PUBLISHED ON : ஆக 28, 2017

கார் உற்பத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் ஜப்பான், தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. காருக்கான உதிரி பாகங்கள் எப்போதும் இரும்பில்தான் தயாரிக்கப்படும். இப்போது அதற்கு மாற்றாக இரும்பைவிட எடைகுறைவாக, அதேநேரம் அதைவிட உறுதியான ஒரு பொருளை ஜப்பானிய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
அது என்ன தெரியுமா? மரம்தான் அது. ஆம்! மரக்கூழ் மூலம் தயாரிக்கும் உதிரி பாகங்கள் இரும்பைவிட ஐந்து மடங்கு உறுதியாகவும், அதேநேரம் எடையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாகவும், க்யோட்டோ பல்கலைக்கழக (Kyoto University) ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மின்னணு தொழில்நுட்பத்தில் கார்களை இயக்க வேண்டுமென்றால், கார்களின் எடை குறைக்கப்பட்டாக வேண்டும். எனவே, ஜப்பானிய கார் நிறுவனங்கள் விரைவில் மரக்கூழ் மூலப்பொருள் (cellulose nanofibre) கொண்டு தங்கள் உதிரி பாகங்களைத் தயாரிக்கத் தொடங்க உள்ளார்கள். எதிர்காலத்தில் முழுக் கார்களும்கூட மரத்தினால் செய்யப்படலாம். ஏற்கெனவே பல தேவைகளுக்காக காடுகளை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். இனி இப்பட்டியலில் இதுவும் சேரும்!

