PUBLISHED ON : அக் 03, 2016

பனியில் குகை அமைத்து வாழும் ஓர் உயிரினம் போலார் கரடி (Polar Bear) எனப்படும் பனிக்கரடிகள். இவை பனி உறைந்திருக்கும் ஆர்ட்டிக் நிலப்பகுதியில் வசிக்கின்றன. ஆனால், அன்டார்டிகா (Antarctica) பிரதேசத்தில் வசிப்பதில்லை. மோப்பத்திறன் அதிகம் கொண்டவை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் உணவையும் மோப்ப சக்தியினால் கண்டுபிடித்து விடுகின்றன.
பெரும்பாலும் கடல் நீரில் வாழும் சீல்களையே உணவுக்காக வேட்டையாடுகின்றன. சீல்களில்(seal) கொழுப்பு அதிகமாக உள்ளது. உடலில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தால்தான் உறைபனி இருக்கும் இடங்களில் வாழ முடியும். குளிரை தாங்குவதற்கு ஏதுவாக பனிக்கரடியின் உடல் முழுக்க ரோமங்களும் உள்ளன. 40கிலோவில் இருந்து 90 கிலோவரை எடை கொண்ட சீல்களை வெட்டுவதற்கு ஏதுவாக கால் நகங்களை கரடிகள் பெற்றிருக்கின்றன. பனிக்கரடிகள் கடலிலும் நீந்தும்.
பனிக்கரடிகள் குட்டி ஈனுவதற்கு ஏதுவாக பனியில் குகை அமைத்து அதனுள் தங்கிக்கொள்கின்றன. பனிக்கரடிகள் பிறக்கும்போது வெறும் அரை கிலோ அளவுக்கே இருக்கின்றன. ஒருமுறை ஐந்திலிருந்து ஆறு குட்டிகள் வரை பிரசவிக்கிறது. அந்தக் குட்டிகள் பார்ப்பதற்கு வெள்ளை எலிகள் போலவே இருக்கும். ஆனால், வளர்ந்த பிறகு 700 கிலோ வரை எடை கூடுகின்றன. வளர்ந்த பெரிய கரடி எழுந்து நின்றால் பத்து அடி உயரத்திற்கு இருக்கும். குட்டிகள் தாயுடன் இரண்டரை வயது வரை வாழும். இவை பதினைந்திலிருந்து பதினெட்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
