PUBLISHED ON : பிப் 10, 2025

பொ.யு. 1580ல் தக்காணத்தில் உள்ள பீஜாப்பூரின் (Bijapur) மன்னராக நான் பொறுப்பேற்றேன். அப்போது, எனக்கு வயது ஒன்பது. என் உறவினர் சாந்த் பீபீ (Chand Bibi) தான் என்னையும் என் அரசையும் காப்பாற்றி, ஒரு நிலையான தன்மைக்குக் கொண்டு வந்தார்.
பத்தொன்பது வயதில் நான் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டேன். எதிரிகளை நாடு கடத்தினேன். அல்லது சிறைப்படுத்தினேன். அஹமத் நகர் நிஜாமின் துணையுடன் கலகம் செய்த சகோதரனைச் சிரச்சேதம் செய்தேன். என் வாளில் எவ்வளவு ரத்தம் சொட்டியதோ, அதை விடவும் கூடுதலாகக் கலை ரசனையும் கவிதையும் மனத்தில் ஊற்றெடுத்தது. கிதாப்- - இ -- நவ்ரஸ் என்னும் (Kitab- e -Nauras- நவரசங்களின் புத்தகம்) நூலை எழுதினேன். பொற்காசுகளில் 'அப்லா பாலி' என்று அச்சடித்தேன். சமஸ்கிருதத்தில் அதற்கு 'அபலைகளின் காவலன்' என்று பொருள்.
இந்துக்களின் கடவுளான சரஸ்வதியைப் போற்றினேன். கழுத்தில் ருத்ராக்ஷ மாலை அணிந்தேன். மொகலாய மன்னர்களே வியக்கும் வண்ணம் 20,000 வீரர்களைக்கொண்டு நவ்ரஸ்பூர் என்னும் கலை நகரை உருவாக்கினேன்.
அப்போது டில்லியை ஆண்டு கொண்டிருந்த அக்பருக்கு பீஜாப்பூரின் மீது ஒரு கண். அவர்களுக்கு நான் கட்டுப்படவில்லை. மாறாக என் மகளை அக்பரின் மகனுக்குக்கொடுத்து அமைதி வழியில் சென்றேன்.
கவிதை எழுதுவதிலும் இசைக்கருவிகளை வாசிப்பதிலுமே எனக்கு விருப்பம் அதிகம் இருந்தது. எனது ஆட்சியில் பீஜாப்பூரை, வித்யாப்பூர் எனப் பெயர் மாற்றினேன். அழகிய மாடங்கள், மாளிகைகள், அரண்மனைகள் என ஒளிவீசியது என் நகரம். பீஜாப்பூரின் நூலகங்கள் வர்ணம் பூசப்பட்ட ஓவிய நூல்களாலும் கையெழுத்துப் பிரதிகளாலும் நிரம்பி வழிந்தன.
சாதி, மத பேதமின்றி என் நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது.
நான் யார்? படத்தைப் பார்த்து என் பெயரைக் கண்டறிய முடிகிறதா?
விடைகள்: இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷா (Ibrahim Adil Shah II)