PUBLISHED ON : டிச 26, 2016
வீட்டில் மின்சார அட்டையை எடுத்துப் பாருங்கள், அதில் 'மின் வாரியம்' என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
'வாரியம்' என்றால், குழு அல்லது அமைப்பு என்று பொருள். மின்சாரம் தொடர்பான விஷயங்களைக் கவனித்துக் கொள்வதால், அது 'மின் வாரியம்', இதேபோல் குடிநீர் வாரியம், வீட்டுவசதி வாரியம் என்று பல குழுக்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும், அந்தந்தத் துறையைக் கவனித்துக் கொள்கின்றன.
இது போன்ற அமைப்புகளை நிறுவுவதில், பழங்காலத்திலிருந்தே தமிழர்களுக்கு தேர்ச்சி இருந்தது. பலவகை வாரியங்களை அமைத்து இருந்தனர். பழந்தமிழர் அமைத்திருந்த சில வாரியங்களும் அவற்றின் பணிகளும்:
* ஏரி வாரியம்
* தோட்ட வாரியம்
* பொன் வாரியம்
* கோவில் வாரியம்
* கழனி வாரியம் (வயல்களை நிர்வகிக்கும் வாரியம்)
* தடிவழி வாரியம் (பெரிய வழிகளை நிர்வகிக்கும் வாரியம்)
* பஞ்சவார வாரியம் (வரி வசூலிக்கும்/பஞ்சம் ஏற்படும்போது மக்களைக் காக்கும் வாரியம்)
இவை அனைத்துக்கும் முதன்மையாக, 'சம்வத்சர வாரியம்' என்ற அமைப்பு இருந்தது. இது, அந்த ஊரில் நடைபெறும் பொதுவான பணிகளைக் கவனித்துக் கொண்டது. பிரச்னைகள் வரும்போது, விசாரித்துச் சரியான தீர்மானங்களை எடுக்க உதவியது.
திறமையும், பொதுநல எண்ணமும் கொண்ட மக்கள்தான், ஒவ்வொரு வாரியத்திலும் இடம்பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள். அவர்கள் யார் என்பதை, அரசனும், பெரியோரும் தெளிவாக வரையறுத்திருந்தார்கள். அந்தத் தகுதிகளைக் கொண்டவர்கள், தாங்களே முன்வந்து பொதுநலப் பணியாற்றினார்கள்.
தனிநபரின் நன்மையைவிட, ஊரின் நன்மையே இவர்களுடைய இலக்காக இருந்தது.
இவ்வாறு, ஊர் மக்கள் தங்களை ஆண்டுகொள்ளும் முறை, 'ஊராட்சி' என்று அழைக்கப்படுகிறது. சற்றே பெரிய ஊர்களில் இது, 'நகராட்சி' எனவும், மிகப்பெரிய ஊர்களில், 'மாநகராட்சி' எனவும் அழைக்கப்படுகிறது.
- என். சொக்கன்