தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காந்தியை சந்தித்த காமராசர்

காந்தியை சந்தித்த காமராசர்

காந்தியை சந்தித்த காமராசர்


PUBLISHED ON : ஜன 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்டவர் காந்தி. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அவர் மிக நன்றாகப் பேசுவார். இவைதவிர இன்னும் சில இந்திய மொழிகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார். தமிழில்கூட அவர் ஓரிரு சொற்களை எழுதியதுண்டு. காந்தியின் தமிழ்க் கையொப்பத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைக் காந்திதான் முன்னின்று நடத்தினார். ஆகவே, நாடு முழுவதிலுமிருந்து பல தொண்டர்கள், தலைவர்கள் தொடர்ந்து காந்தியைச் சந்தித்து வந்தார்கள். அவர்களிடமெல்லாம் அவர் என்ன மொழியில் பேசியிருப்பார்? எப்படி அவர்களுடைய மனத்தில் உள்ளவற்றை அறிந்திருப்பார்? தன்னுடைய கொள்கைகளை, போராட்டமுறைகளை எப்படி அவர்களுக்குச் சொல்லித் தந்திருப்பார்? நாடு முழுவதும் பல மொழி பேசுகிற மக்களும் அவருடைய அகிம்சை முறையை ஏற்றுக்கொண்டு ஒன்று திரண்டார்களே, இது எப்படிச் சாத்தியமானது?

தமிழக முன்னாள் முதல்வர் காமராசரிடம் யாரோ கேட்டார்கள், ''நீங்களும் காந்தியும் சந்திக்கும்போது என்ன மொழி பேசுவீர்கள்?''

''மகாத்மாவுடன் பேசுவதற்கு மொழியே அவசியமில்லை'' என்றார் காமராசர். ''அவர் எந்த மொழியில் பேசினாலும் சரி, அதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.''

அதாவது, காந்தி ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ பேசினாலும், அந்த மொழியில் ஒரு சொல்கூடத் தெரியாத ஒரு தமிழர்கூட அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம் என்கிறார் காமராசர். அந்த அளவுக்குக் காந்தியின் மொழி எளிமையாக இருந்ததாம். அவருடைய முகபாவத்தை வைத்தே, அவர் என்ன சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொண்டுவிடலாமாம். ''படிக்காத விவசாயிகள், சாமானியர்கள், பாமரர்களுக்குக்கூடப் புரியும்படிதான் காந்தி எப்போதும் பேசிவந்தார்'' என்று காமராசர் விளக்குகிறார்.

காந்தி இப்படிப் பேசுகிறார் என்பதால், அவருக்குப் பண்டிதர்களின் மொழி தெரியாது என்று பொருளில்லை. அவர் விரும்பினால் கடினமான சொற்களைப் பயன்படுத்திப் பழங்கால மொழியில் பக்கம் பக்கமாக எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், கைதட்டல் வாங்கியிருக்கலாம். ஆனால், அதுபோன்ற பேச்சுகளெல்லாம் பொதுமக்களைச் சென்றுசேரப் பயன்பட்டிருக்காது. நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்குப் பெரும்பான்மை மக்களை ஒன்றுதிரட்டவேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு முதன்மையாக இருந்ததால், அதற்கேற்ப காந்தி தன்னுடைய மொழியை எளிமையாக்கிக் கொண்டார்.

''காந்திஜி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்துக்கும் வழிகாட்டியிருக்கிறார்'' என்கிறார் காமராசர். தான் வாசித்து, பரிசோதித்து அறிந்தவற்றை எல்லோருக்கும் சொல்லவேண்டும், அது அவர்களுக்குப் பயன்தர வேண்டும் என்கிற அக்கறைதான், காந்தியின் மொழியை வடிவமைத்திருக்க வேண்டும்.

நாம் எதை எழுதினாலும் சரி, பேசினாலும் சரி, அதனை வாசிக்கிறவர்கள், கேட்கிறவர்களுக்கு அது புரியவேண்டும், அவர்கள் என்ன நோக்கத்துக்காக அதை வாசிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, அந்த நோக்கம் நிறைவேறவேண்டும், அதற்கு நாம் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யவேண்டும், அந்த முனைப்பு இருந்தால், காந்தியைப்போல் எந்த மொழி பேசுகிறவர்களுடனும் நாம் உரையாடலாம்!

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us