PUBLISHED ON : ஜூலை 18, 2016

மங்கள் பாண்டே பிறந்த தினம் ஜூலை 19
19.07.1827 - 08.04.1857
''சகோதர வீரர்களே! நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்காமல் அவமதிக்கும் இந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திடுவீர்! நம்மை அடிமைப்படுத்தி மிருகங்களைப் போல நடத்தும் இந்த அந்நியர்கள் மீது பாயுங்கள். இவர்களைத் துரத்தி நமது நாட்டை மீண்டும் பழைய உன்னத நிலைக்கு உயர்த்தச் செயல்படுங்கள்!” என்று உரக்கக் கூவி இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்குக் காரணமாக இருந்தார் மங்கள் பாண்டே.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்தியக் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில், 34ஆவது பிரிவு என்ற சிறப்புப் படையில் சிப்பாயாகப் பணி புரிந்தார். கல்கத்தாவின் பராக்பூர் நகரில் மார்ச் 29, 1857ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பில், “கண்ணில் படும் ஆங்கிலேயர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ளுவேன்” என்று சபதம் போட்டு, கையில் துப்பாக்கி ஏந்தினார். அதே நேரத்தில் இந்திய சிப்பாய்கள் பலர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார்கள். இது, கிழக்கிந்திய கம்பெனியின் லெப்டினன்ட் போ (Baugh) என்பவருக்குத் தெரிந்ததும், சிப்பாய்களை அடக்க, குதிரையில் விரைந்தார்.
துப்பாக்கியுடன் திரிந்த பாண்டேவைப் பார்த்ததும் சுட ஆரம்பித்தார். இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதலின் இறுதியில், மங்கள் பாண்டே சிறைப் பிடிக்கப்பட்டார். லெப்டினென்ட் போ, பாண்டேவின் வாள் வீச்சில் காயமானார். இதை அடுத்து விசாரணை செய்யப்பட்டு ஏப்ரல் 8, 1857ல் மங்கள் பாண்டே தூக்கில் இடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29!
அதன் பிறகே, இந்தியா முழுக்க புரட்சி பரவியது. ஒற்றை நாளில் ஏற்பட்ட புரட்சி அல்ல அது! ஆங்கிலேய ஆதிக்கத்தின் நூறாண்டு கால ஆட்சிக் கொடுமைகளுக்கு, பதில் சொல்லும் விதமாக எழுந்தது.
இவை எல்லாவற்றிற்கும் காரணமாக அமைந்த பாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் சுதந்திர எழுச்சிக்கு வித்திட்டது. இந்திய விடுதலையை உறுதி செய்த இந்த வீரப் போர் ஒரு வருடம் நீடித்தது. தோல்வி அடைந்தாலும் இந்தியர்கள் கோழைகள் இல்லை என ஆங்கிலேயர்களுக்கு அடித்துச் சொன்னது இந்தப் புரட்சி!

