PUBLISHED ON : ஆக 08, 2016

உங்களுக்கு ஏதாவது பொருள் தேவை என்றால், பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸுக்குப் போய்விடுவீர்கள். வேண்டும் பொருளை, ஒரு பையிலோ குட்டித் தள்ளுவண்டியிலோ போட்டு கேஷியரிடம் காட்டி, பணம் செலுத்தி, வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவீர்கள்.
சந்தை என்பது ஒரு வார்த்தையாக மட்டும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
முன்பெல்லாம், வீடுகளுக்குப் பக்கத்தில் கடைகள் இருக்காது. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் சந்தை கூடும். அங்கே பலவிதமான பொருட்களை விற்கும் வியாபாரிகளும் தற்காலிகக் கடை போடுவார்கள். மக்கள் அங்கே இருந்து, பொருட்களை வாங்கி வந்து வைத்துக்கொள்வார்கள்.
காய்கறி, அரிசி, பருப்பு, உப்பு , புளி, துணிமணி என அனைத்துப் பொருட்களும் குறைந்த விலையில் சந்தைகளில் கிடைக்கும்.
மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க , வாங்க சந்தைகளைப் பயன்படுத்தினார்கள்.
காய்கறி ஒரு பக்கம், ஆடை அணிகலன் வேறு பக்கம் என விதவிதமான பொருட்கள் கண்ணை கவரும் வகையில் இருக்கும். ஆடு மாடுகள் விற்பனை செய்யவும் தனி சந்தை நடப்பதுண்டு. ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு நாட்களில் சந்தை நடக்கும். காலையில் ஆரம்பித்து மாலைக்குள் சந்தை முடிந்துவிடும். வாரம் ஒரு முறை, இரு முறை, மூன்று முறை என்று சந்தைகள் நடப்பதுண்டு.
இப்போது தெருவிற்குத் தெரு கடைகள் வந்துவிட்டன. அதனால், சந்தை கூடுவது என்பதே குறைந்து போய்விட்டது.
சங்க காலத்தில் பூம்புகார் , மதுரை வீதிகளில் கடை வீதிகள் இருந்திருக்கின்றன. அந்த வீதிகளில் விற்பனையகங்கள் இருந்திருக்கின்றன. அத்துடன் பொருட்களைத் தலையில் சுமந்து சென்று கூவியும் விற்பனை செய்திருக்கிறார்கள்.
