தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மம்மியக் காணோம்!

மம்மியக் காணோம்!

மம்மியக் காணோம்!


PUBLISHED ON : நவ 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எகிப்து நாட்டில் பிரமிடுகள் உண்டு. அது ஒரு வகைக் கல்லறை. அதில், பழங்கால அரசர்கள் மறைந்தபிறகு, அவர்களுடைய உடல்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு 'மம்மி' (Mummy) என்று பெயர்.

மூமியா (mumiya) என்ற அரபுச் சொல்லில் இருந்து இந்தச் சொல் உருவானது. 'பதப்படுத்தப்பட்ட உடல்' என்பதே இதன் அர்த்தம்.

எகிப்திய பிரமிடுகளுக்குள் நுழைந்து, கல்லறைகளைக் கொள்ளையிடும் வழக்கம் நீண்டகாலமாக இருந்தது. இதனால், முதன்முதலாக எந்த மம்மி தோண்டி எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னும் பின்னும் செயற்பட்டுவந்த கொள்ளையர்கள், எகிப்தியக் கல்லறைகளில் இருந்த விலைமதிப்புமிக்க பொருட்களை நிச்சயம் கொள்ளை அடித்திருப்பார்கள்.

கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் பழம்பொருட்களைப் பாதுகாத்து வருகிறோம். அதற்கு முன்பெல்லாம் நிலைமையே வேறு. அந்தப் பொருட்கள் எந்த உலோகத்தால் ஆனவை, அவற்றின் அழகு என்ன என்பதை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே அளவிடப்பட்டன.

இவை இரண்டுமற்ற மனித உடல்கள் தூக்கி வீசப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

பிற்காலத்தில் மம்மிகளைப் பொடியாக்கி உண்டால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை பரவியது. அவ்வளவுதான். அதுவரை பயன்படாது என்று கருதப்பட்ட மம்மிகளை, தேடித்தேடித் திருடத் தொடங்கினர். மக்களின் மூடநம்பிக்கை, போலி மருத்துவ முறையாக மாறி, வணிகமாக நிலைபெற்றது.

முதலாம் ராம்சேயின் உடல்

ஜோவான்னி பெல்சொனி (Giovanni Belzoni) என்ற இத்தாலிய தொல்லியலாளர் 1817-ஆம் ஆண்டில் முதலாம் ராம்சேவின் (ஆட்சிக்காலம்: கி.மு. 1295 -- 1294) கல்லறையைக் கண்டுபிடித்தார்.

வழக்கம்போல், அந்தக் கல்லறையும் உடைக்கப்பட்டு செல்வங்கள் கொள்ளை போயிருந்தன. ராம்சேவின் மம்மியையும் காணவில்லை. எப்போதோ காணாமல்போன அந்த உடலை, ஆய்வாளர்கள் தேடத் தொடங்கினர்.

இதற்கிடையே, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் மருத்துவரும், பணக்காரருமான ஜேம்ஸ் டக்ளஸ், எகிப்தியக் கல்லறைக் கொள்ளையர்களிடம் இருந்து ஒரு மம்மியை வாங்கி, அதை நயாகரா அருங்காட்சியகத்திடம் விற்றுவிட்டார். அது சுமார் 125 ஆண்டுகளுக்கும்மேல் அங்கேயே கிடந்தது.

கடந்த நூற்றாண்டின் கடைசியில் கெய்ல் கிப்சன் (Gayle Gibson) என்ற எகிப்தியவியலாளர்தான், அது முதலாம் ராம்சேவின் உடல் என்பதைக் கண்டறிந்தார்.

பிறகு அந்த மம்மி 2003-ஆம் ஆண்டு எகிப்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, லக்ஸர் அருங்காட்சியகத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

பாஸ்போர்ட் வாங்கிய மம்மி!

எகிப்திய பாரோக்களில் (Pharaoh) நீண்டகாலம் ஆட்சி செய்தவர் இரண்டாம் ராம்சே (Ramesses II). கி.மு.1213-இல் அவர் இறந்தார். அவரது உடல் மம்மியாக்கப்பட்டு அரசர்களின் பள்ளத்தாக்கில் (the Valley of the Kings) புதைக்கப்பட்டது.

கல்லறைக் கொள்ளையர்களிடம் இருந்து அரசரது உடலைப் பாதுகாக்க நினைத்த மத குருக்கள் அவரது உடலை அடிக்கடி இடம் மாற்றியபடி இருந்தனர். காலப்போக்கில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கல்லால் ஆன பெட்டி (sarcophagus) காணாமல் போனது.

1881ஆம் ஆண்டு இரண்டாம் ராம்சேயின் மம்மி தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் கெய்ரோ அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

எகிப்தை ஆய்பவர்கள், அதைத் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தனர். 1970-ஆம் ஆண்டில் அந்த உடல் சிதையத் தொடங்கியது. மம்மிகளைப் பதப்படுத்தி நிலைநிறுத்தும் தொழில்நுட்பம், அப்போது பிரான்ஸ் நாட்டில் தான் இருந்தது. அதனால், அந்த உடலை அங்கு கொண்டுசெல்ல முடிவுசெய்தனர்.

எகிப்திய சட்டத்தின்படி, குடிமகன்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றால் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வேண்டும். இது உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டலும் பொருந்தும்.

ஆகவே, மூவாயிரம் ஆண்டுக்கு முந்தைய இரண்டாம் ராம்சேவிற்கு எகிப்தியக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. அதில் அவரது பதவி, 'காலம் சென்ற மன்னர்' என்று குறிப்பிடப்பட்டது.

சகல மரியாதையுடன் கொண்டுவரப்பட்ட மன்னரது உடலை ஆராய்ந்து, மீண்டும் பதப்படுத்தி எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் எகிப்திடமே ஒப்படைத்தது பிரெஞ்சு அரசு.

தெரியுமா?

மம்மிக்கள் குறித்த தேடலில் ஏராளமான ஆச்சரியங்கள் தொல்லியலாளர்களுக்கு கிடைத்தன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியவை மட்டுமே கிடைத்து இருந்த வேளையில், சில மிருகங்கள், பறவைகளும் கிடைத்தன. மனிதர்களைப் போலவே விலங்கினங்களையும் பதப்படுத்தும் முறையைச் செய்துள்ளனர். சுமார் 700 லட்சம் விலங்குகளை அந்த முறையில் பதப்படுத்தியுள்ளனர். பூனைகள், பறவைகள், தவளைகள், குரங்குகள், மற்றவகை விலங்குகள் என செல்லப்பிராணிகளை இவ்வாறு பாதுகாத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us