PUBLISHED ON : ஆக 26, 2019

தோழமை
ஓவியாவுக்கும் எனக்கும் சின்ன மனக்கசப்பு. பருவத் தேர்வு நெருங்கும்வேளையில், ஏதேனும் ஒரு நோட்டுப் புத்தகம் காணாமல் போய்விடும். அஜாக்கிரதையா, ஞாபகமறதியா என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். விடை தெரிந்ததில்லை. ஆனால், தேர்வுகள் முடிந்த பின்னர், புத்தகம் கிடைத்துவிடும். இம்முறை பிரச்னை எனக்கு ஏற்படவில்லை. ஓவியாவுக்கு.
அவளது தமிழ் நோட்டைக் காணவில்லை. தவித்துப் போய்விட்டாள். கடைசிநேரத்தில் என்னிடமும் வேறு சில நண்பர்களிடமும் கேட்டாள். நான் தேர்வுக்குப் படிக்கவேண்டும் என்பதற்காக புத்தகத்தைத் தரவில்லை. ஓவியாவின் முகம் கருத்துவிட்டது. எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அப்போது நான் பேசிய சில வார்த்தைகள், அவளுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது.
நான் என்ன செய்யமுடியும்? புத்தகம் இல்லாமல் நான் எப்படிப் படிக்கமுடியும்? இதில் வருத்தப்பட்டு என்ன பயன்? ஒருமாதிரி சிரமப்பட்டு, அவள் அங்கே இங்கே பாடங்களைத் திரட்டி பருவத் தேர்வுகளை எழுதிவிட்டாள். ஆனால், அப்போதிலிருந்து என்னோடு அதிகம் பேசுவதில்லை. வழக்கம்போல், இந்த விஷயமும் உமா மிஸ்ஸுக்குத் தெரிந்துவிட்டது.
“அந்தப் பக்கங்களை மட்டுமாவது, போட்டோகாப்பி எடுத்துக் கொடுத்திருக்கலாமே, கதிர்?”
எனக்கு சட்டென்று இந்த உத்தி தோன்றவில்லை. அவ்வளவு ஏன், பக்கங்களைப் புகைப்படங்கள் எடுத்து, ஓவியாவுக்கு அனுப்பிவைத்திருக்கலாம். அவள் அவற்றை அச்செடுத்துப் படித்திருக்கலாம். உமா மிஸ்ஸிடம் பேசும்போது, சரசரவென ஐடியாக்கள் கொட்டுகின்றன.
“தேவைப்படும்போது உதவறதுதான் தோழமை, கதிர். மத்தநேரம் எவ்வளவு சிரிச்சு, பேசி, ஜாலியா பழகினாலும், கஷ்டம்னு வரும்போது, கூட நிற்கணும். நிக்கி ஹாம்ப்லின், அபே டி அகஸ்டினோ கதை தெரியுமா?”
“யார் மிஸ் இவங்க?”
“2016இல, ரியோ டி ஜெனிரோவுல ஒலிம்பிக்ஸ் போட்டி நடந்துச்சு இல்லையா? அதுல 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல பங்கெடுத்துக்கிட்டவங்க.”
“இவங்க தான் முதல் பரிசு வாங்கினாங்களா?”
“முதல் பரிசு வாங்கினவங்கள கூட உலகம் மறந்துடுச்சு. ஆனால், இவங்க ரெண்டு பேரையும் இன்னும் கொண்டாடிக்கிட்டு இருக்கு. இன்னும் வருங்காலம் முழுக்க கொண்டாடவும் செய்யும்.”
“இவங்க என்ன பண்ணாங்க மிஸ்?”
“நிக்கி ஹாம்ப்லின் நியூசிலாந்து ஓட்டப்பந்தய வீரர். அபே அமெரிக்க வீரர். ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துக்கறதுங்கறதே மிகப் பெரிய சாதனை. அதுக்கு எவ்வளவு தடைகளைக் கடந்து, முன்னேறி அங்கே வந்திருக்கணும், தெரியுமா? அப்படி ரெண்டு பேரும் 2016 ரியோ ஒலிம்பிக்ஸுக்கு வந்தவங்க. 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் தொடங்குச்சு. எல்லோரும் ஓடத் தொடங்கினாங்க. ஒரு கட்டத்துல கூட்டமாக நெருக்கியடிச்சு ஓடவேண்டிய நிலைமை.
