசு துணைத் தலைவர்
1963 - பாரத ரத்னா விருது
1967 - இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர்