PUBLISHED ON : மார் 19, 2018

டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டுவிழா
19.03.1919 - 19.03.2018
பெண் கலைஞர்கள் என்றாலே மரபு வழிக் கலைஞர்கள் மட்டும்தான் என்றிருந்த நிலையை மாற்றியவர் இருவர். நடனத் துறைக்குள் எல்லோரும் நுழைய முடியும் என்று காட்டியவர் ருக்மணி தேவி. இதையே சங்கீதத் துறையில் சாதித்துக் காட்டியவர் டி.கே.பட்டம்மாள். அவருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழா.
காஞ்சிபுரத்தில் நயினாப் பிள்ளை நடத்திய தியாகராஜ உத்சவத்தில், அனைத்து முன்னணி சங்கீத வித்வான்களும் பாட வந்தனர். அவர்களின் இசை பட்டம்மாளின் ஆர்வத்தையும் அறிவையும் வளர்த்தது. குறிப்பாக நயினாப் பிள்ளையை தன் மானசீக குருவாகவே கொண்டார்.
பட்டம்மாள் முழுநேரப் பாடகியாக மாற, அவரது பள்ளித் தலைமையாசிரியர் அம்முக்குட்டி அம்மாள்தான் காரணம். பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர், மகளின் சங்கீத ஆர்வத்தை ரசித்தார். ஆனால், அந்தக் கால பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, தன் மகளை மேடையில் பாட அனுமதிக்கவில்லை. கூட்டத்துக்கு நடுவில் தன் மகள் மேடை ஏறிப் பாடுவது அவருக்கு உறுத்தலான விஷயம். தீட்சிதரின் மனத்தை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் அம்முக்குட்டி அம்மாள்தான். சென்னையில் நடை பெற்ற Government Polytechnical examination for music-ல் பட்டம்மாளும் கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
பொற்காலம்
பேராசிரியர் சாம்பமூர்த்தி, அம்பி தீட்சிதர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்கள் பரிசீலனைக் குழுவில் அமர்ந்திருந்தனர். பட்டம்மாள் பாடிய பாடலைக் கேட்ட அம்பி தீட்சிதர், பட்டம்மாளின் தந்தையை அழைத்து, “இந்தக் குழந்தையை நாளை முதல் என் வீட்டுக்கு தினமும் அழைத்துக்கொண்டு வந்துவிடு. நான் இவளுக்கு நிறைய சொல்லித் தர வேண்டும்.” என்றார். அம்பி தீட்சிதரிடம் கற்ற நாட்களை தன் வாழ்வின் பொற்காலம் என்று கூறுகிறார் பட்டம்மாள்.
காஞ்சிபுரத்தில், பள்ளி நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக, 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் பட்டம்மாளின் படத்துடன் ஒரு செய்தி வெளியானது. அது, பட்டம்மாள் வீட்டில் புயலைக் கிளப்பியது. “குடும்பப் பெண்ணின் படம் பத்திரிகையில் வருவதா? யார் இந்தப் பெண்ணை திருமணம் செய்ய முன் வருவார்?”, என்று கலங்கினார் பட்டம்மாளின் தந்தை.
பட்டம்மாள் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளாமலே அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. நண்பர்களும் மற்ற மரியாதைக்கு உரியவர்களும் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டதால், பட்டம்மாளின் இசை வாழ்க்கைக்கு கிருஷ்ணசாமி தீட்சிதரால் தடை போட முடியவில்லை. விரைவில் பட்டம்மாளின் கிராமஃபோன் ரிக்கார்டும் வெளியானது.
பட்டம்மாள், மூத்த தமிழ் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வை.மு.கோதைநாயகி அம்மாளைச் சந்தித்தார். பத்து வயது குழந்தை அற்புதமாகப் பாடுவதைக் கண்ட வை.மு.கோ, பட்டம்மாளை எப்படியும் சென்னை மேடைகளின் ஏற்றிவிட நினைத்தார். முதலில் எழும்பூர் மஹிள சபையிலும், அதன் பின், ஜகன்னாத பக்த சபை, பார்த்தசாரதி சாமி சபை, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற பல இடங்களிலும் பட்டம்மாளுக்காகக் கச்சேரிகள் ஏற்பாடு செய்தார்.
