PUBLISHED ON : ஜன 01, 2018

ஜனவரி 1, 1894 - சத்யேந்திரநாத் போஸ் பிறந்த நாள்
இந்திய இயற்பியலாளர். குவான்டம் இயற்பியலில் இவர் மேற்கொண்ட ஆய்வால் குவான்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்கிற துறை உருவானது. இவரது நினைவாக 'கடவுள் துகள்' என்று அறியப்படும் வளிமத்துக்கு 'ஹிக்ஸ் போஸான்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இவருக்கு பத்ம விபூஷண் விருது 1954இல் வழங்கப்பட்டது.
ஜனவரி 2, 1920 - ஐசக் அசிமோவ் பிறந்த நாள்
அறிவியல் புனைக்கதை எழுத்தாளர். எந்திர மனித இயல் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். இவரது கதைத் தொகுப்பு 'ஐ ரோபோ' திரைப் படமாகவும் வெற்றி பெற்றது. வானவியல், உயிரியல், கணிதம் போன்ற துறைகளிலும் புத்தகங்கள் படைத்துள்ளார்.
ஜனவரி 3, 1760 - வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்
ஆங்கிலேயரிடம், 'வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை' என்று துணிச்சலாகக் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, மற்ற மன்னர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தனர். இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்.
ஜனவரி 4, 1643 - ஐசக் நியூட்டன் பிறந்த நாள்
புவிக்கு ஈர்ப்பு விசை உள்ளது என்பதைக் கண்டறிந்த அறிவியலாளர். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளில் ஆய்வுகள் செய்தார். பட்டகம் எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டறிந்தார்.இவருடைய இயந்திரவியல் விதிகள் பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பயன்படுகின்றன.
ஜனவரி 4, 1809 - லூயி பிரெய்லி பிறந்த நாள்
பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி எழுத்துகளை உருவாக்கினார். 6 புள்ளிகள் கொண்ட பிரெய்லி முறையின் முதல் புத்தகத்தை 1829இல் வெளியிட்டார். உலக நாடுகள் பலவும் அஞ்சல் தலை, நினைவு நாணயங்கள் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தி உள்ளன.
ஜனவரி 6, 1883 - கலீல் ஜிப்ரான் பிறந்த நாள்
உலகின் சிறந்த சிந்தனையாளர் களில் ஒருவர். எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர் என பன்முகத் திறன் கொண்டவர். இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனித எண்ணங்களையும் பிரதிபலித்தன. 'ஒட்டு மொத்த உலகமும் எனக்கு தாய்நாடுதான். அனைவரும் என் சக குடிமகன்கள்' என்று கூறுவார்.
