PUBLISHED ON : பிப் 06, 2017

அரண்மனைகளைப் பார்ப்பதே பெரிய பிரமிப்பு தான். அங்கே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் மன்னர்களின் உடைகள், ஆட்சிமுறை விவரங்கள், போர்க் கருவிகள் என பலவற்றையும் நேரடியாகப் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அப்படி வரலாற்றை தெரிந்துகொள்ளும்போது உணவை மட்டும் விட்டுவிடலாமா என்ன?
அரண்மனையில் என்ன மாதிரியான உணவு வகைகள் தயாரிக்கப்படும், யார் யார் சமைப்பார்கள்?
மைசூருவில் 'அம்பா பேலஸ்' அரண்மனையைப் பார்த்து முடித்ததும், மன்னர்கள் நன்றாக சாப்பிட்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நினைப்பே ஏற்படும்.
மைசூரு மன்னர்கள் பலரும், உணவு பிரியர்களாக இருந்தார்களாம். அதிலும் குறிப்பாக மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் உணவை விரும்பியது மட்டுமல்லாமல், அதை தயார் செய்பவர்களை பாராட்டவும் செய்வாராம். அப்படித்தான் காகசுரா மாதப்பா மேல் அதிக அன்பு காட்டினார் மைசூரு மன்னர். ஏனெனில், அவர்தான் அந்த அரண்மனையின் தலைமை சமையற்காரர்.
அரண்மனையில் இலக்கியம், போர், வீரம் பற்றி மட்டுமே எப்போதும் மன்னர்கள் பேசியிருக்க மாட்டார்கள். நிச்சயம் அவர்களும் உணவிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்தானே? அவர்களின் ஆதரவினால் தான் பல புதிய உணவுப்பண்டங்கள் தோன்றியிருக்கவும் வேண்டும். நம் எண்ணத்தை உணர்ந்துகொண்டவர் போல், விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் அங்கு நாம் சந்தித்த ஓர் உணவு நிபுணர்.
அப்படி மற்றொரு புகழ்பெற்ற சமையல் கலைஞரான மாதப்பாவை பற்றி தெரிந்துகொள்ள முயற்சித்தேன்.
மைசூர் அரண்மனையில் மாதப்பாவின் உணவைச் சாப்பிடாதவர்கள் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. நால்வடி கிருஷ்ணராஜா நல்ல உணவை விரும்பிச் சாப்பிடுவார் என்பதால், மாதப்பா அவருக்குப் பிடித்த மாதிரியான புதுப்புது உணவு வகைகளை சமைத்து அவருடைய பாராட்டைப் பெறுவார்.
அப்படி தினம் தினம் மைசூர் அரண்மனையில் மாதப்பாவின் கைகள் பல அற்புதங்களை செய்திருக்கின்றன.
ஒருநாள் மாதப்பாவிற்குப் புதிதாக ஒரு இனிப்புப் பண்டத்தைச் செய்துபார்க்கலாம் எனத் தோன்றியிருக்கிறது. ஆனால், உணவு நேரம் நெருங்கிக்கொண்டு இருந்ததால், குறைந்தநேரத்தில் எதையாவது செய்யலாம் என நினைத்தார்.
அவர் கண் முன்னால் இருந்தவை கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகிய மூன்று பொருட்கள்தான். குறைந்தநேரத்தில் இனிப்பை தயார் செய்தார். மன்னர் சாப்பிட வந்தார். அன்றைய நாளின் வழக்கமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கடைசியாக புதிய இனிப்பை மன்னரின் இலையில் பரிமாறினார். மன்னர் என்ன சொல்வாரோ என காத்திருந்தார். நெய் மணம் மூக்கைத் துளைத்தது. இனிப்பு நாவில் கரைந்த விநாடி மன்னரும் கரைந்தார். மன்னர் இனிப்பின் பெயரைக் கேட்ட நொடியில், சட்டென 'மைசூர் பாகா' என்றார் மாதாப்பா. கன்னட மொழியில் 'பாகா' என்றார் சக்கரைப் பாகு என்று பொருள். அதில் ஊரையும் சேர்த்துக்கொண்டு, 'மைசூர் பாகா' என்று பெயர் வைத்தார்.
அந்த இனிப்பின் செய்முறையை ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டார் மன்னர். அதைத் தொடர்ந்து, அரண்மனையில் அடிக்கடி மைசூர் பாகா இனிப்பு செய்யப்பட்டது. அரண்மனைக்கு வரும் விருந்தினர்களுக்கு அந்த இனிப்பு வழங்கப்பட்டது. மைசூர் பாகா புகழ் பரவியது. பலருக்கும் மைசூர் பாகா செய்ய கற்றுக்கொடுத்தார் மாதப்பா. ஆனாலும் இதை முதன் முதலில் செய்தவர் கையால் செய்தது போல் வருமா?
அரண்மனையில் மன்னர்கள் மட்டும் சுவைத்து வந்த அந்த அபூர்வ இனிப்பை, மாதப்பாவின் கைப்பக்குவத்திலேயே பலரும் சாப்பிட வேண்டும் என்று, நான்காம் கிருஷ்ணராஜாவின் மகனும், அவருக்கு அடுத்த மன்னருமான ஜெய சாமராஜேந்திர உடையார் விரும்பினார். அதையடுத்து மாதப்பாவிடம், அரண்மனை வாசலில் சிறிய கடை போட்டு மைசூர் பாகாவை விற்பனை செய்யலாம் என ஆலோசனை அளித்தார். அதைக் கேட்ட மாதப்பா மகிழ்ச்சியில் திகைத்து போனார். அதன் பிறகு 1957ல் மைசூர் அரண்மனைக்கு வெளியே சாயாஜி ராவ் சாலையில் நெய்மணம் வீச 'குரு ஸ்வீட்ஸ்' கடை உதயமானது. அந்த கடை மிகவும் பிரபலமடைந்து நான்காவது தலைமுறையை கடந்துள்ளது. அடுத்தமுறை மைசூருக்குப் போனால், மறக்காமல் மைசூர் பாகாவை ஒருபிடி பிடித்து, மாதாப்பாவை நினையுங்கள்.