PUBLISHED ON : நவ 19, 2018

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று குழந்தைகளிடம் கேட்டால், ஒன்று டாக்டராக வேண்டும் என்பார்கள், அல்லது கலெக்டராக வேண்டும் என்பார்கள். ஆனால், இவை இரண்டுமே ஆன ஒருவர், அவற்றை உதறிவிட்டு, கல்வியாளராக மாறியுள்ளார். கேட்டவுடனேயே ஆச்சரியம் தரும் பின்னணியைக் கொண்ட இவர் பெயர் ரோமன் சைனி. இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்தவர்.
16 வயதிலேயே டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவப் படிப்புக்குள் நுழைந்தார்.
18 வயதில் சர்வதேச மருத்துவ ஆய்விதழில் ஆய்வுக்கட்டுரை வெளியிடும் அளவுக்கு வளர்ந்தார். அதன் பின்னர், திடீரென குடிமைப்பணியில் ஆர்வம் கொண்ட ரோமன் சைனி, முதல் முயற்சியிலேயே அதிக மதிப்பெண் பெற்று ஐ.ஏ.எஸ். ஆனார்.
அப்போது, அவருக்கு வயது 22 தான். பின்னர் பயிற்சி முடித்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் ஒன்றில் கலெக்டராகப் பொறுப்பேற்றார். சில நாட்களிலேயே தம் பணியை ராஜிநாமா செய்துவிட்டு, மாணவர்களைக் கலெக்டராக்கும் பணியில் இறங்கிவிட்டார். இதுபற்றி ரோமன் சைனி கூறும்போது,
“கிராமத்தில் ஒருமுறை மருத்துவ முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கு, மக்களின் நிலையைப் பார்த்து பெரும் கவலையடைந்தேன். அதுவரை என் மனத்தில் இறுத்திவைத்திருந்த எண்ணங்கள் அப்படியே மாறின. நான் முன்னர் பார்த்த உலகம் வேறு, வளர்ந்த சூழல் வேறு. ஆனால், மருத்துவ முகாமில் பார்த்த நிஜமோ வேறாக இருந்தது.
வந்தபின் உள்ள நோயைத்தானே மருத்துவரான என்னால் குணமாக்க முடியும்? வருவதற்கு முன், பிரச்னையைத் தடுப்பது எப்படி? என்று எனக்குள் சிந்தனை ஓடியது. அதாவது, கிராமத்து மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுவது என்று தொடர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். எனது சமூக அக்கறை அதிகமானது. இதையடுத்து, ஐ.ஏ.எஸ். ஆகி, ஏழை மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்று முடிவெடுத்து, அதன் பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன்.
பின்னர், முதல் முயற்சியிலேயே, 22 வயதில் ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டேன். பணியில் சேர்ந்தவுடன், எனது அதிகாரம் ஓர் எல்லைக்கு உட்பட்டது என்பது நன்றாகப் புரிந்தது. ஒரு கலெக்டராக, அந்த மாவட்டத்துக்குள் உள்ள பிரச்னைகளை மட்டும்தான் சரிப்படுத்த முடியும். இதே, பல ஐ.ஏ.எஸ்.களை நாம் உருவாக்கிவிட்டால், அவர்களால் இன்னும் பெரிதாக மாற்றம் கொண்டுவர முடியுமே என்று எண்ணினேன்.
குறிப்பாகச் சொல்வதென்றால், கல்விமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கல்வியைப் பரவலாக்க வேண்டும். அதனால், கலெக்டர் பதவியையும் ராஜிநாமா செய்துவிட்டு, அன்அகாதெமி (Unacademy) என்ற இலவச ஆன்லைன் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினேன். நான் செட்டில் ஆக வேண்டும் என்பதைவிட, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நல்ல முறையில் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் எனது முதல் விருப்பம். எல்லோருக்கும் குறைந்த கட்டணத்தில் கல்வி கிடைக்க வேண்டும். அதன் மூலம் திறனுள்ளவர்களால் மேலே வரமுடியும்.
பிறக்கும்போது எல்லோரும் அறிவாளியாகப் பிறப்பதில்லை. ஆனால், அதை அடைவதற்கு உண்டான தகுதி எல்லோரிடமும் இருக்கிறது. அதற்குச் சரியான வாய்ப்பும், சூழலும், பயிற்சியும் அமைய வேண்டும். உங்கள் உந்துதலை நீங்கள் பின்பற்றிச் செல்லக்கூடிய தைரியம் வரவேண்டும். ஊரார் என்ன நினைப்பார்கள், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது. நமக்கு எதன் மீது விருப்பம் இருக்கிறதோ அதற்காகப் பாடுபடத் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் உயர்ந்த வெற்றியை சுவைக்க முடியும்.” என்கிறார்.
ரோமன் சைனியின் யூடியூப் பக்கத்தை இப்போது சுமார் 26 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். பணம் கட்டிப் படிக்கமுடியாத மாணவர்களுக்கு, சைனியின் முயற்சி பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.