அப்போது, நிக்கி கால்தடுக்கி கீழே விழுந்தாங்க. அவங்க பின்னாடி ஓடிவந்த அபே, நிக்கி மேல மோதி கீழே விழுந்தாங்க. உடனே அபே எழுந்திரிச்சு, நிக்கி தோள்ல கைவெச்சு, “எழுந்துரு... இது ஒலிம்பிக்ஸ் போட்டி, ஓடி முடிக்கணும்”னு சொன்னாங்க. உடனே சுதாரிச்சுக்கிட்டு எழுந்தாங்க நிக்கி. ரெண்டு பேரும் திருப்பியும் ஓட ஆரம்பிச்சாங்க.
ஆனால், அபேக்கு கீழே விழுந்ததுல கால்ல நல்ல அடி. கொஞ்ச தூரம்கூட ஓடமுடியலை. அவங்க வலியில துடிச்சு போய் கீழே உட்கார்ந்துட்டாங்க. இப்போது நிக்கி, அவங்க பக்கத்துல நின்னு, அவங்களை எழுப்பி, உற்சாகம் கொடுத்து, அரவணைச்சுக்கிட்டு, ஓடறதுக்குத் தூண்டினாங்க.
இதெல்லாம் நடக்கறது எங்கே? ஓட்டப்பந்தய மைதானத்துல. இவங்க ரெண்டு பேரையும் பொருட்படுத்தாம, முன்னாடி ஓடிக்கிட்டு இருக்கறவங்க, ஓடிக்கிட்டே இருக்காங்க. ஆனால், உலகம், இவங்களோட தோழமையையும் கரிசனத்தையும் அன்பையும் தான் பார்த்துக்கிட்டே இருந்துச்சு.
அப்புறம், அபேவால ஓட முடியலை. நிக்கி மட்டும் ஓடி, அந்தப் போட்டியில பதினேழாவது நபரா இலக்கைத் தொட்டாங்க.
ஆனா, அவங்களோட சகோதரத்துவத்தை, அன்பை ஒலிம்பிக்ஸ் கமிட்டி பாராட்டுச்சு. நியாயமான விளையாட்டு ('ஃபேர் பிளே') விருது கொடுத்து அவங்களை கெளரவப்படுத்துச்சு.
கஷ்டம் எப்பவேணா வரும். அது வரும்போது, கூட நிற்கணும். என் எதிர்காலம், என் இலக்கு, என் சாதனை, என் வாழ்க்கைன்னு சுயநலத்தோட இருக்கிறது புத்திசாலித்தனமாகவும் யதார்த்தமாகவும் கருதப்படலாம். ஆனால், அது அல்ல உண்மையான தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உடனடியாக உதவறதுக்கு நீள்கிற கைதான், நம்பிக்கை. அதைத்தான் நாம் தரணும்.”
உமா மிஸ் சொல்லச் சொல்ல, என் தவறு புரிந்தது. நானும் படித்து, ஓவியாவும் படிப்பதற்கு உதவியிருக்கலாமே என்ற எண்ணம் மேலோங்கியது. இனி இந்தத் தவறைச் செய்யக்கூடாது என்று மனத்தில் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டேன்.
20 ஆண்டுகள் கழித்து, நானே கூகுள் செய்து பார்த்தாலும் இந்தச் சம்பவம் தான் மீண்டும் மீண்டும் வரும். இங்கே ஓடுவது என்பது மிகவும் சிறிய விஷயம். எனக்கும் அபேவுக்கும் இடையே நடந்ததைப் பார்க்கும் போது அது ஓட்டத்தைவிட மிக மிகப் பெரிய விஷயம். அதற்கான பார்வையாளர்களும் அதிகமாகவே இருப்பார்கள்.
- நிக்கி ஹாம்ப்லின்
