PUBLISHED ON : பிப் 06, 2017

ஐம்பெரும் காப்பியங்களில், 'சிலப்பதிகாரம்'-கண்ணகி, கோவலன், மாதவி கதையைக் கூறுகிறது. 'மணிமேகலை' மாதவிக்கும், கோவலனுக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணைப் பற்றியும் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், பிறகு புத்தத் துறவியாவது குறித்து குறிப்பிடுகிறது. இது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது. மீதி உள்ள மூன்று காப்பியங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
வளையாபதி
இந்நூலில் மொத்தம் எழுபத்தி இரண்டு பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. நூல் எழுதிய ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. பாடல்கள் வழியாக அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் அறிய முடிகிறது.
கிடைத்துள்ள வளையாபதிச் செய்யுட்களை வைத்துப் பார்த்தால், அவற்றில் பாதியளவு, உலகவாழ்வை மறுத்து, துறவறத்தைப் போற்றுகிறது; பெண்களின்மேல் வெறுப்பைக் காட்டுகிறது. கற்பைப் போற்றுகிறது. பல செய்யுட்கள் திருக்குறளை நினைவுபடுத்துகின்றன. அவற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம்.
'தொழுமக னாயினுந் துற்றுடை யானைப்
பழுமரஞ் சூழ்ந்து பறவையிற் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற்
பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப'.
கீழ்மகனாக இருந்தாலும், பழமரத்தை பறவைகள் சூழ்வதைப் போல், பொருளுடையானை, உலக மக்கள் வந்து சூழ்ந்துகொள்வார்கள். வீழ்ந்த பழமரத்தை பறவைகள் விட்டுப் பிரிந்து செல்வதைப் போல், செல்வம் அற்று நற்குணம் நிறைந்தவர்களாக இருந்தாலும், அவர்களை விட்டு உலக மக்கள் பிரிந்து செல்வார்கள். 'குணத்தில் கெட்டவனாக இருந்தாலும், பொருளுடையவனை உலக மக்கள் சூழ்ந்துகொள்வர். மேன்மக்களாயினும் வறியராயின் அணுகாது விலகிப் போவர்' என்பதே இதன் மையக் கருத்து.
குண்டலகேசி
குண்டலகேசியில் மொத்தம் 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதன் ஆசிரியர் நாதகுத்தனார். நாதகுப்தனார் என்பதே மருவி நாதகுத்தனார் ஆனார் என்று சொல்லப்படுகிறது. குண்டலகேசி பற்றிய குறிப்புகளை 'நீலகேசி' போன்ற நூல்களின் மேற்கோள்களில் இருந்தும் அறிய முடிகிறது.
குண்டலகேசி நூலும் புத்த மத கருத்துகள் நிறைந்தது. குண்டலகேசி என்பதற்கு, சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள். அவளின் உண்மையான பெயர், பத்திரை. இராச கிருக நாட்டின் அமைச்சரின் மகள். ஒரு திருடனை அவள் மணக்க நேரிடுகிறது. இவள் ஒரு நாள் விளையாட்டாக அவனிடம் ஒரு வார்த்தை சொல்ல, அதை குற்றமாகக் கருதிய அவன், அவளை எதிரியாக பாவிக்கிறான். பின்னர் அவள் வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்திக்கிறாள். அதிலிருந்து விலகி சமண சமயத்தை ஏற்கிறாள். பிறகு, புத்தரின் மாணவர் சாரிபுத்தரை அவள் சந்திக்க, அவள் சமண மதத்தை விட்டு பௌத்த துறவியாகிறாள். பெளத்தம் உயர்ந்தது என்பதற்காக எழுத்தப்பட்ட காப்பியம்.
சீவக சிந்தாமணி
முழுமையாக கிடைத்த காப்பிய நூல். பிற்காலத்தில் எழுதப்பட்ட கம்பராமாயணத்துக்கு இதுவே முன்னோடி என்று சொல்லப்படுகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர். இவர் சோழ அரச குலத்தைச் சேர்ந்தவர். சமண சமய சார்புடையவர். திருத்தக்க தேவரை, 'தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்' என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். திருத்தக்க தேவர் இந்நூலுக்கு 'சிந்தாமணியின் சரிதம்' என்றுதான் பெயர் வைத்தார்.
சீவகன் என்பவனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால், சீவக சிந்தாமணி என்று இந்நூல் பெயர் பெற்றது. சீவக சிந்தாமணி மொத்தம் 3,145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம்.
சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டதாக, இந்நூல் விளங்குகிறது. இந்நூலுக்கு மண நூல் என்றொரு பெயருண்டு.
ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம். அதன் அரசன் சச்சந்தன். அவன் மனைவி விசயை. ஆட்சியில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறான் அரசன். சூழ்ச்சியால் அமைச்சன் கட்டியங்காரன், அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக்கொள்கிறான். விசையை தப்பித்துச் செல்கிறாள். கருவுற்றிருந்த அவளுக்கு, சீவகன் பிறக்கிறான். அவன் ஒரு வணிகனின் பராமரிப்பில் வளர்கிறான். அந்த வணிகனுக்கு நான்கு பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஐவரும், அச்சணந்தி என்ற ஆசிரியரிடம் வித்தைகளைக் கற்கிறார்கள். அவர், சீவகன் தந்தை சச்சந்தன் என்பதை அவனுக்குத் தெரிவித்து, கட்டியங்காரனை வெல்லும் வழிவகைகளைச் சொல்கிறார். நாட்டை வென்ற சீவகன், குரங்கிடமிருந்து ஒரு வேடன் பழங்களைப் பிடுங்கிச் செல்வதைப் பார்த்து, உலகம் நிலையாமை என்பதை உணர்கிறான். தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, தவம் செய்ய சென்றுவிடுகிறான்.