தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அகழாய்வு இடம் தேர்வு செய்வது எப்படி?

அகழாய்வு இடம் தேர்வு செய்வது எப்படி?

அகழாய்வு இடம் தேர்வு செய்வது எப்படி?


PUBLISHED ON : நவ 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்க்கும் இடங்களில் எல்லாம் அகழாய்வு செய்துவிட முடியாது. அதற்கென சில வரையறைகள் உள்ளன. அவை:

இலக்கியச் சான்று

தமிழின் சங்கப் பாடல்களை வைத்து, அகழாய்வு செய்வதற்கான இடம் தேர்வு செய்யப்படும். சேர மன்னர்களின் தலைநகரான கரூர், முற்காலச் சோழர்களின் தலைநகரான உறையூர் போன்ற ஊர்களைப்பற்றி இலக்கியக் குறிப்புகள் இருந்ததால், அந்த ஊர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கல்வெட்டு

மதுரை அருகே மாங்குளம் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பற்றிய குறிப்பு இருந்தது. அதை வைத்து ஆய்வு செய்தபோது, அங்கே இருந்த பண்டைய குடியிருப்புகளை அறிய முடிந்தது.

அயல்நாட்டவர் குறிப்பு

தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற ரோமானிய, சீன, அரேபிய பயணிகளின் குறிப்புகளைக் கொண்டும் ஓரிடத்தின் வரலாறு கண்டறியப்படும். இவ்வாறு காஞ்சி, கொற்கை, பழையகாயல், பெரியபட்டினம், பூம்புகார், மரக்காணம் போன்ற துறைமுகப் பட்டினங்களை அறிய முடிந்தது. ஆய்வுசெய்து மண்ணில் மறைந்துள்ள பொருட்களைக் கண்டெடுக்க முடிந்தது.

காசுகள்

ஓரிடத்தில் கிடைக்கும் பண்டைய காசுகளாலும், அவ்வூரின் வரலாற்றுச் சிறப்பை அறிய முடியும். கரூரில் கிடைத்த பண்டைய சேரர் காசுகள், ரோமானிய காசுகள், மோதிரங்கள் போன்றவற்றின் மூலம், அவ்வூரின் தொன்மையை அறிய முடிந்தது.

ஊரார் குறிப்பு

அகழாய்வு தொடங்கும் முன், அவ்வூரில் உள்ளவர்களிடம் விவசாயப்பணி நடைபெறும்போது, அல்லது மண் தோண்டும்போது, கிணறு வெட்டும்போது ஏதேனும் பண்டைய செங்கற் கட்டடங்கள் கிடைத்தனவா என்று விசாரிக்கப்படும். அவர்கள் கூறும் தகவல்களை வைத்து ஆய்வுக்குரிய இடம் தேர்வு செய்யப்படும்.

மண் மேடுகள்

ஓர் ஊரில் மண்மேடு (Mound) உள்ளதா என்று பார்க்க வேண்டும். மக்கள் வாழ்ந்து சென்ற இடங்கள் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களால் சிறிய மண்மேடாக இருக்கும். அப்படியான இடங்களும் ஆய்வுக்குரிய இடமாகத் தேர்வு செய்யப்படும்.

மேற்பரப்பு ஆய்வு

மண்ணின் மேற்பரப்பை ஆய்வு செய்யவேண்டும். அப்பொழுது, கிடைக்கும் பானை ஓடுகள், காசுகள், கல்மணிகள், செங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டும் ஆய்வுக்குரிய இடங்கள் தேர்வு செய்யப்படும்.

காசுகள், கல்வெட்டுகள் போன்றவை மன்னர்களின் ஆட்சி, நிர்வாகம் போன்றவற்றை அறிய உதவுகின்றன. சாதாரண மக்களின் வாழ்க்கையை அறிய அகழ்வாராய்ச்சிகள் உதவுகின்றன.

- ஸ்ரீதரன்

தொல்லியல் ஆய்வாளர் (ஓய்வு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us