தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ச வரிசையில் இத்தனை சிக்கலா?

ச வரிசையில் இத்தனை சிக்கலா?

ச வரிசையில் இத்தனை சிக்கலா?


PUBLISHED ON : ஜூன் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது வடமொழியாக இருக்குமோ என்று எடுத்த எடுப்பில் ஐயப்படும்படி ஒரு சொல்வரிசை இருக்கிறது. ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ, சௌ எனப்படும் சகர வரிசை எழுத்துகளில் ஒன்று, சொல்லின் முதலெழுத்தாக இருக்குமெனில், அது வடமொழிச் சொல்லா என்று ஐயுற வேண்டும். தொல்காப்பியம் சகர வரிசை எழுத்துகளைச் சிறப்பித்துக் கூறுகிறது. அதற்கேற்பவே தமிழில் கலந்துள்ள வடசொற்களில் சகரத்தில் தொடங்கும் சொற்களே மிகுதியாகவும் இருக்கின்றன.

“சகரக் கிளவியும் அவற்றோரற்றே

அ ஐ ஔ எனும் மூன்றலங்கடையே”

என்பது தொல்காப்பிய நூற்பா. (மூன்றலங்கடை என்பது- மூன்று விதிவிலக்காக)

சகரத்தில் ச, சை, சௌ என்னும் மூன்று எழுத்துகளில் ஒரு சொல் தொடங்குவதில்லை என்பது அந்நூற்பா கூறுகின்ற கருத்தென்பர். பிற்கால ஆய்வுகளில் “அவை 'ஔ' என்னும் ஒன்றலங்கடையே” (ஒன்று விதிவிலக்காக) என்று திருத்தப்பட்டுள்ளது என்பர்.

சௌ என்பதில் சொல் தொடக்கம் இல்லாதிருத்தல் வேண்டும் என்பது அவர்கள் கருத்து. பிற எல்லாச் சகர எழுத்துகளிலும் சொல் தொடங்கும் என்பது அவர்களுடைய உறுதிப்பாடு.

அகராதிகளில் சகர வரிசைச் சொற்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் வரை இருக்கையில் அவற்றில் பெரும்பாலானவை கடன்பெறப்பட்டவை என்னும் கருத்து ஏற்புடைத்தாயில்லை. அந்த வழக்கினை மொழியறிஞர்கள் ஆராயட்டும். நாம் சகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லை வடமொழியா, இல்லையா என்று சீர்தூக்கிப் பார்ப்பதில் தவறில்லை.

செரு, சோறு, சறுக்கு, சட்டி, சினை, செல் போன்ற ஏராளமான தமிழ்ச்சொற்கள் சகர எழுத்துகளில் தொடங்குகின்றன. ஆகவே, சகரத்தில் வடசொற்கலப்பு என்ற முடிவுக்கு வரலாமேயன்றி, அனைத்தும் வடசொற்களே என்னும் முடிவு தகாது.

சகர வரிசை எழுத்துகளில் தொடங்கும் வடசொற்களின் சிறு பட்டியல் இஃது. அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன.

சகலம் (அனைத்தும்), சதா (எப்போதும்),

சக்தி (ஆற்றல்), சத்தம் (ஓசை)

சாதனம் (கருவி), சாது (துறவி),

சாந்தம் (அமைதி), சாதம் (சோறு)

சிகரம் (முகடு), சிசு (குழந்தை), சிரத்தை (உளத்திட்பம்), சிரமம் (துன்பம்)

சீக்கிரம் (விரைவு), சீதோஷ்ணம் (தட்பவெப்பம்), சீலம் (ஒழுக்கம்), சீரணம் (செரிமானம்)

சுபாவம் (இயல்பு), சுயேச்சை (தன்விருப்பு), சுதந்திரம் (விடுதலை), சுவாசம் (மூச்சு)

சேமம் (நலம்), சேனாதிபதி (படைத்தலைவன்), சொப்பனம் (கனவு), சௌக்கியம் (நலம்).

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us