தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கண்ணா, காதா, மனமா

கண்ணா, காதா, மனமா

கண்ணா, காதா, மனமா


PUBLISHED ON : ஏப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தகத்தில் கதை வாசிப்பீர்கள். ரசிப்பீர்கள். ரேடியோவில், ஒலி வடிவத்தில் கதை கேட்டிருக்கிறீர்களா? வீடியோவில் படம் பார்க்காத ஆளே இருக்க மாட்டீர்கள். இந்த மூன்றுக்கும் இடையில் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? ஒரு சாம்பிளுக்கு இங்கே, ஒரு கதை மூன்று வடிவங்களிலும் தரப்பட்டுள்ளது. காதால் கேட்பதைவிட, காட்சியாகப் பார்ப்பதைவிட, வாசிப்பதில் உங்கள் கற்பனைத் திறன் அதிகமாகச் செயற்படுவதை உணர்வீர்கள்.

எழுத்து வடிவம்

காட்டில் மழை பெய்துகொண்டு இருந்தது. ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியபடி ஒரு மரத்தடியில் ஒதுங்கியது.

அந்த மரத்தின் பொந்தில் ஒரு கூடு இருந்தது. அதில் ஒரு பறவை, தன் குஞ்சுகளுடன் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும், பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.

மனம் பொறுக்காமல் “குரங்காரே! பாருங்கள். ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு வாழ்கிறேன். இந்த மழையிலும் நானும் குஞ்சுகளும் கவலை இன்றி இருக்கிறோம். நீங்களும் ஒரு பாதுகாப்பான கூடு கட்டியிருந்தால், இப்படி நனைய வேண்டாம் அல்லவா?” என்று புத்தி சொன்னது. அதைக் கேட்ட குரங்குக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. “உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்” என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டைப் பிய்த்து எறிந்தது.

பறவைக்குப் புத்தி வந்தது, 'அறிவுரைகளைக்கூட, அதைக் கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்ல வேண்டும்' என்று.

ஒலி வடிவம்

'ஸ்ஸ்ஸோஸ்ஸ்ஸோ' என்று மழை பெய்யும் ஓசை. இடையிடையே 'ஸ்வீஷ்ஷ்… ஸ்வீஷ்ஷ்' என்று மின்னல் ஒலியும் இடிச் சத்தமும் கேட்கின்றன. 'கீச்கீச்' என்று பறவைகள் இரைகின்றன. (ஒரு பறவைக் குஞ்சு பேசுகிறது. (பேசுவது பறவைகள் என்பதைக் குறிக்க, ஒவ்வொரு வசனத்தின் முன்பும் 'கீச்கீச்' என்பதைச் சொல்ல வேண்டும்.)

“கீச்கீச்… அம்மா, நம் மரத்தைப் பார்த்து யாரோ ஓடி வருகிறார்கள்…” (இந்த வசனம் குழந்தைக் குரல் போல் இருக்க வேண்டும்.)

தொடர்ந்து பெரிய பெண் குரலில், “கீச்கீச்… என் அன்புக் குஞ்சே, அது நம் குரங்கார்தான். நம் காட்டில் இவ்வளவு பெரிய மழை பெய்வதால், ஒதுங்க இடம் தேடி வருகிறார்.”

தொப் தொப் என்னும் குரங்கின் காலடிச் சத்தம் ஒலித்து நிற்கிறது. “ஹீஹீஹீ… இந்த மரத்தடியில் நிற்போம்.” (பேசுவது குரங்கு என்பதைக் குறிக்க, அது ஹீஹீஹீ என்று இளிப்பது போன்ற ஒலி இருக்க வேண்டும்.)

குஞ்சுப் பறவை: “கீச்கீச்… அம்மா, பாருங்கள்… நம் குரங்காரின் உடல் நடுங்குகிறது. கீச்கீச்…”

அம்மாப் பறவை: “கீச்கீச்… பாவம். குரங்காரே… என்னைப் பாருங்கள். முன்யோசனையோடு கூட்டைக் கட்டினேன். இப்போது, நானும் என் குஞ்சுகளும் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்களும் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கலாமே…”

குரங்கு: “ஹீஹீஹீ உர்ர்ர்ர்ர்… என்னைப் பார்த்தால் கேலியாக இருக்கிறதா? என்ன செய்கிறேன் பார்…”

குஞ்சுப் பறவை: “கீச்கீச்… ஐயோ அம்மா… குரங்கார் மரத்தின் மீது கோபத்தோடு ஏறி வருகிறார். கீச்கீச்…”

குஞ்சுகளும் தாய்ப் பறவையும் சேர்ந்து கத்தும் ஒலி. “கீச்கீச்கீச்கீச்…”

அம்மாப் பறவை: “கீச்கீச்கீச்… ஐயய்யோ, நம் கூட்டை எல்லாம் பிய்த்துப் போட்டுவிட்டாரே. குஞ்சுகளா வாருங்கள், நாம் வேறு ஏதேனும் மரப்பொந்துக்குப் போய்விடலாம்…”

குஞ்சுப் பறவை: “கீச்கீச்… அம்மா, அறிவுரையைக்கூட, அதை ஏற்றுக்கொள்பவர்களுக்குத்தான் சொல்ல வேண்டும். இல்லையா அம்மா?

