PUBLISHED ON : மார் 09, 2020
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறோம். அது மட்டுமே போதாது. தமிழ்மொழியில் நாள்தோறும் பத்துப் புதிய சொற்களையேனும் அறிந்து வைக்க வேண்டும். அப்போதுதான் நம் சொல்லறிவு பெருகும். நாம் நன்கறிந்த தமிழ் மொழியாகவே இருந்தாலும் ஒரு செய்யுளுக்கு உடனே பொருள் விளங்குவதில்லை. ஏனென்றால், செய்யுளில் பயின்று வரும் சொற்களின் பொருள் நமக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆங்கிலத்தில் இவ்வாறு இல்லை. அம்மொழி மக்கள் அன்றாடம் புதிய சொற்களைத் தொடர்ந்து அறிகிறார்கள். Vocabulary எனப்படும் சொல்லறிவைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்கிறார்கள். அரிய சொற்களைத் தேடிச் சென்று பொருள் கண்டுபிடிக்கிறார்கள். நாமும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
புதிய சொற்களை அறிவதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பெயர்ச்சொற்களை அறிவது. இன்னொன்று வினைச்சொற்களை அறிவது. வினைச்சொற்களை அறிவதுதான் மிகவும் இன்றியமையாதது. எனவே, அரிய வினைச்சொற்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்போம்.
மதுகையிலார் - மதுகை என்பது வலிமையைக் குறிக்கும். வலிமை இல்லாதவரைக் குறிக்கும் சொல் மதுகையிலார்.
உருக்கரந்தான் - கரந்தான் என்றால் மறைந்தான். உருக்கரந்தான் என்றால் தன் உருவத்திலிருந்து இளைத்துப்போய் ஒல்லியாகிவிட்டான் என்று பொருள்.
கடைக்கணித்தான் - இதுவரை பார்க்காமல் இருந்த ஒன்றை இப்போது கடைக்கண்ணால் பார்த்து அருள் செய்வது. இப்போதேனும் பார்த்தான் என்னும் பொருளில் வந்தது 'கடைக்கணித்தான்' என்னும் சொல்.
திறம்பினான் - திரும்பினான் என்றால் தெரியும். இது திறம்பினான் என்னும் சொல். ஒன்றிலிருந்து மாறுபடுவது திறம்புவது ஆகும். திறம்பினான் என்றால் மாறுபட்டான்.
பன்னினான் - பண்ணினான் என்ற சொல்லைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். பன்னினான் என்ற சொல்லும் இருக்கிறது. அதற்கு ஆராய்ந்து கூறுதல், நூல்நூற்றல், படித்தல், புகழ்தல் என்று பல பொருள்கள் உண்டு.
இகந்தான் - இகழ்ந்தான் என்பது தெரியும். இகந்தான் என்றால் ஒன்றைக் கடந்து போவதைக் குறிக்கும். ஒன்றைத் தாண்டிச் சென்றுவிட்டான் என்ற பொருளில் அமைந்த சொல், இகந்தான்.
- தமிழ் மலை

