PUBLISHED ON : டிச 19, 2016

பாலு ஒரே பரபரப்பாக ஓடிவந்தான். நானும் ஞாநி மாமாவும் கேரம் விளையாடிக் கொண்டிருந்தோம். வாலு இருவரும் ஜெயித்த காய்களை எல்லாம் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.
“மாலு, இசை அமைக்க என்னவெல்லாம் தேவை, சொல்லு.” என்றான் பாலு. “இசையறிவு, கற்பனை, ஏதாவது ஒரு இசைக்கருவி இந்த மூன்றும் தேவை” என்றேன்.
“காது கேட்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு.
எனக்கு சிரிப்பு வந்தது. “காது கேட்காமல் எப்படி என்ன இசை அமைக்கிறோம் என்று தெரியும்? நிச்சயம் வேண்டும். இது என்ன கேள்வி?” என்றேன்.
உடனே மாமா, பாலுவைப் பார்த்துக் கேட்டார், “பீத்தோவன் பற்றி ஏதாவது படித்தாயா?”. பாலு ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான். “ஆமாம் மாமா. இன்று அவர் பிறந்த நாள். அதற்காக அவரைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.”
“என்ன அப்படி நம்பமுடியாத விஷயம், பாலு?”
“பீத்தோவனுக்குக் காது கேட்காதாம். அவரை மிகப்பெரிய இசை மேதை என்று, எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அவ்வளவு சிறப்பாக இசை அமைத்தவர், காது கேட்காமல் எப்படி இசை அமைத்திருப்பார்? எனக்குப் புரியவே இல்லை.” என்றான் பாலு.
மாமா, அந்தப் புதிரை விடுவித்தார். “பீத்தோவன் பிறவியிலேயே காது கேட்காதவர் அல்ல. நடு வயதில், அவருக்கு கேட்கும் திறன் குறைய ஆரம்பித்து, முற்றாகப் போய்விட்டது. ஒரு மெட்டை அதற்கான ஸ்வர ஒலிக் குறிப்புகளுடன், வரிவடிவத்தில் எழுதுவது இசையமைப்பு. நம் இசைமரபில் ச,ரி,க,ம,ப,த,நி என்று ஏழு ஸ்வரங்கள் இருப்பது போல, மேலைநாட்டு இசை மரபிலும் ஸ்வரங்கள் இருக்கின்றன. பீத்தோவன் அவற்றை நன்கு அறிந்தவர். எந்த ஸ்வரக் கோவை எப்படி ஒலிக்கும் என்பது, அவருக்குத் தெரியும். எனவே, அவற்றை கற்பனை செய்து குறிப்புகளாக எழுதுவார். அந்தக் குறிப்புகளைப் பார்த்து, இசைக்கருவி இசைப்பவர்கள், தம் கருவிகளில் வாசிப்பார்கள். அதை பீத்தோவனால் கேட்க முடியாது என்றாலும், முன்னரே அவை அவர் மனதில் கற்பனை செய்தவைதானே.”
“மனக் கண் மாதிரி மனக் காது அவருக்கு!” என்றேன்.
“அதேதான். எந்த இசையமைப்பாளருக்கும், மனதுக்குள் அவருடைய மெட்டு கேட்கும். பீத்தோவனுக்குக் காது கேட்கும் திறன் முழுக்கப் போய்விட்டபிறகு, அவருடைய படைப்புகளின் இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். மேடையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். பார்வையாளர்கள் பலமாகக் கை தட்டியது அவருக்கு துளியும் கேட்கவில்லை. சக கலைஞர்கள் அவர் தலையைத் தொட்டுத் திருப்பி, அதைப் 'பார்க்க' வைத்தார்கள்.” என்ற மாமா, “ மாலு, நீ மனக் காது என்று சொன்னாய் அல்லவா? மனக் கண்ணில் ஓவியம் வரையும் ஒரு கலைஞரைப் பற்றியும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.” என்றார்.
நானும், பாலுவும் திரும்பவும் ஆச்சரியமானோம்.
“இவரும் பீத்தோவன் மாதிரி ஜெர்மன் நாட்டுக்காரரா?” என்று கேட்டான் பாலு.
“இல்லையில்லை. நம்ம ஊர்க்காரர். சென்னையில் இப்போதும் இருக்கிறார். எனக்கும் நண்பர்தான். அவருடைய கதையை நான் சொல்வதைவிட, அவரே சொல்லிக் கேட்டால், இன்னும் சுவையாக இருக்கும். அவ்வளவு நகைச்சுவையோடு, தன்னைப் பற்றிய மிக சோகமான தகவல்களைக் கூடப் பேசுவார். நேற்று நீங்கள் பள்ளிக்கூடம் போய்விட்டீர்கள். அதே நேரம் இன்னொரு பள்ளியில் மாணவர்களிடம் அவர் பேசினார். முடித்ததும், எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.”
