
மு.வரதராசனார்
25.4.1912 - 10.10.1974
திருப்பத்தூர், வேலூர்.
சமுதாயச் சீர்திருத்தவாதி; தமிழறிஞர்; மொழிநூல் ஆய்வாளர்; படைப்பாளர்; பல்கலைக்கழகத் துணைவேந்தர் என, பல துறைகளில் சிறந்து விளங்கினார் டாக்டர் மு.வரதராசன்.
தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வியில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். 1935இல் வித்வான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக வந்து பரிசு பெற்றார். பின்பு, திருப்பத்தூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும், சங்க இலக்கியத்தில் இயற்கை என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகச் செயற்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் 1971 முதல் 1974 வரை மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றார்.
மு.வ. எழுதிய நாவல்கள், இளைஞர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை ஏற்படுத்தி, பாட நூல்களிலும் இடம் பெற்றன. புதினங்கள், புனை கதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, இலக்கிய ஆராய்ச்சி, திறனாய்வு, கட்டுரை, உரைநடை, சிறுவர் நூல்கள் என, பலவற்றை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்தார்.
இவரது 'அகல் விளக்கு' நாவலுக்கு 1961ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. அதோடு, இவரது நூல்களுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரராக இன்றும் திகழ்கிறார் மு.வ.

