PUBLISHED ON : ஜன 25, 2016

முதல் பக்கத்தில் உள்ள காந்தி ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. வரைந்தவர் நடிகர் சிவகுமார். திரைப்பட நடிகராவதற்கு முன்பு அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் படித்து ஏகப்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்த காந்தி ஓவியம், கோட்டு ஓவியம் எனப்படும் முறையில் வரையப்பட்டு இருக்கிறது. பேனாவால் கோடுகள் மட்டுமே தீட்டி அவற்றின் வழியே உருவத்தையோ கருத்தையோ வெளிப்படுத்தும் முறை இது. இந்த ஓவியத்தில் சிவகுமார், காந்தியை, ஒரு புகைப்படத்தில் பார்ப்பது போல அசலாக பார்க்கும் விதத்தில் வரைந்து இருக்கிறார். வேறு ஓவியர்கள் காந்தியை வேறு விதமாக வெளிப்படுத்தி இருப்பார்கள். தமிழ்நாட்டின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவரான மறைந்த கே.எம்.ஆதிமூலம், ஏராளமான காந்தி ஓவியங்களை வரைந்திருக்கிறார். (அருகே படம்.) இவற்றைப் பார்க்கும்போது காந்தியைப் பற்றிய ஏதோ ஒரு புரிதல் உணர்ச்சியை அவை நமக்கு ஏற்படுத்துகின்றன. உலகத்தில் மிக அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட, ஓவியம் வரையப்பட்ட மிகச் சில மனிதர்களில் காந்தி முக்கியமானவர்.
ஜனவரி 30,1948 அன்று மாலை தன் வழக்கமான பொது மக்கள் பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்தபோது சரியாக 5:12 மணிக்கு காந்தி 'கோட்சே'வால் சுடப்பட்டார். அடுத்த 15 நிமிடங்களில் காலமானார். காந்தி மறைந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காந்தி இறந்ததும் அவருக்குத் தெரிவிக்கப்பட்ட அஞ்சலிகளிலே முக்கியமானது அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் செலுத்திய அஞ்சலிதான். “அடுத்து வரும் பல தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு, இந்த மாதிரி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக நம் முன்னே வாழ்ந்தார் என்பதை நம்புவதே கடினம். அப்படிப்பட்ட மனிதராக வாழ்ந்தவர் காந்தி” என்றார் ஐன்ஸ்டைன்.
காந்தி தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் மறுவாழ்வு பெற உதவினார். அவர் மறைந்த ஜனவரி 30-ஆம் நாளை ஒட்டி வரும் ஞாயிறு உலகத் தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த வருடம் அது ஜனவரி 31-ல் வருகிறது. 1944ல் வார்தா அருகே ஒரு தொழு நோயாளிகள் சிகிச்சை மையத்துக்கு காந்தி சென்றபோது அங்கே இருந்த குறிப்பு ஏட்டில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். “என்னை மக்கள் மகாத்மா என்கிறார்கள். நான் அசல் மகாத்மாவே அல்ல. இந்த மையத்தை நடத்தி வரும் மனோகர்ஜிதான் மெய்யான மகாத்மா”.
