PUBLISHED ON : ஜன 01, 2018

தோப்பு என்றால் என்ன, தோட்டம் என்றால் என்ன? என்பது பலருக்கும் தோன்றுகின்ற ஐயம். தோப்பு என்பதைத் தோட்டம் என்று கூறுவதோ, தோட்டம் என்பதைத் தோப்பு என்று கூறுவதோ பிழையாகும். அப்படியானால், இவ்விரண்டு சொற்களும் சுட்டும் பொருட்கள் என்னென்ன? அன்றாடப் பேச்சு வழக்கில் இச்சொற்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
சந்தைக்குச் சென்றால் காய்கறி விற்பவர் என்ன சொல்கிறார்? “தோட்டத்திலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்ற காய்கறிகள் இவை” என்கிறார்.
“தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்” என்று செய்தித்தாள் கூறுகிறது.
“வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைக்கலாம்” என்று புத்தகங்கள் விற்கின்றன.
“பாபிலோன் தொங்கும் தோட்டம்” என்று வரலாற்றில் படிக்கிறோம்.
“ஊரில் நிறையத் தோட்டம் துரவு இருக்கிறது” என்பார்கள்.
தொரவு என்பது பேச்சு வழக்கு. துரவு என்பது அச்சொல்லின் தூய வடிவம். “தோட்டம் துரவு” என்ற சொற்றொடரில் தோட்டத்திற்கான பொருள் ஒட்டியிருக்கிறது.
இங்கேதான் ஓர் இலக்கணக் கூறானது சொற்றொடரின் பொருளறிய உதவுகிறது. எப்படி? “தோட்டம் துரவு” என்பது, உம்மைத் தொகை. தோட்டமும் துரவும் என்று விரியும். உம்மைத் தொகையில் ஒரே இனமான இரண்டு பெயர்ச்சொற்கள்தாம் அடுத்தடுத்து வரும். பட்டிதொட்டி, காடுகரை, நஞ்சைபுஞ்சை, செடிகொடி, சேர, சோழ, பாண்டியர், ஆடல்பாடல் ஆகியவை உம்மைத் தொகைகள். ஒவ்வொரு சொல்லோடும் இடையிடையே உம் என்ற சொல்லுருபு ஒட்டிக்கொண்டு மறைந்திருப்பதால் அது உம்மைத்தொகை. பட்டியும் தொட்டியும், செடியும் கொடியும் என்று அத்தொகைகள் விரிவடைந்து பொருள்தரும்.
தோட்டம் துரவு என்ற உம்மைத் தொகையில், தோட்டமும் துரவும் ஒரே இனமான பொருளைத் தருகின்ற சொற்கள் என்பதை விளங்கிக் கொள்கிறோம். தோட்டம் என்ற சொல்லின் தெளிவான பொருளை அறிய துரவு என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். துரவு என்பதற்குப் “பாசனத்திற்குப் பயன்படும் பெருங்கிணறு” என்ற பொருள் கிடைக்கிறது. வற்றாத நீர்வளமுடைய கிணறுதான் துரவு. கிணற்று நீர்ப்பாசனத்தின் வழியாக உருவாக்கப்படும் வேளாண்மைப் பயிர்கள்தாம் தோட்டத்தில் விளைபவை. ஆக, நீர்ப்பாசனத்தால் வேளாண்மை நடக்குமிடம் தோட்டம். தோட்டத்தில் ஒரே பயிரின் வேளாண்மை நடக்காது. முதல் ஆறுமாதங்களுக்கு ஒரு பயிரும், அடுத்த ஆறு மாதங்களில் வேறு பயிரும் பயிரிடப்பட்டிருக்கும். காய்கறித்தோட்டம், பூந்தோட்டம், தேயிலைத் தோட்டம், கரும்புத் தோட்டம் என்று கூறுகிறோம்.
வீட்டுக் கொல்லையில் சிறியதாய்ச் செடிகொடிகளை வளர்த்தால், அதுவும் தோட்டம்தான். ஆக, தோட்டம் என்பது மனிதரால் செம்மைப்படுத்தப்பட்ட, நீர்வளமுள்ள நிலத்தில் வேளாண்மைக்குரிய தாவரங்கள் விளையும் நிலப்பகுதி என்பதை விளங்கிக் கொள்கிறோம்.
அடுத்து, தோப்பு என்ற சொல்லுக்கு வருவோம். தோப்பு என்ற சொல்லை அன்றாட வழக்கில் எப்படிப் பயன்படுத்துகிறோம்? மாந்தோப்பு, தென்னந்தோப்பு, புளியந்தோப்பு, பாக்குத்தோப்பு.
தோப்பு என்பதற்குச் சோலை என்று பொருள். நன்கு உயர்ந்து வளர்ந்த மரங்களால் ஆன பகுதிதான் தோப்பு. தோப்பில் ஒரே இனமான மரங்களும் இருக்கலாம். பல்வேறு மரங்கள் அடர்ந்த சோலைப்பகுதியாகவும் இருக்கலாம். தோப்பானது தலைமுறைகள் தாண்டி நிலைத்திருப்பது. ஒருமுறை வளர்த்து ஆளாக்கிய மரங்கள் பல தலைமுறைகளுக்குப் பலன்தரும். அதற்கு நீர்ப்பாசனம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.
பூந்தோப்பு, பூந்தோட்டம் என்று இருவகையாகவும் சொல்வார்கள். பூச்செடிகள் இருந்தால் அது பூந்தோட்டம். பூமரங்கள் இருந்தால் அது பூந்தோப்பு.
வாழைத்தோட்டமா, வாழைத்தோப்பா? வாழை என்பது மரம்தான். வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்த பகுதி என்பதால், வாழைத்தோப்பு என்று கூறலாம். வாழை மரத்தின் வாழ்நாள் ஓராண்டுக்கும் குறைவுதான்.குலை தள்ளியதும் ஒரு வாழைமரம் வாடிச் சாய்ந்துவிடும். அதனால் ஓரிடத்தில் ஒருமுறை வாழை பயிரிட்டுவிட்டு, அடுத்த ஆண்டில் அதே ஆண்டில் வேறு பயிர்களை விளைவிக்கலாம். அந்த நிலையாத் தன்மையால் வாழைத் தோட்டம் என்றும் கூறலாம். வீட்டுக்கொல்லையில் சிறிதாய் வாழைகளைப் பயிரிட்டிருந்தால் அது வாழைத்தோட்டம்தான். சிறிய அளவிலானது தோப்பாகாது. தனிமரம் தோப்பாகாது என்னும் பழமொழியே சான்று. தோப்பு என்பது எண்ணற்ற மரங்களால் அடர்ந்து பரவியிருக்க வேண்டும். தோட்டம் என்பது, சிறிதாய் பெரிதாய் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
- மகுடேசுவரன்
