PUBLISHED ON : ஏப் 23, 2018

ரஷ்ய மொழி பேசுபவர்களின் அருகில் நின்றால், அய்யோ, இந்த மொழியைக் கற்றுக்கொள்ள முடியுமா என்ற தயக்கம் வரலாம். ஏனெனில், வாய்திறப்பதே தெரியாமல், மென்மையான ஒலியோடு பேசுகின்றனர்.
எல்லாவற்றையும் அழுத்திப் பேசிப் பழகியிருக்கும் நமக்கு, முதலில் கஷ்டம் தான். ஆனால், தொடர் பயிற்சியில் எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் ரஷ்ய மொழிப் பயிற்சியாளர் வேலண்டினா. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வேலண்டினா, கடந்த 20 ஆண்டுகளாக ரஷ்ய மொழிப் பயிற்சி அளித்து வருகிறார். அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து:
ரஷ்ய மொழி பேசுவதைக் கேட்டால், மிகவும் வித்தியாசமாக இருக்கே?
அப்படியா? ரஷ்ய மொழி பேசுவது கொஞ்சம் கடினம் தான். ஆனால், இந்தி, தமிழ் மொழி தெரிந்தவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். உச்சரிப்புகளில் ஒற்றுமைகள் உண்டு. வித்தியாசமாக இருக்கக் காரணம் அழுத்தம் தராமல் பேசுவதாக இருக்கலாம். டா, டோ, டெள என அழுத்தம் தரும் சொற்கள் எதுவுமே கிடையாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் வெவ்வேறு ஒலி உள்ளது. அதனால் இதை கொஞ்சம் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பேச்சு மொழியாக ரஷ்ய மொழியைக் கற்றுக் கொள்ளலாமா?
ம்... ரஷ்ய மொழி பேச வேண்டுமென்றால், முதலில் இலக்கணம் கற்க வேண்டும். சமஸ்கிருத மொழியைப்போல ரஷ்ய பேச்சு மொழிக்கும் இலக்கணம் உண்டு. அதனால் இலக்கணம் தெரிந்தால்தான், மொழியைப் பேச முடியும்.
இலக்கணமா?
பயமே தேவையில்லை. சிறுவயதில் எப்படி நீங்கள் மொழியைக் கற்றுக்கொண்டீர்கள் எனக் கேட்டால் பதில் சொல்ல முடியுமா? ஆர்வம் இருந்தால் தானாக எல்லாம் நடக்கும். அடிப்படையிலிருந்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல் கற்றுக் கொடுக்கிறோம்.
எத்தனை படிநிலைகள் உள்ளன?
ஏ1இல் இரண்டு நிலைகள் உள்ளன. அதாவது ஏ1.1, ஏ1.2. அதேபோல், ஏ2 வில் மூன்று நிலைகள் உள்ளன. ஏ2.1,ஏ2.2,ஏ2.3. ஒரு நிலையைப் படிக்க 60 மணிநேரம் தேவை. ரஷ்ய மொழியில் படிக்க, எழுத, பேச, என முழுவதுமாகக் கற்றுக்கொள்ள 300 மணி நேரம் போதும். உங்களுக்கு ஓரளவுக்கு மொழி தெரிந்தால் போதும் என நினைத்தால், ஏ1 படிநிலையை முழுவதுமாகப் படிக்கலாம். இதிலேயே உங்களுக்கு அடிப்படை இலக்கணம் வந்துவிடும்.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனித்துக்கொள்ள முடிகிறதா?
எங்கள் வகுப்பில் 6- 9 மாணவர்கள் வரைதான் இருப்பார்கள். அதனால் தனித்தனியாக ஒவ்வொருவரின் மீது கவனம் செலுத்தி கற்றுக் கொடுக்க முடிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேகத்தில் கற்றுக்கொள்வார்கள். தனியாகக் கவனம் செலுத்தினால் தான் அவர்கள், ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.
யாரெல்லாம் ரஷ்ய மொழி கற்றுக்கொள்ள வருகிறார்கள்?
பிளஸ் 2 படித்தவர்கள், மேற்படிப்புக்குச் செல்பவர்கள் தான் அதிகம் வருகிறார்கள். ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்கச் செல்பவர்களுக்கு அடிப்படை ரஷ்ய மொழியாவது தெரிந்திருக்க வேண்டும். அதனால் அவர்களுக்கென்று இருபது நாட்கள் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும். ஜூன் முதல் வகுப்புகள் தொடங்கும். ரஷ்ய நாட்டில் ஆங்கில மொழி ஒரு பாடமாகச் சொல்லித் தரப்படுகிறது. நம்மூரில் ஆங்கிலம் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம். ரஷ்யாவில், ரஷ்ய மொழி தெரியவில்லை என்றால் கொஞ்சம் சிரமம்.
மேலும் விவரங்களுக்கு
ரஷ்ய மொழி மையம்,
ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாசார மையம்
எண்- 74, (பழைய எண்- 27)
கஸ்தூரி ரங்கன் சாலை, சென்னை- 600 018.
044 - 2499 0050