PUBLISHED ON : அக் 16, 2017

சுப்பிரமணியன் சந்திரசேகர்
19.10.1910 - 21.8.1995
லாகூர், பஞ்சாப் (பிரிட்டிஷ் இந்தியா)
'விண்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதிக்காலம் என்பது, அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டது என்பதைப் பொறுத்தது. மிக அதிக பொருள்நிறை கொண்டுள்ள நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ, கருந்துளைகளாகவோ மாறுகின்றன. பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத்திரங்கள் (சூரியனைவிட 8 மடங்கு பொருள்நிறை குறைவு) அடர்த்தியான நிலையை (White dwarf) அடைகின்றன' என்ற அவருடைய ஆராய்ச்சி முடிவுகள், அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருந்தன. இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படைதான், நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, மறைதல் பற்றிய ஆய்வுகளுக்கு இப்போதும் வழிகாட்டியாக உள்ளது. நட்சத்திரங்கள் பற்றிய இந்த நிறை அளவு 'சந்திரசேகர் லிமிட்' என்றே அழைக்கப்படுகிறது. நட்சத்திரங்களைப் பற்றிய ஆய்வுகளுக்காகவே இவருக்கு 1983ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்த லாகூரில் பிறந்தார். அங்கிருந்து அவர்களது குடும்பம் சென்னைக்குக் குடி பெயர்ந்தது. தன்னுடைய சகோதர, சகோதரிகளுடன் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்து, பின்னர் மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பல நூல்களைப் படித்து ஆய்வுகளில் ஈடுபட்டார். 1928ல் இந்தியா வந்திருந்த அர்னால்டு சோமர்ஃபெல்டு என்கிற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியைச் சந்தித்து புதிய ஆய்வுகள் குறித்து தெரிந்துகொண்டார்.
தாம் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்த முதல் கட்டுரையை 1929ல் வெளியிட்டு, சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு இன்னும் 2 கட்டுரைகள் எழுதி, இந்திய அரசின் நன்மதிப்பைப் பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வாய்ப்புப் பெற்றார். அங்கே படித்து 1933ல் முனைவர் பட்டம் பெற்ற நிலையில், லண்டன் ராயல் சொசைட்டி இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாயின. பிறகு ட்ரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சிப் பேராசிரியராகச் சேர்ந்தார். மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். பிறகு, 1937ல் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. அங்கே சிறந்த பேராசிரியராக இருந்து, தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு' என்ற நூலை வெளியிட்டார். சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியர், வானியல் அறிஞர் என பன்முகம் கொண்ட சந்திரசேகரின் சித்தப்பா தான் மற்றொரு நோபல் பரிசு விஞ்ஞானியான சர்.சி.வி.ராமன்!
விருதுகள்
பத்ம விபூஷன் (1968)
நோபல் பரிசு (1983)
ராயல் சொசைட்டியின் காப்லே பதக்கம் (1984)
