PUBLISHED ON : ஏப் 23, 2018

தமிழில் இல்லாத எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ போன்ற கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படுபவை மட்டுமே வடசொற்களா? தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தால் அவை தமிழ்ச் சொற்களே என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாமா ? அப்படியும் இயலாது.
தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று தற்சமம். மற்றொன்று தற்பவம். முதலில் தற்சமம் என்றால் என்னவென்று பார்ப்போம்.
தமிழ் ஒலிப்புக்குரிய அதே தன்மையோடு அமைந்த வடசொற்கள் யாவும் தற்சமம் எனப்படும். அதாவது தமிழின் இருநூற்று நாற்பத்து ஏழு எழுத்துகளுக்கு உள்ளாகவே அந்த வடமொழிச் சொல்லும் எழுதப்பட்டிருக்கும். கீழ்க்காணும் சொற்கள் தமிழ் எழுத்துகளிலேயே எழுதப்படும் தற்சமமான வடசொற்கள். அடைப்புக்குறிக்குள் இருப்பவை அச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள்.
அகிலம் (உலகம்), அங்கம் (உறுப்பு), அபத்தம் (தவறு), அபாயம் (பேரிடர்), அலங்காரம் (ஒப்பனை), அவமானம் (இழுக்கு), ஆச்சரியம் (வியப்பு), இரசிகன் (சுவைஞன்), உதாரணம் (எடுத்துக்காட்டு), உற்சவம் (திருவிழா), ஏதம் (குற்றம்), கண்டனம் (மறுப்பு), கம்பீரம் (உயர்தோற்றம்), கீதம் (இசை), குரோதம் (சினம்), சத்திரம் (உணவுச்சாலை), சமாதானம் (அமைதி), சம்மதம் (ஒப்புகை), சாதம் (சோறு), சாமி (கடவுள்), சிசு (குழந்தை), சுலபம் (எளிது), சுவாசம் (மூச்சு), சூலம் (வேல்), சொப்பனம் (கனவு), தரித்திரம் (வறுமை), தானம் (கொடை), தினசரி (நாள்தோறும்), துரோகம் (இரண்டகம், வஞ்சகம்), தூரம் (சேய்மை, தொலைவு), தைரியம் (உறுதி), நாமம் (பெயர்), நியதி (முறை), பயம் (அச்சம்), பாதகம் (தீமை), பிரசங்கம் (சொற்பொழிவு), பேதம் (வேற்றுமை), மத்தியானம் (நண்பகல்), மாமிசம் (இறைச்சி), வசனம் (உரைநடை), வயசு (அகவை), விபத்து (இடையூறு, கொடுமுட்டு), வியாதி (நோய்), வேதம் (மறை).
ஆக, மேலுள்ள சொற்கள் யாவும் தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை வடசொற்கள். அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்களும் நமக்கு நன்கு தெரிந்திருக்கின்றன. இனி ஒரு சொற்றொடரை எழுதும்போது எச்சொல்லைப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்து பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது சிறப்பு. தவிர்க்க இயலாத இடங்களில் வடசொல்லைப் பயன்படுத்தலாம். சோற்றில் கல்போல் இல்லாமல் பாயசத்தில் முந்திரிபோல் வடசொல்லைப் பயன்படுத்த வேண்டும். பாயசம் என்பதும் வடசொல்தான். பாயசம் என்பதற்கு இன்னமுது, பாற்சோறு என்பன தமிழ்ச்சொற்கள்.
- மகுடேசுவரன்