PUBLISHED ON : ஏப் 16, 2018
தமிழ்ச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம். ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் பெயர்களை எடுத்துக்கொள்வோம். அன்பழகன், கண்ணன், தங்கவேல், பூங்கொடி, யாழினி என்று அவர்களின் பெயர்கள் இருக்கக்கூடும். அப்பெயர்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம்.
தமிழ் எழுத்துகளால் எழுதப்படக்கூடிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றனவா, என்ன? ரமேஷ், சுரேஷ், ஐஸ்வர்யா, ஜாபர், ஹரிணி என்றும் மாணவர்களின் பெயர்கள் இருக்கின்றன. அப்பெயர்களில் உள்ள ஷ், ஸ், ஜா, ஹ ஆகியன தமிழ் எழுத்துகளா? இல்லை.
தமிழில் உள்ள 247 எழுத்துகளுக்குள் அவை வரவில்லை. அவற்றைத் தனியே நாம் கற்று வைத்திருக்கிறோம். அவை கிரந்த எழுத்துகள் எனப்படும். ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ஆகிய எழுத்துகளை மட்டும்தான் எழுதுவதற்காகப் பயன்படுத்துகிறோம்.
இந்த எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு சொல்லை எழுதினால், அது பெயர்ச் சொல்லானாலும் சரி, பெயரல்லாத சொற்களானாலும் சரி, அவை தமிழ்ச் சொற்களல்ல. அவை பிறமொழிச் சொற்கள்.
பிறமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை சமஸ்கிருதம் எனப்படுகிற வடமொழிச் சொற்கள். அந்த எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு சொல் எழுதப்பட்டிருந்தால், அது பெரும்பாலும் வடசொல்லாகவே இருக்கும். அத்தகைய சொற்களின் சிறு பட்டியல் இது. அடைப்புக்குறிக்குள் அச்சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களைக் காணலாம்.
விசயம் (பொருள்)
இஷ்டம் (விருப்பம்)
கஷ்டம் (துன்பம்)
நஷ்டம் (இழப்பு)
உஷ்ணம் (வெப்பம், சூடு)
கஷாயம் (மருந்து)
கும்பாபிஷேகம் (குடமுழுக்கு)
சந்தோசம் (மகிழ்ச்சி)
ஜாடி (குடுவை)
ஜலதோசம் (நீர்க்கோப்பு)
சிருஷ்டி (படைப்பு)
ஸ்தலம் (இடம்)
ஜீவகாருண்யம் (உயிர்களிடத்து அன்பு)
சீதோஷ்ண நிலை (தட்பவெப்ப நிலை - சீதம் என்றால் தட்பம் (குளிர்), உஷ்ணம் என்றால் வெப்பம்
சுபிக்ஷம் (செழிப்பு)
நிஜம் (உண்மை)
நமஸ்காரம் (வணக்கம்)
பூசை (வழிபாடு)
புஜபலம் (தோள்வலி)
பொக்கிஷம் (கருவூலம்)
போஜனம் (உணவு)
வஸ்திரம் (துணி)
வருசம் (ஆண்டு)
விஸ்தாரம் (விரிவு)
வேஷம் (தோற்றக்கோலம்)
விலாசம் (முகவரி)
- மகுடேசுவரன்