
தமிழகத்தின் தலைநகரம் சென்னை. பெரும்பாலும் தமிழர்கள் வாழ்கின்ற ஊர். ஆனால், இந்த ஊருக்கு ஒருகாலத்தில், ஆந்திரா உரிமை கோரியது .
'மதராஸ் மனதே' என்பதுதான் அந்தப் போராட்டத்தின் முழக்கம். தெலுங்கு மொழியில் இதன் பொருள், 'மதராஸ் (சென்னையின் அன்றைய பெயர்) எங்களுடையது.'
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது, ஆந்திரம் என்ற மாநிலமே இல்லை. 1952ம் ஆண்டுதான், தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது, அவர்கள் சென்னையைத் தங்கள் மாநிலத்தின் தலைநகரமாக்க கோரினர்.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் இதைக்கேட்டு வெகுண்டெழுந்தார்கள். குறிப்பாக, தமிழரசுக் கழகத்தின் தலைவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் இதைக் கடுமையாக எதிர்த்தார். 'சென்னை தமிழகத்துக்குத்தான் சொந்தம்' என்று தீவிர போராட்டத்தில் இறங்கினார்.
அப்போதைய மத்திய அரசு, சமரசத்துக்கு முயன்றது. 'சென்னை நகரம் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கட்டும்' என்றது.
இதை, தமிழகத் தலைவர்கள் ஏற்கவில்லை, 'ஆந்திரம் என்ற மொழிவாரி மாநிலம் அமைவதை ஆதரிக்கத் தயார்; ஆனால், தங்களுக்கான தலைநகரத்தை அவர்களேதான் தங்கள் எல்லைக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும். சென்னை, முழுக்க முழுக்க, தமிழகத்துக்குச் சொந்தமானது' என்றனர்.
தமிழகத்தின் குரலை மத்திய அரசு பரிசீலித்தது. இதனால், ஆந்திரத்துக்கு வேறு தலைநகரத்தைத் தேடிக்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சென்னை தமிழகத்தில் நிலைத்தது.
சில ஆண்டுகளுக்குப்பிறகு, கிட்டத்தட்ட இதேபோன்ற இன்னோர் உரிமைப்போராட்டமும் தமிழகத்தில் நிகழ்ந்தது. இந்தமுறை, திருத்தணி என்கிற நகரத்துக்காக.
ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டபோது, திருத்தணியை அந்த மாநிலத்தோடு இணைத்துவிட்டார்கள். ஆனால், மொழி ரீதியிலும், கலாசார ரீதியிலும் திருத்தணி தமிழகத்துடன் அதிகத் தொடர்புடையது.
ஆகவே, ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்கள், மீண்டும் போராட்டங்களைத் தொடங்கினர். திருத்தணியில் வாழ்கிற தமிழ்பேசும் மக்களும், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்விளைவாக, 1960ம் ஆண்டு, திருத்தணி மீண்டும் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக, இந்த இரு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இருந்த வேறு சில பகுதிகள், ஆந்திரத்துக்குத் தரப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில், ஆந்திரத்துடன் மட்டுமல்ல, கேரளத்துடனும் தமிழகம் பல உரிமைப் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. தமிழ்பேசும் மக்கள் அதிகம் வாழ்கிற பல்வேறு பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடாதபடி காத்தவை, இந்தப் போராட்டங்கள்தான்.
- என். ராஜேஷ்வர்