PUBLISHED ON : நவ 19, 2018

ஓவியாவோடு ரொம்ப நெருக்கம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒன்றாகப் பேசுவோம், பழகுவோம். வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும், மாலை வீடு திரும்பும்போதும் இரண்டு பேருமே சேர்ந்துதான் போவோம், வருவோம். நேரம் சரியாக அமையவில்லை என்றால், முன்னே பின்னேகூடக் கிளம்பியிருக்கிறோம். ஆனால், வகுப்பில் ஒருநாள் கூட சந்தித்துக்கொள்ளாமல் இருந்ததில்லை. ஏதேனும் ஒன்றிரண்டு சொற்கள் பேசிக் கொள்வோம்.
ஆனால், எங்கள் வகுப்பு ஆசிரியருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. என்னை எங்கள் வகுப்பின் இன்னொரு பிரிவுக்கு மாற்றிவிட்டார். காலையில் போனவுடன் அதிர்ச்சி. புது வகுப்புக்குப் போனால், ரொம்பவும் அந்நியமாக இருந்தது.
இத்தனைக்கும் இந்த வகுப்பில் இருப்பவர்களில் பலர், சென்ற ஆண்டு என்னோடு படித்தவர்கள் தான். பலரோடு வெளியே தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருக்கிறேன். ஆனால், மனசு ஆறவே இல்லை. என்னைத் தண்டித்தது போல் இருந்தது.
வகுப்பு ஆசிரியையிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. தைரியம் இல்லை. அவர் சொன்னபடி, அடுத்த பிரிவில் போய் உட்கார்ந்து விட்டேன். இன்டர்வெல்லுக்குப் பிறகு, வகுப்புக்குப் போகவே பிடிக்கவில்லை. ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்துவிட்டேன். என்ன தவறு செய்தேன் என்பதைத்தான் மனது உருட்டிக்கொண்டே இருந்தது.
உமா மிஸ் வந்து தோளைத் தொட்டபோதுதான், கண் விழித்தேன்.
“இங்கே என்ன பண்றே கதிர்? லஞ்ச் பிரேக் வந்துடுச்சு.” பக்கத்தில் ஓவியா நின்றுகொண்டிருந்தாள்.
ஒருசில கணங்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை. பின்னர் கடகடவென ஆதங்கங்களைக் கொட்டினேன். “நான் என்ன தப்பு செஞ்சேன். எனக்கு ஏன் இந்த தண்டனை?” என்றுதான் வந்து முடித்தேன்.
உமா மிஸ் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள்.
“இதையே ஏன் ஒரு வாய்ப்பாகப் பார்க்கக் கூடாது கதிர்?”
“வாய்ப்புன்னா?”
“ஆமாம். இத்தனை மாசமாக நீ உன் வகுப்புல இருந்த நண்பர்களோட மட்டுமே பழகிக்கிட்டு இருந்தே. இங்கே புதிய ஃப்ரெண்ட்ஸ். புது ஆசிரியர். புதிய வகுப்பறை. எல்லாமே புதுசா இருக்குமே. இந்த வகுப்புக்கு வர்ற சப்ஜெக்ட் ஆசிரியர்கள் எல்லாம் புதுசானவங்க. அவங்க வித்தியாசமாகச் சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா? அது உனக்குத்தானே பலன்…”
“இல்லை மிஸ். எனக்கு அந்த கிளாஸ்தான் மிஸ் செளகரியம். ஜன்னலுக்குப் பக்கத்துலேயே சீட். மேலே ஃபேன் வேற ஓடும். நல்ல வெளிச்சமா இருக்கும். இங்கே பின்னாடி உட்கார வெச்சுட்டாங்க. அங்கே இருக்கற ஃப்ரெண்ட்ஸ்தான் மிஸ் பெஸ்ட். இங்கே ஒருசில பேரத் தவிர வேற யாரையுமே தெரியாது.”
“அப்ப இனிமே தெரிஞ்சுக்கலாமே. அது பெனிபிட்தானே?”
“அங்கே நான் தமிழ்லேயும் கணக்குலேயும் முதல் மார்க் வாங்குவேன் மிஸ்?”
“இங்கே வேற பாடங்கள்ல முதல் மார்க் வாங்கலாமே!”
எல்லா ஆதங்கங்களுக்கும் உமா மிஸ் பதில் வைத்திருப்பார் என்று தோன்றியது. எதைச் சொல்லியும் அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்று தோன்றவில்லை.
“எனக்குத் தெரிஞ்ச முகங்கள், பழகின இடம், நெருக்கமான நண்பர்கள் எல்லாம் அங்கேதான் மிஸ் இருக்காங்க. அவங்களை எப்படிப் பிரிஞ்சு வரமுடியும்?”