பட்டம்மாள் பாட வந்த காலத்தில், நெருடலான தாள அமைப்புகளைப் பெண்கள் கையாள வேண்டியதில்லை என்ற எண்ணம் பரவியிருந்தது. இயற்கையாகவே, லய சம்பந்தப்பட்ட விஷயங்களில் பட்டம்மாள் ஈடுபாட்டுடன் விளங்கினார். லய சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு வைரச் சுரங்கமாக விளங்குவன திருப்புகழ் பாடல்கள். அப்பாதுரை ஆச்சாரியார் என்பவர் அப்போது திருப்புகழ் விற்பனராக இருந்தார். அவரிடம் கற்றுக்கொண்டதன் மூலம் பட்டம்மாளின் லய நிர்ணயம் பெரிதும் வளர்ந்தது.
முன்னோடி
முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதிகள் மற்றும் பாபநாசம் சிவன், சுப்ரமணிய பாரதியின் தமிழ்ப் பாடல்களை கச்சேரியின் பிரதான பாடல்களாகப் பாடிப் பிரபலப்படுத்தினார். இதை அவரது தலையாய சாதனையாகக் கூறலாம்.
பல தீட்சிதர் கிருதிகள் பட்டம்மாள் பாடித்தான் மக்களிடையே பரவின. அவர் பாடிய 'மீனலோசன ப்ரோவ', 'மாமவ பட்டாபிராமா' போன்ற பாடல்கள் இசையுள்ள வரை நிற்கும்!
பாபநாசம் சிவன், பட்டம்மாளை தன் சொந்தப் பெண்ணாகவே கருதினார். அவரது கற்பனையில் தோன்றிய கீர்த்தனை முத்துகளை தோன்றிய அன்றே அள்ளி எடுத்து கச்சேரி மேடைகளிலும் இசைத் தட்டுகளிலும் ஒலிக்கச் செய்த பெருமை பட்டம்மாளையும், அவரது தம்பி டி.கே.ஜெயராமனையும் சேரும்.
திரைப் பாடல்கள்
பாபநாசம் சிவனின் தொடர்பே பட்டம்மாளை திரையுலகுக்கு இட்டுச் சென்றது. எழுத்தாளர் 'கல்கி' எழுதிய 'தியாக பூமி' நாவலை கே.சுப்ரமணியம் 1939-இல் திரைப்படமாக எடுத்தார். அப்படத்தின் இசையமைப்பாளரான பாபநாசம் சிவன், பட்டம்மாளை, 'தேச சேவை செய்ய வாரீர்' என்ற பாடலைப் பாட வைத்தார்.
1947-இல் ஏ.வி.எம் தயாரித்த 'நாம் இருவர்' படத்தில், பட்டம்மாள் பாடிய, பாரதியின் பாடல்கள் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே,” “வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே” ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
திரைப்படங்கள் கூட, பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்களைத் தவிர வேறு பாடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். பட்டம்மாளின் மிகப்பெரிய திரையுலக ஹிட் பாடல், வேதாள உலகம் படத்தில் வெளியான 'தீராத விளையாட்டுப் பிள்ளை'.
தேசிய கடமை
1947 ஆகஸ்டு 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்று, பட்டம்மாளை பாரதியின் பாடல்களைப் பாட அகில இந்திய வானொலி அழைத்தது. அதற்காக சன்மானம் அளிக்க முன்வந்த போது, “நாட்டுக்காகப் பாடுவது கடமை” என்று கூறி, பெற மறுத்தார் பட்டம்மாள். இந்த விஷயம் மத்திய அமைச்சரவையில் அந்நாளில் விவாதிக்கப்பட்டது.
சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண், பத்மவிபூஷண் என்று எண்ணற்ற விருதுகள் பெற்ற டி.கே.பி, 1970-இல் சங்கீத கலாநிதி விருதை அலங்கரித்தார்.
அவருடைய நூற்றாண்டான இந்தத் தருணம் அவர் சாதனைகளைத் திரும்பிப் பார்க்க எடுத்த வைக்கும் முதல் அடி. அவர் பங்களிப்பின் முழு வீச்சை உணர இன்னுமோர் நூற்றாண்டு தேவைப்படும்.
- லலிதாராம்