மாமா சொல்லச் சொல்ல, எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. மதுரையில் பிறந்தவரான மனோகர் தேவதாஸ், ஒரு வேதியியல் விஞ்ஞானி. தாமாகவே ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு, அதில் தேர்ச்சியடைந்தவர். மதுரையிலும், சென்னையிலும் உள்ள பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், இயற்கைக் காட்சிகளையும், கறுப்பு இங்கில் கோட்டோவியங்களாக நிறைய வரைந்திருக்கிறார். நடு வயதில் அவருக்குக் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. ரெட்டினைட்டிஸ் பிக்மெண்ட்டோசா என்ற கண் நோய் பாதிப்பால், பார்வை மங்கிக் கொண்டே போய், கண்ணுக்கு ஒரு அங்குலம் பக்கத்தில் வைத்தால்தான், எழுத்தையோ படத்தையோ லேசாகவாவது பார்க்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், மனோகர் ஓவியம் வரைவதை நிறுத்தவே இல்லை. தன் மனக் கண்ணில் இருக்கும் ஒரு பெரிய படத்தை, அங்குலம் அங்குலமாக வரைந்து முடிப்பார்.
மாமா, தன்னிடம் இருந்த, மனோகரின் மதுரை பற்றிய ஓவியப் புத்தகத்தைக் காண்பித்தார். எனக்கும், பாலுவுக்கும் பிரமிப்பென்றால் அவ்வளவு பிரமிப்பு. இது வரை மாமா சொன்னதெல்லாம், மனோகர் தேவதாஸின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான். இன்னொரு பகுதியைக் கேட்டதும், எனக்கும், பாலுவுக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
மனோகரின் மனைவி மஹிமா. அவர் முறைப்படி ஓவியம் பயின்றவர். ஒரு முறை காரில் அவர்கள் இருவரும் வெளியூர் போய்க் கொண்டிருந்தார்கள். மஹிமாதான் கார் ஓட்டினார். ஒரு லாரியுடன் மோதி கார் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான மஹிமா, பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
உயிர் பிழைத்து வீடு திரும்பும்போது, மஹிமாவின் கழுத்துக்குக் கீழே உடல் முழுக்க செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியில்தான் இனி இருந்தாக வேண்டும் என்றாகிவிட்டது. இன்னொரு பக்கம், மனோகருக்கு பார்வை மங்கிக் கொண்டே வந்த நேரம். ஆனால், எல்லா பொது நிகழ்ச்சிகளுக்கும், மஹிமாவின் வீல் சேரை மனோகர்தான் தள்ளிக் கொண்டுவருவார். மனோகர் வரைந்த ஓவியங்களை, வாழ்த்து அட்டைகளாக ஆண்டுதோறும் தயாரிப்பார்கள். அதற்கான வாசகங்களை மஹிமா கையில் ஸ்ப்ளிண்ட் பொருத்திக் கொண்டு எழுதுவார். வாழ்த்து அட்டையில் கிடைக்கும் தொகையை மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுவார்கள். இப்படியே முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். பிறகு மஹிமா காலமாகிவிட்டார்.
“வாலு, நீ என்ன ஒன்றுமே பேசவில்லையே?” என்றேன்.
“நான் டெக்னாலஜி ஆசாமி. ஆனால், ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. எத்தனை டெக்னாலஜி வந்தாலும், அது எதுவும் மனிதனின் மன வலிமையை மிஞ்சவே முடியாது.” என்றது வாலு. எல்லாரும் ஆமோதித்தோம்.
வாலுபீடியா 1: மனோகர், பார்வைக் குறைபாட்டை சமாளித்து, மேகங்களைப் படம் வரையும் முறை:
* முதலில் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி ஒரு திக்கான கோடு போட்டுக் கொள்ளுதல்.
* அதை அடிப்படையாக வைத்து சின்னச் சின்னக் கோடுகள் வரைதல்.
* மேலும் கீழும் சின்னக் கோடுகளை வரைந்த பின்னர், திக்கான கோட்டை அழித்துவிடுதல்.
வாலுபீடியா 2: பீத்தோவன் எவ்வளவு சிறப்பான இசைக் கோலங்களை உருவாக்கியிருந்தாலும், அவற்றிலிருந்து வந்த வருமானம் சொற்பமாகவே இருந்தது. ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு பிரபுக்கள் செய்துவந்த உதவிகளால்தான், அவர் சமாளித்தார். காது மெல்ல மெல்ல பழுதடைந்து வந்தபோது, யுத்த காலத்தில் வெடிச்சத்தம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயந்து தரை மட்டத்துக்குக் கீழ் இருந்த நிலவறைகளில் இருந்தார்.
