PUBLISHED ON : டிச 26, 2016

தஞ்சையை 15ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்களில் ஒருவர் ரகுநாத நாயக்கர். இசைத் துறையில் பல புதுமைகள் செய்தவர்.
'சங்கீத சுதா' என்னும் இசை நூல், சரசுவதி மகால் நூலகத்திலுள்ளது. இதை இயற்றியவர் ரகுநாத நாயக்கர். இதில், இசை, இசைக்கருவிகள் பற்றிய நுட்பங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 'ஜெயந்த சேனா' என்ற ராகத்தையும், 'ராமாநந்தா' என்னும் தாளத்தையும், ரகுநாத நாயக்கர் அறிமுகம் செய்துள்ளார்.
வீணை மீட்டுவதில் வல்லவர் இவர். வீணையில் அப்போதிருந்த குறைபாடுகளை நீக்கினார். அனைத்து ராகங்களையும் ஒரே வீணையில் மீட்டும் வகையில் வடிவமைத்தார். 'ரகுநாத மேளம்' என்ற இசைநுட்பத்தை உருவாக்கினார். வீணை அமைப்பில் இவர் செய்த மாற்றமே, இன்று வரை தொடர்கிறது. இது, 'தஞ்சை வீணை' என்று அழைக்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர் புராணத்தில், வீணை, விபஞ்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருந்துதேவன்குடி (ஆண்டாங்கோயில்) கல்வெட்டில், வீணை மீட்டியவருக்கு, நிலம் கொடையாக அளித்ததை, தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டு வீணைகளில், 'பத்தல்' எனப்படும் குடம் நீள்வட்டமாகவும், 'கோடு' எனப்படும் தண்டு உயரம் குறைவானதாகவும் இருந்தது. இதன் தண்டில் 16+1 மெட்டுகள்தான் இருந்தன. இவை, 'கோல்' எனப்படும் உலோகக் குச்சிகளால் உருவாக்கப்பட்டு, மெழுகு கொண்டு தண்டோடு இணைக்கப்பட்டிருக்கும். இதை மேளம் என்பர். இதில் குறிப்பிட்ட ராகங்களை மட்டுமே இசைக்க முடியும்.
இக்கருவியைக் கையாள்வதில் இடர்ப்பாடு இருந்தது. மன்னர் ரகுநாதர், இதை மாற்றி அமைத்தார். 'பத்தல்' எனப்படும் குடத்தை, வட்டவடிவ குடமாக மாற்றி, கோடு எனப்படும் தண்டை நீளமாக அமைத்து, அதில் 'தந்திரிகரம்' என்னும் மூடு பலகையை இணைத்தார். அதன் மேல் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த 16+1 மெட்டுகளுடன், மேலும், எட்டு மெட்டுகளை இணைத்தார். 25 மெட்டுகளுடன் இரண்டு தாள நிலைகளை உடைய புதிய வீணையை இவர் உருவாக்கினார். இதற்கு, 'ரகுநாத மேளம்' என்று பெயர். இதன் மூலம், வீணை இசைக் கலைஞர்கள், எந்த பண்ணையும், கற்பனை வளத்திற்கு ஏற்ப, வீணையின் மெட்டுகளை மாற்றாமலேயே எளிமையாக வாசிக்க முடியும்.
- மணி. மாறன்.