PUBLISHED ON : ஜன 25, 2016

அருமையான, காணொளிகளை (வீடியோ - Video) ரசிக்க வேண்டுமா? 'கிளாஸ்ஹுக்.காம்' (classhook.com) இணையதளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். காணொளிகள் என்றால் பொழுதுபோக்கு ரகம் அல்ல; பாடம் நடத்தும் காணொளிகள்!
ஆம், இந்தத் தளம் அடையாளம் காட்டும் எல்லா காணொளிகளுமே கல்வி சார்ந்த காணொளிகள். பயனுள்ளவை. ஆனால் பாடம் நடத்தும் காணொளிகள், அறுவையாக இருக்கும் என்று பயப்பட வேண்டியதில்லை. இவை எல்லாமே பிரபலமான டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
மேலைநாடுகளில் அறிவியல் உள்ளிட்ட விஷயங்களைப் பொழுதுபோக்காகக் கற்றுத்தரும் அருமையான டிவி நிகழ்ச்சிகள் பல உள்ளன. திரைப்படங்களிலும் அறிவியல், கணிதம் சார்ந்த காட்சிகள் உண்டு. இந்தக் காட்சிகளை எல்லாம் இந்த தளம் தேடித்தருகிறது.
அடிப்படையில் இந்தத் தளம் ஒரு மினி சர்ச் எஞ்சின் (Mini Search Engine) போலச் செயல்படுகிறது. இதில் கல்வி சார்ந்த காணொளிகளைத் தேடலாம்.
கூகுள் சர்ச் எஞ்சினில் தேடுவதைப் போலவே இதிலும் நமக்குத் தேவையான கீ வேர்டை (Keyword) டைப் செய்து அதற்கேற்ற காணொளிகளைப் பெறலாம்.
கணிதம், அறிவியல், வர்த்தகம், இயற்பியல், ரசாயனம் எனப் பல விதத் தலைப்புகளில் பட்டியலை பார்க்கலாம். காணொளிகளில் அவை எந்த வயது பிரிவினருக்கு ஏற்றது என்ற விவரமும் உள்ளது.
அடிப்படையில் இந்தத் தளம் ஆசிரியர்களுக்கானது. அதாவது மாணவர்கள் விரும்பும் விதத்தில் பாடம் நடத்தத் தேவையான விஷயங்களைத் தருவது இதன் நோக்கம். இந்த காணொளிகளைக் கொண்டு மாணவர்களைக் கவரும் வகையில் பாடங்களை உருவாக்கலாம்.
மாணவர்களும் இதில் நேரடியாகத் தங்களுக்குத் தேவையான காணொளிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். அல்லது வகுப்பு அசைன்மென்டிற்கு (Assignment) ஏற்ற காணொளிகளைத் தேடிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி: http://www.classhook.com/