என் குரல் எனக்கே அன்னியமாக இருந்தது. ஒரு மாதிரி நெஞ்சை அடைத்துக்கொண்டது. உமா மிஸ் லேசாகப் புன்னகைத்தார்.
“போன ஆண்டு, இதே ஃப்ரெண்ட்ஸ்தான் இருந்தாங்களா? அதுக்கு முந்தைய ஆண்டுகள் எல்லாம் இவங்களெல்லாம் தான் இருந்தாங்களா? அடுத்த ஆண்டும் இவங்களேதான் வரப் போறாங்களா?”
இல்லையென புத்தி சொன்னது. மனம் ஏற்க மறுத்தது. பதில் சொல்லத் தெரியவில்லை.
உமா மிஸ் கொஞ்சம் அமைதி காத்தார். எதுவும் கேட்கவில்லை. என் முகம் போன போக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
“ரொம்ப இறுக்கமாக இருக்காதே கதிர். மாற்றம் ஒன்றே மாறாதது. நம்மைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைச்சுக்கணும். கடந்த காலத்துல வாழறதைவிட நிகழ்காலத்தில் வாழணும். எதிர்காலத்தை எதிர்கொள்ளணும். நான் நினைச்சது நடக்கலை, எதிர்பார்த்தது கிடைக்கலை அப்படின்னு வருத்தப்படறதுல ஒரு பலனும் இல்லை.
எல்லாத்தையும் ஒரு புதுசான வாய்ப்பாக பார்க்கக் கத்துக்கோ. படிப்புல, வேலைவாய்ப்புல, முன்னேற்றத்துல எல்லாத்துக்கும் இதுதான் பொருந்தும். திறந்த மனசோட எல்லாத்தையும் ஏத்துக்கற பக்குவம் வேணும். ஏன்னா, தொடர்ச்சியாக எல்லா விஷயங்களிலேயும் மாற்றம் ஏற்பட்டுக்கிட்டே வருது. என்ன மாற்றம் நடக்கப் போகுதுன்னு புரிஞ்சுக்கறதுக்குள்ள மாற்றங்கள் வந்துடுது. அதை வேகமாகப் புரிஞ்சுக்கறதுக்கும், அதற்கு ஏற்ப நம்மை மாத்திக்கறதுக்கும் பக்குவம் வேணும்.
நான் இப்படித்தான், இப்படிப்பட்ட அம்சங்கள் இருந்தாதான் ஏத்துப்பேன்னு சட்டம் போட முடியாது. கோரிக்கை வைக்கமுடியாது. அப்படி இருந்தா, அதுக்குப் பேரு இறுக்கம். ரிஜிடிட்டி. அது கூடாது. மாற்றத்தை ஏத்துக்காமல் முரண்டு பிடிச்சா, மாற்றம் நம்மை உதைச்சுத் தள்ளிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.
எதையும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கணும். அல்லது எப்படி வாய்ப்பாக மாத்திக்கணும்னு யோசிக்கத் தெரியணும். இன்னிக்குப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் புதிய நபர்களை வேலைக்கு எடுக்கும்போது, இந்த விஷயங்களை ஒரு தகுதியாகவே பார்க்கறாங்க. அதாவது, அடாப்டபிளிட்டி, அஜிலிட்டி, அண்டு ஒப்பன் டு சேஞ்சஸ் (Adaptability, agility and open to changes) என்ற தகுதி இருக்கான்னு சோதிக்கறாங்க.
புதிய வகுப்பை, ஒரு புதிய வாசலாக பாரு. பழைய வகுப்புல கிடைக்காத பல விஷயங்கள், தகவல்கள், அனுபவங்கள் புதிய வகுப்புல கிடைக்கலாம். பழசை நினைச்சு வருத்தப்படறதுல ஒரு பலனும் இல்லை. உன் முன்னால இருக்கிற வாய்ப்பு, புதிய இடத்தை ஏத்துக்கறதும், புதிய யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கறதும்தான். ஏன், எப்படி, எனக்கு மட்டும் ஏன் நடந்தது என்று மனசைப் போட்டுக் குழப்பிக்கொள்வதால், உனக்கு மட்டும் தான் தலைவேதனை அதிகமாகும். அதைவிட, புதிய சூழ்நிலைக்கு அடாப்ட் ஆகிக்கிட்டு, புதிய மனுஷனா மாறிப் பாரேன்.”
இந்தக் கோணத்தில் ஏன் யோசிக்காமல் போனோம் என்று நினைத்துக்கொண்டேன். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, புதிய வகுப்புக்குப் போய் உட்கார்ந்து கொண்டேன். வகுப்பே புத்துணர்ச்சி அளிப்பதாகத் தோன்றியது!
