PUBLISHED ON : மே 19, 2025
வெண்ணிப் பறந்தலை என்னும் ஊரில் சோழ அரசன் கரிகாலனுக்கும் இந்தச் சேர அரசனுக்கும் போர் நடந்தது. போரில் கரிகாலன் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த சேர அரசன், அங்கேயே அமர்ந்து வடக்கிருந்து உயிர்த் துறந்தார். சோழ நாட்டு மக்கள் வெற்றி பெற்ற கரிகாலனை விடவும், இந்த சேர அரசனைப் போற்றி புகழ்ந்தனர். வெண்ணிக் குயத்தியார் என்னும் புலவர் 'வென்றோய், நின்னினும் நல்லன்' என்று பாடினார் (புறம் 66).
அரிசில் கிழார் என்னும் புலவர் இவரைப் போற்றி பத்துப் பாடல்கள் பாடினார். அது பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. புலவருக்குத் தன் நாட்டையே பரிசாகக் கொடுத்து விட்டு, அரண்மனையில் இருந்து அரசியுடன் வெளியேறினார் அரசர். புலவர் பரிசைத் திருப்பி மன்னனிடமே கொடுத்து, 'இதனை நீயே ஆள்க' என்று கூறிவிட்டு, அவரின் அமைச்சராக இருந்தார்.
அரசனைப் பார்க்க புலவர் மோசிகீரனார் சென்றார். நெடுந்தூரம் வந்த களைப்பால், அரண்மனையில் ஓர் அறையில் இருந்த கட்டிலில், படுத்து உறங்கி விட்டார். பின் தன் மீது சில்லென்று காற்று படுவதை உணர்ந்த புலவர் திடுக்கிட்டு எழுந்தார். அரசர் தனக்குக் கவரி வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார். தான் படுத்துறங்கியது முரசுக் கட்டில் என்றும் அதில் உறங்குபவர்களுக்கு மரண தண்டனை உண்டு என்றும் புலவர் அறிந்தார். ஆனால் அரசன் தண்டனைத் தராமல், தனக்குக் கவரி வீசியதைக் கண்டு, நெகிழ்ந்தார்.
இந்த மூன்று நிகழ்வுகளிலும் வருபவர் ஒரு சேர அரசர். அவர் யார்.
அ. கணைக்கால் இரும்பொறைஆ. இளஞ்சேரல் இரும்பொறை
இ. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ஈ. மாந்தரஞ்சேரல் இரும்பொறை
விடைகள்:
இ. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை