PUBLISHED ON : ஆக 29, 2016

சாந்தி: மஞ்சு! ஒரு அர்ஜென்ட் வொர்க் இருக்குது. அப்ப, நான் வரட்டுமா?
மஞ்சு: 'வரட்டுமா'ன்னு சொல்லிட்டு, கெளம்புற? ஓ... 'இப்போப் போகட்டுமா'ங்கிறதைத்தான் எதிர்ப்பதமாச் சொல்றியா?
சா: எல்லாரும் சொல்றதைத்தானே சொன்னேன். ஆளை விடு.
ம: நான் உன்னைப் பிடிச்சுக்கிட்டா இருக்கேன்? எப்பிடி விட முடியும்?
சா: ஐயய்யோ சாமீ. எனக்கு மயக்கம் வரப் போகுது
ம: மயக்கம் வருதா, போகுதா?
சா: இவ ஒருத்தி, ஏட்டிக்குப் போட்டியாப் பேசிக்கிட்டு.
ம: நான் ஒருத்திதான் சாந்தி. நீ கூட ஒருத்திதான்!
சா: ஏன்டி! இன்னைக்கு ஒரு முடிவோடதான் ஆரம்பிக்கிற போலருக்கு?
ம: இல்ல இல்ல. ஒரு ஆரம்பத்தோடதான் ஆரம்பிக்கிறேன்.
சா: ஏய்... என்னடி சினிமா மாதிரி நீளமாப் பேசுற?
ம: சினிமான்னாப் பேசக்கூடாதா? சினிமா மாதிரி சீன் சீனா இருந்தாத்தான் பேசறதுக்குச் சிறப்பா இருக்கும்.
சா: முடியல. வா... சேர்ந்து போய் ஒரு டீ சாப்பிடலாம்.
ம: சேர்ந்துன்னா எப்பிடி, கட்டிப் பிடிச்சுக்கிட்டா, இல்ல மாற்றான் மாதிரி ஒட்டிக்கிட்டா?
சா: இன்னும் முடிக்கலயா நீ? தனித்தனியாவே ஒண்ணாப் போகலாம்னேன்.
ம: வேணாம்... வேணாம். நா ஒண்ணு, நீ ஒண்ணு மொத்தம் ரெண்டாப் போகலாமே...
சா: அர்ஜென்ட் வொர்க் இருக்குடி. நீ இப்பிடியே பேசிக்கிட்டிருந்தா, உம் மண்டையை ரெண்டாக்கிடுவேன்.
ம: அப்ப என்னை எல்லாரும் ரெட்டை மண்டைன்னு கூப்பிடுவாங்களா?
சா: ஐயய்யோ... இவ பண்ற சேட்டைய என்னால தாங்க முடியலயே...
ம: தாங்க முடியலயா? அவ்வளவு வெயிட்டாவா இருக்குது?!
சா: ஆமா. உனக்கு ரொம்ப ஹெட் வெயிட். நீ எல்லாரையும் டார்ச்சர் பண்ற?
ம: என்கிட்டதான் டார்ச் இல்லயே? அப்புறம் எப்படி டார்ச்சர் பண்ண முடியும்?
சா: நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தா இன்னைக்குப் பொழுது வெளங்கிடும்.
ம: 'வெளங்கிடும்'ன்னு சொல்றியே நேர்மறையா, எதிர்மறையா?
