PUBLISHED ON : அக் 03, 2016

அமெரிக்காவின் 16வது அதிபராக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன் (Abiraham-lincon). அவர் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி கெண்டக்கியில் (Kentucky), ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை தாமஸ் லிங்கன் (Thomas Lincoln)மரப்பொருட்கள் செய்யும் ஒரு தச்சர். ஆபிரகாம் லிங்கனுக்கு ஒன்பது வயதிருக்கும்போது, அவரது தாய் நான்ஸி (Nancy) இறந்து போனார். அவர் தன் தாயை தேவதை என்றே குறிப்பிடுவார்.
லிங்கன் நிறைய புத்தகங்கள் படிப்பார். வழக்கறிஞராகவும் ஆனார். அமெரிக்காவின் பெரும்பணக்காரர்கள், கறுப்பினத்தவர்கள் சிலரை அடிமைகளாக விலைக்கு வாங்குவதையும் அவர்களை சாட்டையால் அடித்து துன்புறுத்துவதையும் கண்டார். இந்தச் செயல் அவர் மனதை பெரிதும் பாதித்தது. அடிமைத்தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். வழக்கறிஞரான அவர், நான்ஸ் என்ற கருப்பின பெண்ணின் வழக்கில் ஆஜராகி, 'மனிதர்களை விற்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம்' என்று வாதாடி வென்றார்.
அவருக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. பல்வேறு பதவிகள் வகித்தபின், நவம்பர் 1860ல் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அமெரிக்காவின் வடக்குப் பகுதி மக்கள் 'அடிமைகள் தேவையில்லை' என்று கருதினர். தெற்கு பகுதி மக்கள் விவசாயத்துக்கு அடிமைகள் தேவை என்றனர். இதனால் கருத்து வேறுபாடு எழுந்து, உள் நாட்டுப் போர் ஏற்பட்டது. இறுதியில் கலவரம் ஒடுக்கப்பட்டது. சம்பிரதாயப்படி லிங்கனும் அதுவரை அடிமைகளை வைத்திருந்தவர்தான். எனினும் அவர் மனதை அடிமைத்தனம் நெருடிக் கொண்டே இருந்தது. அதை அகற்ற அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 1865 ல் லிங்கன் அடிமைகளின் விடுதலைக்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
தன் வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்ததால் 'ஆனஸ்ட் ஏப்'(Honest abe) என்று மக்கள் அவரை செல்லமாக அழைத்தனர். (ஆபிரகாமின்
சுருக்கம் ஏப்).
நாடகம் ஒன்றைப் பார்க்க 1865ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் நாள் அரங்கத்துக்கு லிங்கன் சென்றார். அடிமைத்தனம் ஒழிய சட்டம் இயற்றியதற்காக அவர் மீது ஆத்திரம் கொண்ட ஒருவர், லிங்கனை சுட்டு விட்டார். சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் லிங்கனின் உயிர் பிரிந்தது. லிங்கன் சுடப்பட்ட அதே நாளில்தான் அதிபர்களை பாதுகாக்கும் ரகசிய சிறப்புப் படைக்கு (Secret Service) அனுமதி அளிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டிடிருந்தார்.
'மக்களுக்காகவே மக்களாட்சி' (Government of the people, by the people, for the people) என்னும் புகழ் பெற்ற வாசகத்தைக் கொடுத்த மகத்தான தலைவர் ஆபிரகாம் லிங்கன்.
