
பிப்ரவரி 6, 1975 - ஆர்குட் புயுக்கோக்டன் பிறந்த நாள்
2009 வரை பிரபலமான சமூக வலைதளமாக 'ஆர்குட்' இருந்தது. இதைத் தொடங்கியவர் துருக்கி நாட்டு மென்பொறியாளர் ஆர்குட் புயுக்கோக்டன். இவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டது. 2004 ஜனவரி 22ல் கூகுள் நிறுவனத்தால் ஆர்குட் தொடங்கி வைக்கப்பட்டது.
பிப்ரவரி 7, 1812 - சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்த நாள்
புகழ் பெற்ற ஆங்கில புதின எழுத்தாளர். தொடர்கதை பாணியைப் பிரபலப்படுத்தி வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுதினார். எழுதிச் சம்பாதித்த பெரும் பணத்தை, நலிவுற்ற பெண்களுக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கும் செலவு செய்தார்.
பிப்ரவரி 7, 1877 - ஜி. எச். ஹார்டி பிறந்த நாள்
இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். இந்தியவின் ராமானுஜனை கணித உலகுக்கு அறிமுகம் செய்தார். இவர்கள் இருவரும் எழுதிய 'ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்' சூத்திரம் மிக முக்கியமானது.
பிப்ரவரி 8, 1834 - டிமிட்ரி மென்டெலீவ் பிறந்த நாள்
'கனிம அட்டவணையின் தந்தை'. வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக் கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளையும் வரையறுத்து சாதனை படைத்தார்.
பிப்ரவரி 11, 1847 - தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள்
அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். தன் வாழ் நாளில் 1,300 விஷயங்களைக் கண்டறிந்து, 1093 கண்டு பிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார். இதில் ஆச்சரியம் என்னவெனில், அறிவியல், கணிதம் என்று எதையும் இவர் முறையாகக் கற்கவில்லை.
பிப்ரவரி 12, 1809 - ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்
1860ல் அமெரிக்காவின் 16வது அதிபர். அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து, இனவெறிக் கொடுமையை ஒழித்தார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863ல் வெளியிட்டார்.
பிப்ரவரி 12, 1809 - சார்லஸ் டார்வின் பிறந்த நாள்
ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தார். 1859ல் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். உயிரினங்கள் தொடர்பாக அதுவரை இருந்த சிந்தனைகளை, புதிய கோணத்தில் மாற்றிஅமைத்தார்.