
காலங்காலமாக மாணவர்களில் பலருக்கும் கடினமான சொல்லாகத் தோன்றுவதில் ஒன்று, தேர்வு. அதை எழுதுவதைவிட, தேர்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே பீதியடையும் மாணவர்கள் உண்டு. இன்றைய மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அறியவே, ஆண்டு இறுதித்தேர்வை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? நம்பிக்கையுடன்! பயத்துடன்! என கேட்டிருந்தோம். மாணவர்களின் கருத்தறிய, சென்னை, ஆதம்பாக்கம், டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம்.
ரா. பிரியதர்ஷினி, 11ஆம் வகுப்பு
தேர்வு என்பது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடியதுன்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாலே, பயம் தானா வந்துடுது. பயம் வந்தாத்தான் தைரியம் என்பதே வரும். அப்பத்தான் இன்னும் பொறுப்பாக நாம் இருப்போம்.
டி.எ.சுஷ்மா, 12ஆம் வகுப்பு
தேர்வைச் சந்திக்கப் பயம் தடையாக இருக்கக்கூடாது. துணையாக இருந்தால் நல்லது. பயம் எங்கிருந்து வருது? டீச்சர்ஸ், பெற்றோர், உறவினர்கள் எல்லோரும் சகமாணவர்களோடு ஒப்பிடும் போதுதான் பயம் ஏற்படுகிறது. நான் யாருக்கும் போட்டியில்லை. நான் என் திறமையைக் காண்பிக்கவே தேர்வு எழுதுகிறேன். அதனால் எனக்குப் பயமே இல்லை!
தே. கர்த்தவ்யா, 12ஆம் வகுப்பு
பொதுவா பயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ். இதுல பாசிட்டிவ் பயத்தையே நான் தேர்வு செய்யறேன். அதுதான் எனக்கு வழிகாட்டுது. உன்னால் முடியும்னு நம்பிக்கை கொடுக்குது. திட்டமிட்டுப் படிக்கவும் பாடங்களை மனசுல வச்சுக்கவும் அந்த பயம் உதவுது. நெகட்டிவ் பயம் பதற்றத்தையே கொடுக்கும். அது எனக்குக் கிடையாது.
கி.இன்பசாகர், 11ஆம் வகுப்பு
நம்பிக்கையாக எதிர்கொள்வேன். பேய் பற்றிய புரளி மாதிரிதான், தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்பதும்கூட கட்டுக்கதை. அதனால் அதையெல்லாம் நம்பாமல் நல்லா படிச்சு, பதற்றமின்றி தேர்வு எழுதினாலே போதும். வெற்றி நிச்சயம்.
மு. பிரித்தீஷ் நாராயண், 11ஆம் வகுப்பு
பயத்தோட போனால், பதற்றம் அதிகமாகிவிடும். இது என்னோட சொந்த அனுபவம். நல்லா படிக்கலையின்னா பாஸாக முடியாதேன்னு அப்ப மட்டும் பயம் இருக்கும். தேர்வு ஹாலில் அது தேவை இல்லை. அங்கே நம்பிக்கையாக இருந்தால் மட்டும்தான் நல்ல மதிப்பெண் பெறமுடியும்.
வி. தேவ்நாத், 11ஆம் வகுப்பு
தேர்வு என்றாலே என்னிடம் ஒரு மேஜிக் சூத்திரம் இருக்கு. அதாவது, 2 சதவீதம் பயமிருக்கும்; 98 சதவீதம் தன்னம்பிக்கை இருக்கும். பயம் தலைக்கு மேலே ஏறாமல் பார்த்துக்கொள்வேன். தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இதுதான் என்னுடைய சூத்திரம்.

