PUBLISHED ON : ஏப் 18, 2016

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் 'வர்லி' எனும் பழங்குடி இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பண்டிகை காலங்களில் தங்கள் வீட்டுச் சுவர்களை செம்மண்ணால் மெழுகி, அதன் மேல் அரிசி மாவைக் கரைத்து சித்திரங்கள் தீட்டுவார்கள். அன்றாட வாழ்க்கை நடப்புகள், திருவிழாக்கள் போன்ற காட்சிகள் இவர்களின் ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.
கோடுகள், முக்கோணங்கள், நெளிவுகளைக் கொண்டு, பறவைகள், விலங்குகள், மனித உருவங்களை வரைவது இந்த ஓவியக் கலையின் சிறப்பு அம்சம். இந்த ஓவியங்களில் இருக்கும் ஒவ்வொரு உருவமும் பாடுவது, ஆடுவது, மரம் ஏறுவது போன்ற ஏதோ ஒரு செயலைச் செய்துகொண்டு இருக்கும். உலக அளவில் பிரசித்தி பெற்று வரும், இந்த ஓவியக்கலையின் அடிப்படை உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: 1. மெரூன் நிற சார்ட் அட்டை. வர்லி ஓவியம் ஏறத்தாழ காவி நிறப் பின்னணியில் வரையப்படுவதால் மெரூன் சார்ட்டைப் பயன்படுத்துகிறோம். 2. வைட்னர் பேனா. இதைக் கொண்டு நேர்த்தியான கோடுகளை எளிதாக வரைய முடியும்.
* முக்கோணம், வட்டம், கோடுகளைப் பயன்படுத்தி, ஆண், பெண் உருவங்களை இப்படி வரைய வேண்டும்.
* அதே முக்கோணங்களைக் குறுக்காகக் கிடத்தி வரைந்தால், குதிரை உருவத்தை வரையலாம்.
* மாங்காய் மாதிரி நெளித்து வரைந்த உருவத்தை, இப்படிக் கோழியாக உருமாற்றலாம்.
* அதே மாங்காய் உருவத்தை, அதன் கூர்மையான முனை வலப்பக்கம் வருமாறு வரைந்தால், மாடு உருவத்தை வரைந்துவிடலாம்.
இந்த உருவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிராமப்புறக் காட்சி.
