
அன்புள்ள தங்கைக்கு, உன்னுடைய அக்கா எழுதிக்கொள்வது,
இங்கே நான் நலம். அங்கே நீ நலமா?
எப்போதும் தொலைபேசியில் பேசுகிற அக்கா, திடீரென்று கடிதம் எழுதுகிறாளே என்று யோசிக்கிறாயா? காரணம் இருக்கிறது.
இன்றைக்குத்தான் மு.வ. எழுதிய நூலொன்றை வாசித்தேன். அதில் அன்னைக்கு, தங்கைக்கு, தம்பிக்கு, நண்பருக்கு என்று பலருக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறார்.
அடடா, அக்கா அடுத்தவருடைய கடிதங்களை வாசிக்கிறாரே என்று நீ அஞ்சவேண்டியதில்லை. உண்மையில் அவற்றில் தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லை. எல்லாரும் வாசிப்பதற்காகத்தான் அந்தக் கடிதங்களை எழுதியிருக்கிறார் மு.வ.
அதாவது, 'நண்பருக்கு' என்று தலைப்பிட்டு அவர் எழுதியிருந்தாலும், அது அந்த நண்பருக்கு மட்டும் எழுதிய கடிதமல்ல. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் மு.வ. விரும்பியிருக்கிறார்.
அப்படியானால், அவற்றைக் கட்டுரையாகவே எழுதிவிடலாமே. ஏன் கடிதமாக எழுதவேண்டும்?
பத்திரிகைகளில் வரும் எல்லா விளம்பரங்களும் ஒரேமாதிரியாகவா இருக்கின்றன? சில விளம்பரங்கள் புதுமையான புகைப்படங்கள், வாசகங்களுடன் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. அவற்றைத்தானே நாம் முதலில் பார்க்கிறோம்?
அதுபோல, விஷயங்களைச் சொல்லவரும் எல்லாக் கட்டுரைகளும் ஒரேமாதிரி இருந்தால், மக்கள் விரும்பி வாசிக்கமாட்டார்கள். இப்படிக் கடிதவடிவில் ஒரு கட்டுரையை எழுதினால், ஆர்வத்துடன் வாசிப்பார்கள்.
ஆகவே, பல எழுத்தாளர்கள் கற்பனைக் கதாபாத்திரங்களுக்குக் கடிதங்களை எழுதிப் பிரசுரித்திருக்கிறார்கள். அவை தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளிவந்திருக்கின்றன. பலர் அவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
இத்துடன், பெரிய எழுத்தாளர்கள், தலைவர்கள் தங்களுடைய நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களும் தொகுத்து பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின்மூலம் அவர்களுடைய ஆளுமையை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
எடுத்துக்காட்டாக, காந்தி அவருடைய சொந்தக் கையெழுத்தில் எழுதிய பல கடிதங்கள் இப்போதும் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து, வெவ்வேறு காலகட்டங்களில் காந்தியின் மனச்சிந்தனைகள் எப்படி இருந்துவந்திருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
இன்றைக்குத் தனிப்பட்ட கடிதங்கள் அதிகம் எழுதப்படுவதில்லை. அதேசமயம், 'கடித இலக்கியம்' எனப்படும் உத்தி பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக, 'திறந்த கடிதம்' என்ற பெயரில் ஒரு தலைவருக்கோ பிரபலத்துக்கோ எழுதும் உத்தியைப் பலரும் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, உங்கள் ஊரில் ஒரு முக்கியமான பகுதியில் குப்பைகள் குவிந்திருக்கின்றன. நகராட்சி ஊழியர்கள் அதைச் சரியாகச் சுத்தப்படுத்துவதில்லை என்றால், நகரத்தந்தைக்கு நீ ஒரு திறந்த கடிதம் எழுதலாம். அதை அவருக்கு அனுப்பாமல் ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு அனுப்பிவைக்கலாம்; அதுதான் திறந்த கடிதமாயிற்றே, யார் வேண்டுமானாலும் பிரித்துப் படிக்கலாமல்லவா?
இப்படி, பலவிதமான கடித இலக்கியங்களை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்; படைத்துக்கொண்டிருக்கிறோம். தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு புதுமையான உத்தியாக இது அமைகிறது.
அதனால்தான், நானும் உனக்குக் கடிதம் எழுதத் தொடங்கியிருக்கிறேன். நீயும் எனக்குப் பதில் கடிதம் எழுது. இதன்மூலம் நாம் அன்பையும் அறிவையும் பரிமாறிக் கொள்வோம்.
என்றும் அன்புடன்,
அக்கா
- நாகா

