PUBLISHED ON : அக் 16, 2017

உலகளாவிய தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ள நிலையில், உயர்கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகிறது. மிகச் சில நாடுகளில் மட்டுமே, உயர் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், உயர்கல்வியை தாய்மொழியில் கற்பிப்பது சரியா என்று திருக்கழுக்குன்றம், சோகண்டி, லிட்டில் ஜாக்கி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் உரையாடினார்கள். உயர்கல்வியை ஆங்கிலத்தில் கற்பது, தாய்மொழியில் பயில்வது இரண்டுக்குமான சாதக பாதகங்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
க.ஸ்ரீமதி, 10ம் வகுப்பு
இப்போ எல்லாரும் ஆங்கில வழியில்தான் படிக்கணும்னு நினைக்கிறாங்க. தமிழ் மூலமா படிச்சா எல்லா இடத்துக்கும் வேலைக்குப் போக முடியுமான்னு தெரியல. அறிவியல், தொழில்நுட்பம், இயந்திரவியல், மின்னணுவியல் போன்ற பல பாடங்களை ஆங்கிலத்தில்தான் படிக்க முடியுது. தமிழில் படிச்சாலும், அதற்கான அறிவியல் கலைச்சொற்களை முதல்ல உருவாக்கணும். அப்படி உருவாக்கினாலும் அதற்கு இணையான சொற்களை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டியிருக்கும். அதனால உயர்கல்வியை ஆங்கிலத்தில் படிப்பதுதான் சரியானது.
ப.ரோஷிணி, 9ம் வகுப்பு
தமிழ்ல படிச்சா குறுகிய எல்லைக்குள்ளதான் வாய்ப்புக் கிடைக்கும். வேறு நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ வேலைக்காகவும், ஆய்வு மாணவராவும் போகணும்னா, அப்போ தமிழில் படிச்ச உயர்கல்வி பயன்படாது. இந்த நிலையில் உலகம் முழுக்கத் தொடர்புமொழியா அதிக அளவில பயன்பாட்டில் இருக்கற ஆங்கிலம்தான், உயர்கல்விக்குச் சிறந்த முறை. அதன் மூலம் உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கற வாய்ப்பு இருக்கு. தாய்மொழியை நல்லா கத்துக்கலாம். அதில் தவறில்லை. அதேசமயம், உயர்கல்வி, ஆய்வு போன்ற படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே பயனுள்ளதா இருக்கும்.
கு.சத்யா, 9ம் வகுப்பு
உயர்கல்வியை தமிழ்ல படிச்சா அதுக்கான ஆங்கில வார்த்தைகளை இணைச்சுதான் படிக்கணும். சீனாவுல தாய்மொழியிலதான் உயர்படிப்புகள் இருக்கு. அவங்க அதற்கான எல்லா வசதிகளையும் ஆரம்பத்துல இருந்தே உருவாக்கி இருக்காங்க. ஆனா உயர்கல்விக்கான பாடங்களைத் தாய்மொழியான தமிழில் கற்பதற்குத் தேவையான பாடத்திட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. அந்த கட்டமைப்பை உருவாக்கி, அதில் கவனம் செலுத்தணும். உயர்படிப்புகளைத் தமிழில் கற்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், கூடவே ஆங்கிலத்திலயும் அதை சேர்த்து கற்பதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான், தமிழகம் தவிர இதர இடங்களிலும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். தமிழ்ல மட்டுமே படிச்சா, வேறு மாநிலத்துக்குப் போனா எப்படி வேலை பார்க்க முடியும்? அதனால் தமிழில் பாடங்கள் படிச்சாலும் ஆங்கிலத்திலேயும் கத்துக்கணும்.
செ.முரளிதரன், 10ம் வகுப்பு
எல்லாருக்கும் எல்லா மொழியும் தெரியறதில்ல. அவங்கவங்க தாய்மொழியில் படிக்கணும்னு எல்லாரும் நினைச்சா அவங்க மாநிலத்திலதான் வேலை செய்ய முடியும். தற்போது உள்ள முறைப்படி ஆங்கிலத்தில் உயர்கல்வி இருப்பதால், எல்லா இடங்களுக்கும் போய் படிக்கவும் வேலைவாய்ப்புகளைத் தேடிக்கவும் முடியுது. ஆங்கிலம் உலகம் முழுக்க எல்லா இடத்திலயும் தெரிஞ்சிருக்கு. அதனால ஆங்கில வழிக்கல்வி மூலமா உயர்கல்வியைப் படிப்பதுதான் சிறப்பா இருக்கும்.
ச.மே.சுஜித், 9ம் வகுப்பு
நம்ம மொழியை நாமளே தாழ்த்திக்கறோம். நாம நம் மொழியிலேயே எல்லாத்தையும் கத்துக்கணும்னு நினைக்கணும். அதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கணும். ஆங்கிலத்தில் படிச்சு அதற்கான தமிழ் அர்த்தங்களைத் கத்துக்கிட்டாதான் பாடங்கள் எளிமையா புரியுது. அதற்கு பதிலா தமிழில் படிச்சு அதற்கான ஆங்கில வார்த்தைகளை தெரிஞ்சுக்கற முறையில பாடத்திட்டங்களை வடிவமைக்கணும். தமிழ், ஆங்கிலம் இரண்டிலேயும் உயர்கல்வியை படிக்கறதுபோல இருந்தா, எந்த இடத்துக்கும் வேலைக்குப் போகவும், ஆய்வுகள் செய்யவும் உதவியா இருக்கும்.
மு.சுமன், 10ம் வகுப்பு
நாம வேலைவாய்ப்பு அடிப்படையிலேயே. படிப்பை பார்க்கறோம். நாம நம்ம மொழியில படிச்சுட்டு நம்ம நாட்டிலேயே வேலை செஞ்சாதான் நாட்டின் முன்னேற்றத்தை எட்ட முடியும். தாய்மொழியில உயர்கல்வியை கற்பிக்க எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தரணும். ஆங்கிலம்தான் முதல் மொழி என்ற நிலையிலதான் இப்போதைய உயர்கல்வி இருக்கு. தமிழில் எல்லா பாடங்களையும் உருவாக்க முடியும். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கறதா இருந்தா, உயர்கல்வியை தமிழிலேயே கற்பிக்க அரசு உரிய திட்டங்களை இயற்றணும். அதன் மூலமா ஆங்கிலம் போல நம் மொழியையும் உலகம் முழுக்க பரவச் செய்யலாம். சிறப்பான பாடத்திட்டங்களை அறிஞர்களைக்கொண்டு உருவாக்கினா, ஆங்கிலத்தில படிக்கிறவங்களைக்கூட தமிழ்ல உயர்கல்வி படிக்கச் செய்யற அளவுக்கு வளர்ச்சியை எட்ட முடியும்.
