sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தமிழென்று கொட்டு முரசே!

/

தமிழென்று கொட்டு முரசே!

தமிழென்று கொட்டு முரசே!

தமிழென்று கொட்டு முரசே!


PUBLISHED ON : ஜூலை 18, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 18, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேர அரசர் பெருஞ்சேரல் இரும்பொறையைக் காண விரும்பினார் புலவர் மோசிகீரனார். எழுத்தாணியும், ஓலைச்சுவடியுமாக அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார். நீண்ட பயணம் சோர்வைக் கொடுத்தது. களைப்பாறிச் செல்ல நேரம் இல்லை. தொடர்ந்து நடந்தார்.

தளர்வுடன் வந்தவரை காவலர்கள் அடையாளம் கண்டு உள்ளே செல்ல அனுமதித்தனர். அரண்மனைக்குள் பிரவேசித்த புலவர், அங்கே இருந்த கட்டில் ஒன்றில் அயர்வுடன் அமர்ந்தார். 'சிறிது களைப்பாறியப் பிறகு அரசரை போய் பார்க்க வேண்டும்' என்று நினைத்தவர், ஓலைச்சுவடியும், எழுத்தாணியும் இருந்த துணி மூட்டையை கட்டிலின் ஓர் ஓரத்தில் வைத்தார். அப்படியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்.

எவ்வளவு நேரம் அப்படி உறங்கினாரோ... சில்லென்ற காற்று முகத்தில் இதமாய் வருடிக்கொடுக்க, கண் விழித்துப் பார்த்தார் புலவர். அடுத்த நொடி பதறி எழுந்தார்.

''அரசே! என்ன காரியம் செய்கிறீர்கள்? தாங்கள் எனக்குக் கவரி வீசுவதா?'' வெடவெடத்தார் புலவர். ஆமாம்... மோசிகீரனாருக்கு, மன்னர் கவரி வீசிக்கொண்டு இருந்தார்.

''நீங்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தீர்கள். காற்று வராமல் புழுக்கமாக இருந்தது. அதனால் கவரி வீசினேன்...'' என்றார் அரசர்.

புலவருக்கு உள்ளம் ஆடியது. நாணிக் குறுகினார். 'செங்கோல் பிடிக்கும் மன்னரின் கரங்கள் சாதாரண ஒரு தமிழ்ப் புலவனுக்கு கவரி வீசுவதா?'

மன்னரின் அருகில் சில காவலர்கள் விறைப்புடன் நின்றிருந்தனர்.

மன்னர் கண்ணசைக்க, அருகே இருந்த முரசைத் தூக்கிக் கட்டிலில் வைத்தனர் காவலர்கள்.

புலவருக்கு திக்கென்றது. ''ஐயோ இது முரசு வைக்கும் கட்டிலா? அதிலா நான் அயர்ந்து உறங்கினேன்?'' அதிர்வுடன் காவலர்களையும் மன்னரையும் பார்த்தார் மோசிகீரனார்.

''ஆம் புலவரே! முரசைச் சுத்தம் செய்வதற்காகக் காவலர்கள் எடுத்துச்சென்றிருந்தனர். அந்த நேரம் பார்த்து நீங்கள் அதில் வந்து அமர்ந்து உறங்கிவிட்டீர்கள்.''

அரசர் சாதாரணமாகக் சொல்ல, புலவருக்கோ நடுக்கம் அதிகமானது. முரசு கட்டிலில் அமர்வது அரச குற்றம். மன்னரையும் நாட்டையும் அவமதித்ததற்குச் சமம். அப்படிச் செய்பவர்களுக்கு மரண தண்டனைதான் என்பதைப் புலவர் அறிவார். தான் உறங்கியது முரசு கட்டில் என்பதுதான் புலவர் அறியாதது.

என்ன நடக்கப்போகிறதோ என்று சுற்றி இருந்தவர்கள் பீதியுடன் பார்க்க, மன்னரோ, ''வாருங்கள் அவை மண்டபத்துக்குச் செல்வோம்...'' என்று புலவரை வரவேற்று அழைத்துச் சென்றார்.

அங்கே புலவர் புசிப்பதற்கு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. பட்டாடைகள், மணிகள், அணிகலன்கள் என்று பரிசுகள் தரப்பட்டன. மன்னரின் அரண்மனையில் சிறிது நாட்கள் தங்கியிருந்த புலவர் ஒரு நாள் விடைபெற்றுச் சென்றார். செல்லும் முன் அவர் நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்த அந்தக் கேள்வியை மன்னரிடம் கேட்டே விட்டார்.

''முரசு கட்டிலில் அமர்பவர்களுக்கு மரண தண்டனை உண்டு. ஆனால் எனக்கு அது தரப்படவில்லையே ஏன் அரசே?''

மன்னர் சிரித்தார். ''உங்களைத் தண்டித்தால், தமிழைத் தண்டித்தது போல. உங்களால் தமிழ் இன்னும் வளரட்டும், வாழட்டும்'' புன்னகைத்தார் அரசர்.

மன்னரின் தமிழ்ப்பற்றை எண்ணி வியந்து நின்றார் புலவர்.

வெற்றிக்காக கொட்டுவது வீர முரசு. தான தருமங்கள் செய்யும் போது கொட்டுவது கொடை முரசு, திருமணத்தில் ஒலிப்பது மண முரசு, யாகங்கள் செய்யும் போது வேள்வி முரசு, காவலர்கள் காவல் செய்யும் பொழுது அடிப்பது காவல் முரசு.






      Dinamalar
      Follow us