மழை ஓசையோடு ஒரு மெல்லிய சோக இசை ஒலிக்கிறது. ஒலி அளவு மெல்ல மெல்லக் குறைந்து முடிகிறது.

காட்சி வடிவம்

டாப் ஆங்கிளில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதி லாங் ஷாட்டில் தெரிவது. அது அப்படியே Zoom ஆவது. இப்போது மழை பெய்துகொண்டு உள்ளது. Zoom ஆன கேமரா, ஒரு மரத்தில் இருக்கும் கூட்டைக் காட்டுவது. அதில் ஒரு தாய்க் குருவியும் இரு குஞ்சுக் குருவிகளும் இருப்பது. அந்தக் கூட்டில் மட்டும் மழைத் துளிகள் விழாமல் சுற்றிலும் விழுவது தெரிவது.

இப்போது நமக்கு நேர்கோட்டில் கோணம் தெரிய, ஒரு குரங்கு, தன் தலை மேல் கைகளை வைத்து மழைத்துளிகளை மறைத்துக்கொண்டு ஓடி வருவது. இந்த மரத்தின் கீழே ஒண்டுவது. நின்றுகொண்டு வளைந்து, 'மழை நிற்குமா?' என்பதைப் போல வானத்தைப் பார்ப்பது.

குரங்கு: “காட்டு மழை இப்பிடித்தான். எப்பப் பெய்யும், எப்ப நிக்கும்னே தெரியாது. இன்னிக்கு எப்பத்தான் இரை தேடப் போகப்போறேனோ?”

மறுபடி டாப் ஆங்கிள். பறவைக் கூடும், மரத்தின் கீழே குரங்கு நனைந்து நடுங்கியபடி நிற்பதும் தெரிகிறது. தாய்க் குருவி பேசுகிறது.

தாய்க் குருவி: “அச்சச்சோ குரங்காரே… நல்லா நனைஞ்சுட்டீங்களே…”

குரங்கு: (அண்ணாந்து மேலே பார்க்கிறது.) “என்னடா, கொரல் மட்டும் வருது? ஓ… குருவியம்மாவா? ஒனக்கென்ன சொகுசா உக்காந்திருக்கே. நானில்ல நனைஞ்சு நிக்கிறேன்…” (இதைச் சொல்லும்போது குரங்கின் முகத்தில் கோபம்.)

குருவி: “அதைத்தான் குரங்காரே சொல்ல வந்தேன். என்னை மாதிரி நீங்களும் ஒரு கூடோ குகையோ கட்டி இருந்தீங்கன்னா இப்பிடிக் கஷ்டப்பட வேண்டாமே…”

குரங்கு: “ஏய்… என்னைப் பார்த்தா உனக்குக் கிண்டலா இருக்கில்ல? என்ன பண்றேன் பாரு…” (என்றபடி குதித்து மரத்தின் மீது ஏறுகிறது.)

மரத்தின் கீழ்ப்புறத்தில் இருந்து கோணம் காட்டப்பட குரங்கு மரத்தில் ஏறுவது தெரிகிறது.

கோணம், டாப் ஆங்கிளுக்கு மாற குருவிகள் கத்துவது.

குஞ்சுக் குருவிகள்: “அம்மா… அம்மா…”

தாய்க் குருவி: “ஐயய்யோ, குரங்காரே என்ன பண்ணப்போறீங்க?”

கூட்டில் இருந்து குருவிகள் பறந்து வெளியேற, கோபத்தோடு வந்த குரங்கு, கூட்டைப் பிய்த்து எறிகிறது. கேமரா, குரங்கின் முகத்தை நெருங்க, குரங்கின் கண்கள் மட்டும் தெரிவது. அந்தக் கண்கள் கோபத்தில் மின்னுகின்றன.

மழை நின்று வானம் வெறித்திருக்க, நீல வானப் பின்னணியில் தாய்க் குருவியும் குஞ்சுக் குருவிகளும் ஒன்றாகப் பறப்பது'

குஞ்சுக் குருவி 1: “ஏம்மா குரங்கார் அப்பிடிச் செஞ்சார்?”

தாய்க் குருவி: “அவர் நல்லதுக்காக அறிவுரை சொன்னேன். அவர் புரிஞ்சுக்காமக் கோபப்பட்டுட்டார். தேவைப்படாதவங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.”

பறவைகள் தொலைவில் சென்று மறைய… கேமராவின் ஷட்டர் மெல்ல மூடிக்கொள்ள இருள் சூழ்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us