PUBLISHED ON : ஜூலை 11, 2016

காமராசர் பிறந்த தினம் ஜூலை 15
தமிழ் நாட்டின் ஒரு மூலையில் இருந்த விருதுபட்டி என்னும் ஊர், ஒரு மனிதரால் பெருமை பெற்றது. அவர் காமராசர். பின்னாளில் அந்த ஊரின் பெயர் விருதுநகர் என்று மாறியது.
காமராசருக்கு 'காமாட்சி' என்று பெயர் வைத்தனர். தாயார் செல்லமாக 'ராசா' என்று அழைத்தார். இரண்டும் சேர்ந்து பின்னாளில் காமராசர் ஆனது.
ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்ற காமராசர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல முறை சிறை சென்றிருக்கிறார். சிறைவாசத்தில் புத்தகங்கள் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார்.
காமராசர் 1954ல் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாகத் திகழ்ந்தார்.
கிராமத்துப் பிள்ளைகள் கல்வி கற்க நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்தது. காமராசர் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்பட்டது.
ஏழை, பணக்காரன் வேறுபாடு தெரியக்கூடாது என, சீருடை வழக்கத்தை அறிமுகப்படுத்தினார். இலவசக் கல்வி கொண்டுவந்தார்.
வைகை, சாத்தனூர், அமராவதி, பேச்சிப்பாறை, ஆழியாறு, பரம்பிக்குளம், குந்தா அணை என தமிழ்நாட்டில் நிறைய அணைகளை உருவாக்கி விவசாயம் செழிக்கச் செய்தார். பாரத மிகுமின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை போன்ற முக்கிய தொழிற்சாலைகள் இவர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.
காமராஜரை 'காலா காந்தி' (கறுப்பு காந்தி) என்றே இந்தி பேசும் மக்கள் அழைத்தார்கள். நேருவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆவதற்கு உதவினார் காமராசர். சாஸ்திரி ரஷ்ய சுற்றுப் பயணத்தின்போது இறந்து விட்டார். அவரது மறைவுக்குப் பின் மொராஜிதேசாய், இந்திராகாந்தி ஆகியோரிடையே போட்டி வந்தது. இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்க கடுமையாக உழைத்தார் காமராசர். இப்படி பிரதமர்களை உருவாக்கியதால் இவரை 'கிங் மேக்கர்' என்று அழைத்தார்கள்.
'தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என் தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் - அவன்
தன்மையைச் சொல்லி நான் தொழவேண்டும்'
காமராசரின் மறைவின் போது கண்ணதாசன் எழுதிய ஒரு சில பாடலின் வரிகள் இவை.
காமராசர் இறக்கும்பொழுது வாடகை வீட்டில்தான் குடியிருந்தார்.
