PUBLISHED ON : ஏப் 10, 2017

யூடியூப் என்ற வீடியோ தளம், இன்றைய மாணவர்களிடையே மிகவும் பிரபலம். உண்மையில் யூடியூப் பார்ப்பது, ஆக்கபூர்வமானதா, அடிமைப்படுத்துகிறதா என்பதை, கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்த வாரம் விவாதிக்கிறார்கள்.
சிராஜுதீன்: வெறும் டெக்ஸ்டா படிக்கிறதைவிட, ஏதாவது எக்ஸாம்பிளோட குறிப்பா விஷுவலாக படிக்கும்போது, சீக்கிரமாகவும் எளிமையாகவும் புரிஞ்சுக்க முடியும். இப்ப நாம ஏதாவது பிராட்டிகல் வகுப்பு மிஸ் பண்ணிட்டோம்னா, வீட்டுல போய், யூடியூப்ல தேடினால் நிறைய வீடியோஸ் கிடைக்கும். அதை வச்சு, மிஸ் பண்ணின வகுப்பை ஈடு செஞ்சிடலாம். அதனால ஆக்கபூர்வமானதுதான்.
பிரியதர்ஷினி: சிலபேர் யூடியூப்லேதான் இதெல்லாம் இருக்கே, வீட்டுல போய் பார்த்துக்கிடலாமேன்னு கிளாஸை மிஸ் பண்ணத் தொடங்கிடுவாங்க. அதோட, பாடத்தை விட்டுட்டு, சினிமா, காமெடி சீன்ஸ்னு பார்க்கத் தொடங்கிட வாய்ப்பு அதிகம் இருக்கு. நிச்சயமா யூடியூப் நம்மை அடிமைப்படுத்திவிடும்.
மதுமிதா: இப்ப இவங்க என்ன சொல்றாங்க? சினிமா, காமெடின்னு பார்க்க ஆரம்பிச்சுடுவாங்கன்னு சொல்றாங்க. அந்தக் கட்டுப்பாடு உங்ககிட்ட இருக்கணும். நாம கட்டுப்பாடா இல்லாமல், யூடியூப்பை குத்தம் சொல்றதில் அர்த்தமேயில்லை. அறிவியலில் நாம படிக்கிற விலங்குகள் பத்தி, எத்தனை அருமையான வீடியோ எல்லாம் அங்கே இருக்கு தெரியுமா? பாடங்களில் படிக்கிறதைவிடவும் கூடுதலாக தெரிஞ்சுக்க இதெல்லாம் பயன்படுது.
கபிலன்: எந்த மனுஷனும் கவனம் சிதறாம இருக்க முடியாது. யூடியூப்ல பாடம் சம்பந்தமாகவே பார்த்தாலும், அந்தப் பழக்கம் அதிகமாகிடுச்சுன்னா, வகுப்புல நடத்தற பாடங்களை கவனிக்கிற மனநிலை இருக்காது. வீட்டுல போய், வீடியோ பார்த்துக்கிடலாம்னு தோண ஆரம்பிச்சுடும்.
பவித்தா: இப்ப, மிஸ் ஒரு ஹோம் ஒர்க் கொடுக்குறாங்கன்னு வையுங்க. அதுக்கு ரெஃபர் பண்ணுறதுக்கு, நூலகம் போவோம். அங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான புத்தகங்கள்ல நமக்குத் தேவையானதைத் தேடி எடுக்கறது எவ்வளவு நேரம் ஆகும்? ஆனா யூடியூப்ல தேவையான பெயரைக் கொடுத்து, தேடினா அந்தந்தப் பாடங்கள் நிமிஷத்துல எவ்வளவு கிடைக்குது. நம்ம டைமும் எவ்வளவு மிச்சமாகும்.
சிவபிரசாத்: புத்தகம் படிக்கிறது நல்லது. காலத்துக்கும் நினைவுல இருக்கும். புத்தகம் மூலம் நாலு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். வீடியோவையே பார்த்து பழகிட்டா, நம்மகிட்ட மெத்தனம் அதிகமாகிடும். எல்லாத்தையும் வீடியோவிலேயே பார்த்துக்கிடலாம்கற எண்ணம் வரும். யூடியூப்தான் நல்லதுன்னா, பள்ளிக்கூடத்துல ஏன் நூலகம் கட்டுறாங்க. நாலு சிஸ்டம் மட்டும் போட்டு வைக்கலாம்ல.
சிராஜுதீன்: வீடியோஸ் பார்க்கறதிலையும், நாலு நல்ல விஷயங்கள நிச்சயம் கத்துக்க முடியும். மார்ட்டின் லூதர் கிங்கோட பேச்சு பத்தி, பாடத்துல படிக்கிறோம். ஆனால், அவர் எப்படிப் பேசி இருக்கார்னு தெரியுமா? யூடியூப்ல அவரோட பேச்சை நீங்க கேக்கலாம். இப்படி பல தலைவர்களோட பேச்சு அங்கே கிடைக்குது. அதைப் பார்த்து, நானும் பேச கத்துக்கிட்டேன். நம்ம ஸ்கூலில் நடந்த பேச்சுப் போட்டியிலகூட, நான் பரிசு வாங்கி இருக்கேன்.
கபிலன்: ஏதாவது ஒருவாட்டின்னா தப்பில்ல. ஆனால், ஒவ்வொரு வாட்டியும் வீடியோ பார்க்குறதுன்னு பழகிட்டா, உங்களோட சுயம் இல்லாமல் போயிடுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இது எப்படி ஆக்கபூர்வமானதாக இருக்க முடியும்?
சிவபிரசாத்: அப்படியில்ல; நாம அங்கே புதிய விஷயங்களை கத்துக்கறோம். கவனம் சிதறாம உட்கார்ந்து கத்துக்கிட்டா, நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
பிரியதர்ஷினி: யாரோ சொல்லி இருக்காங்க, மனசுங்கறது ஒரு குரங்கு மாதிரி, அது அங்கேயும் இங்கேயும் தாவிக்கிட்டே இருக்கும்னு. நீங்க நல்ல விஷயங்களுக்காக, யூடியூப் பார்க்க ஆரம்பிச்சாலும், அப்படியே வேற வேற வீடியோவைப் பார்த்து, படிக்கமுடியாமல் போறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றோம்.
பவித்தா: அப்ப யூடியூப் பார்க்கவே கூடாதுன்னு சொல்றீங்களா?
பிரியதர்ஷினி: நிச்சயமாக அப்படி சொல்லல. அது வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும்னு நாங்க நம்புறோம். ஆனால், கட்டுப்பாடு வேணும்னு நினைக்கிறோம். நாம யூடியூப் பார்க்கும் போது, நம்மை கண்காணிக்க, அம்மாவோ, அப்பாவோ பக்கத்துல உட்காரலாம். நமக்கு வர்ற சந்தேகங்களை அவங்க மூலமாகவும் தீர்த்துக்கிடலாம். பக்கத்துல பெரியவங்க இருந்தா.. நாமளும் பாட்டு, சினிமா, காமெடின்னு படிக்கிற நேரத்துல பார்க்காம இருப்போம்.
பிரியதர்ஷினியின் இந்த வாதத்தை, எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு கை தட்டி ஆமோதித்தனர்.
