வடசொல் அறிவோம் - 'ந' வில் தொடங்குவதெல்லாம் வடசொல்லா?
வடசொல் அறிவோம் - 'ந' வில் தொடங்குவதெல்லாம் வடசொல்லா?
PUBLISHED ON : ஆக 06, 2018
'ந'கர வரிசை எழுத்துகள் பெரும்பாலும் சொல்லுக்கு முதலெழுத்தாகத் தோன்றும். சொல் நடுவில் அரிதாகத்தான் தோன்றும். சொல்லீற்றில் அவ்வெழுத்துகள் தோன்றுவதே இல்லை. 'வெரிந்' என்னும் சொல் விதிவிலக்கு. 'வெரிந்' என்றால் முதுகு. ஆனால், தமிழில் நகர வரிசை வடசொற்கள் அடையாளம் காண முடியாதவாறு இரண்டறக் கலந்துள்ளன.
'நட்சத்திரம்' என்பது வடசொல். அதற்கு மாற்றாக 'விண்மீன்' என்று புதுச்சொல் உருவாக்கிப் பயன்படுத்தினாலும் 'உடு' என்ற பழஞ்சொல்லும் இருக்கிறது. 'உடுக்களைக் காணுமாறு அண்ணாந்து பார்க்க வேண்டிய மலை' என்ற பொருளில்தான் 'உடுமலை' என்ற ஊர்ப்பெயர் வழங்கப்படுகிறது. 'நந்தவனம்' என்பது பூந்தோட்டத்தைக் குறிக்கும். வடமொழியில் 'நமஸ்காரம்,' தமிழில் 'வணக்கம்.' 'நவீனம்' என்பது 'புதுமை'யைக் குறிக்கும் வடசொல். வடமொழியில் 'வெண்ணெய்'யை 'நவநீதம்' என்கிறார்கள்.
பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடி பயிலும் இன்னொரு வடசொல் 'நிஜம்'. உண்மை, மெய் என்பவை நிஜத்திற்கான தமிழ்ச்சொற்கள். 'நிச்சயம்' என்பதையும் பேச்சில் பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றாக 'திண்ணம்' என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தலாம். 'நிச்சயமாகத் தெரியும்' என்று சொல்லாமல் 'திண்ணமாகத் தெரியும்' என்று சொல்லலாம்.
'நிதி,' 'நீதி,' 'நியாயம்' ஆகியவையும் வடசொற்களே. 'நிதி' என்பது 'செல்வம்.' 'நீதி' என்பது 'அறமுறைமை' ஆகும். 'நியாயம்' என்பதனை 'நெறிமுறை' எனலாம். தூக்கத்தை வடமொழியில் 'நித்திரை' என்கிறார்கள்.
'நிர்ப்பந்தம்' என்பற்கு 'வலுக்கட்டாயம்' எனலாம். 'நிந்தனை' என்பதற்குப் 'பழிப்பு, இகழ்ச்சி' ஆகியன உரிய தமிழ்ச்சொற்கள். 'நிந்தித்தல்' என்பதற்கு மாற்றாக 'இகழ்தல், பழித்தல்' என்பது தமிழ் வழக்காகும். 'நிபந்தனை' என்பதும் 'கட்டுப்பாட்டினைக்' குறிக்கும்.
'நரகம்' என்பது வடசொல்தான். அதற்குரிய தூய தமிழ்ச்சொல் 'அளறு' என்பதாகும். 'அளறு' என்னும் சொல் திருக்குறளில் வருகிறது. 'நிசி' என்பது 'இரவு.' 'நடுநிசி' என்பது 'நள்ளிரவு.' 'நாசி' என்பது 'மூக்கு.'
'நிரூபணம்' என்பது 'மெய்ப்பிப்பு.' “நிரூபித்துக் காட்டு” என்று கூறாமல் “மெய்ப்பித்துக் காட்டு” என்று கூறலாம். 'நடராஜன்' என்ற பெயரைத்தான் “ஆடலரசன்” என்று தமிழாக்கிக் கொள்கிறோம். 'நகல்,' 'நபர்' ஆகியவை தமிழில்லை. அவை அரபி மொழியிலிருந்து வந்தவை. 'நகல்' என்பதைப் 'படி' என்றும், 'நபர்' என்பதை 'ஆள்' என்றும் சொல்லலாம். “நகலெடுத்து வா” என்பதைப் “படியெடுத்து வா” என்று சொல்வது நற்றமிழாகும்.
ந வரிசையில் தொடங்கும் தூய தமிழ்ச்சொற்கள் சில.
நட்பு, நண்பன், நலம், நடுநிலைமை, நாள், நாற்றம், நினைவு, நீட்சி, நீளம், நிறம், நிழல், நேற்று, நூல் ,நெற்றி, நெகிழ்ச்சி, நொடி, நோய், நோற்றான் போன்றவை.
- மகுடேசுவரன்
