PUBLISHED ON : ஏப் 23, 2018

சங்கீதா கடூர், இந்தியாவில் முதல் வனவிலங்கு ஓவியர். இவர் வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பறவைகள் ஆகியவற்றை மட்டும் தேர்வு செய்து வரைந்து வருகிறார். இவருடைய ஓவியத்தில் வெளிவந்த ஹம்மிங்பேர்டுகள் (ஓசனிச்சிட்டு பறவைகள்) தொகுப்பு மிகவும் பிரபலம். சங்கீதாவைச் சந்தித்து, அவரது துறையைப் பற்றிப் பேசினோம்:
-'பெங்களூரு தான் என் சொந்த ஊர். சிறுவயது முதலே விடுமுறை விட்டால் போதும், ஸ்கூல் பையைப் போட்டுவிட்டுக் காடுகளுக்கு ஓடிப்போய்விடுவேன். அங்கே நேரடியாகப் பறவைகளையும் மற்ற உயிரினங்களையும் பார்க்கும்அனுபவம் அசாதாரணமானது. ஏராளமான புதிய விஷயங்களை காடுகள் கற்றுக் கொடுத்தன. எனக்கு ஓவியங்கள் வரையப் பிடிக்கும். அதனால், நான் பார்த்த பறவைகள், மலைகள், செடி, கொடிகளை வரையத் தொடங்கினேன்.
எனக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சுத்தமாக ஆர்வம் இல்லை. உளவியல் படிக்கலாம் என நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு விஷயங்கள் எப்போதுமே பிடித்திருந்தன. ஒன்று ஓவியம், மற்றொன்று காடு. இவை இரண்டையும் இணைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தபோது, 'வனவிலங்கு ஓவியங்கள்' வரையலாம் என முடிவெடுத்தேன்.
இப்பத்தான் கேமரா இருக்கே? ஏன் இந்த அக்கா ஓவியங்கள் வரையறாங்கன்னு நீங்க யோசிக்கலாம். அதுக்கும் பதில் என்கிட்ட இருக்கு. கேமரா மூலம் எடுக்கப்படும் படங்களை உற்றுப் பாருங்கள். அதில் அவ்வளவு விவரங்கள் தெரியாது. இலைகளுக்குள் இருக்கும் கோடுகள், பறவைகளின் உடல் அமைப்புகள் ஆகியவை தட்டையாகத் தெரியும். ஓவியங்கள் தான் அவற்றுக்கு உயிர் கொடுக்கும். நீங்கள் பறவைகள், செடிகள் குறித்து படிக்கும் ஓவியப்புத்தகங்களை பார்த்தால், வித்தியாசத்தை உணர்வீர்கள்.
எனக்கு முன்னாடி, நிறைய பேர் இந்தத் துறையில இருந்தாங்க. ஆனா அவங்க எல்லாவிதமான ஓவியங்களையும் வரைவாங்க. சமீப காலமாகத்தான் வனவிலங்கு ஓவியங்கள் என்ற பிரிவு இந்தியாவுல சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு. நான் சரியான சமயத்துல இந்தத் துறைக்கு வந்தேன்னு நினைக்கறேன்.
உங்களுக்கும் இதுமாதிரி புதுசா செய்யணும்னு ஆசை இருந்தா, முதலில் செய்ய வேண்டியது பறவைகள் சரணாயலங்களுக்கு போயிட்டு வருவதுதான். காடுகளுக்குப் போங்க. அங்க இருக்கிற பல்வேறு அம்சங்களைக் கவனிக்க ஆரம்பிங்க. நீங்களும் என்னை மாதிரி ஓவியங்கள் வரைய ஆரம்பிக்கலாம். நல்ல ஓவியர்களுக்கு, கவனிக்கும் ஆற்றல் தேவை. அதேசமயம் நிறைய நேரம் காடுகளைச் சுத்திப்பார்த்து அதை அப்படியே ஓவியமாக மாற்றும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறிய அளவில் நீங்கள் இதைச் செய்யலாமா என்று ஆசைப்பட்டால், ஒரு யோசனை சொல்கிறேன். உங்கள் தாவரவியல், உயிரியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் செடிகளை, பறவைகளை, உயிரினங்களை நேரில் போய்ப் பாருங்கள். இலைகளை நேரடியாகத் தொட்டுப் பார்த்து, கவனித்து, அதை வரையுங்கள். வெளியில் செல்லும்போது கையில் ஒரு புத்தகம், பென்சில் எடுத்துச் செல்லுங்கள். நேரடியாகக் கற்றுக்கொள்ளும் அனுபவம் வேறுமாதிரியாக இருப்பது உறுதி.
வனவிலங்கு புகைப்படங்களைவிட, ஓவியத்துறை மிகவும் சவால் நிறைந்தது தான். ஆனால் ஆர்வமும், திறமையும் இருந்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. இந்த விடுமுறையில் இயற்கையோடு இணைய முதலில் முயற்சி செய்வோம்'.
இணையதளத்தில் பறவைகள், விலங்குகள் வரைய நிறைய வழிகாட்டிகள் இருக்கின்றனர். அதேபோல், புத்தகங்களும் இருக்கின்றன.