PUBLISHED ON : ஜன 15, 2018

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, மாடு விடும் திருவிழா என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஏறுதழுவுதல் என்று அழைக்கப்பட்டது.
ஏறு தழுவுதல் முல்லை நிலத்தில் நடந்தது. ஏறுதழுவுதல் நடைபெறும் நாளை பறை அறிவித்து ஊருக்கு தெரியப்படுத்துவார்கள்.
முல்லை நில மகளிரை மணக்க விரும்புவோர், அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கமாகும். அப்படிக் காளையை அடக்கும் ஆண்களுக்கு பெண் மணமுடித்து கொடுக்கப்பட்டாள்.
எருதுக்கு பயந்து பின்வாங்கும் ஆண்களை, பெண்கள் மணக்க மாட்டார்கள். பாய்ந்து வரும் எருதை, இளைஞர்கள் எதிர்த்து நின்று அதன் திமிலைப் (முதுகில் உயரமாக இருக்கும் பகுதி) பிடித்து நிறுத்தி அடக்குதல் ஏறுதழுவுதல்.
வீரத்தின் அடையாளமாக அன்றைய ஆண்கள் ஏறுதழுவுதலைக் கருதினர்.
ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கிய நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில், ஒரு பிரிவாக 'முல்லைக்கலி' உள்ளது. அதில் ஏறுதழுவுதல் பற்றி பாடப்பட்டுள்ளது.
காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டார்களாம். இக்கருத்தை
'கொல்லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்'
என்கிறது கலித்தொகை
(103:63-64. கொல்லேறு - எருது. மறுமை - அடுத்த பிறவி).
ஓர் ஆண் மகன், காளையை அடக்கும் நிகழ்வை பரண் மீது அமர்ந்தோ, வரிசையாக நின்றோ பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காளை அடக்கச் செல்லும்முன், மாமரத்தின் கீழ் இருக்கும் கடவுளையும், ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து இருக்கும் தெய்வத்தையும் வணங்கிச் சென்றார்கள். இதனை,
'துறையும் ஆலமும் தொல் வலி மரா அமும்
முறையுளி பரா அய், பாய்ந்தனர், தொழூஉ'
என்ற முல்லைக்கலி (101) வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஏறு தழுவும்போது பயம், அச்சம் போன்ற உள்ளுணர்வுகளை விலக வேண்டும் என்பதற்காக வாத்தியங்கள் இசைப்பர், பறையடிப்பர். விழா முடிந்த பிறகு மகிழ்ச்சியின் அடையாளமாகப் பெண்கள் குரவைக் கூத்து நடத்துவர்.
ஏறுதழுவுதலின் ஒரு வடிவம்தான் ஜல்லிக்கட்டு. பொங்கலில் இருந்து தொடர்ந்து ஓரிரு மாதங்கள் வரை, ஜல்லிக்கட்டு தமிழகம் முழுக்க நடக்கும்.
